* ஜி. விஜயகுமார், கோவை: 'கொரோனா'விற்கு மருந்து கூட கண்டுபிடிக்க முடியவில்லை... விஞ்ஞானிகள், விண்வெளியில் எதை கண்டுபிடித்து என்ன பலன்?
ஆயுர்வேதத்தில் மருந்துகள் உள்ளனவே... நம் முன்னோர் ஏற்கனவே கண்டுபிடித்தவை அவை. விண்வெளியில் புதுசு புதுசா கண்டுபிடிப்பதும் ஒரு வகையில் நல்லது தானே!
கோ. குப்புசுவாமி, சங்கராபுரம்: 'கேப்டன்' விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?
'கொரோனா'வுக்கு பயந்து, முடி திருத்துவோர் எவரையும் வீட்டிற்கு அழைக்காமல், தம் மனைவி, பிரேமலதா மூலமே, 'ஷேவ்' செய்வது முதல், முடி வெட்டுவது, மீசையை, 'டிரிம்' செய்வது வரை செய்து கொண்டிருக்கிறார்!
பி. சந்திரசேகரன், மதுரை: பெண்களிடம், குடிப்பழக்கம் அதிகரித்து வருவது ஏன்?
ஆண்களுக்கு, 'அதில்' என்ன இன்பம் கிடைக்கிறது என்பதை, 'டெஸ்ட்' செய்து பார்த்திருப்பார்களாக்கும்! அது பிடித்துப் போயிருக்கும்; அதனால் தான்!
* டி. பசுபதி, ஊஞ்சவேலம்பட்டி, கோவை: 'வெப் சீரியல்'களுக்கும் தணிக்கை தேவை என, குரல் எழுப்புவது வலுத்துள்ளதே...
கண்டிப்பாக தேவை தான்! பெண்களின் இயல்பான, சமாதான மனநிலைகளை இப்போது வெளியாகும், 'சீரியல்'கள் தலைகீழாக்கி வருகின்றன. இதுபோக, ஹிந்து மதத்தினரை கீழ்த்தரமாக சித்தரிக்கும், 'சீரியல்'களும் தயாராகின்றன; இதன் தயாரிப்பாளர்கள், வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்! எனவே, எல்லா, 'சீரியல்'களுக்கும் தணிக்கை தேவை தான்!
* ஏ. கவுசியா, நெய்வேலி: முதுமையை முன்னிட்டு, முன்னதாகச் செய்து கொள்ளும் பாதுகாப்பு எது?
வங்கி கணக்கில் தேவையான பணம், 'கிரெடிட்'டில் இருப்பது தான் பாதுகாப்பு... அது, மகனோ, அன்பு மருமகளோ இருந்தாலும் தேவை!
ஆர். முத்துக்கிருஷ்ணன், ஸ்ரீவில்லிப்புத்துார்: வயதாகிக் கொண்டே போவதால், உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வு தான் என்ன?
'கொரோனா' தான் தீர்வு சொல்லியுள்ளதே... நம் பாட்டிமார்களின் சாப்பாட்டு பழக்கம், இயற்கை மூலிகைகள் மூலம் மருந்து... இங்கிலீஷ் மருத்துவத்திற்கு பதில், நம் நாட்டு வைத்தியமான ஆயுர்வேத மருத்துவத்தால் பலர், ஐந்து நாளில் வீடு திரும்பியுள்ளனரே... இதை பின்பற்றுங்களேன்!
குணவதி, சென்னை: சென்னையில், 'கொரோனா' பாதிப்பு அதிகமிருந்தும், மக்கள், முக கவசம் இல்லாமல் நடமாடுகின்றனரே... விழிப்புணர்வு எப்போது தான் வரும்?
அவர்களையும், 'கொரோனா' பிடித்துக் கொள்ளும் போது தான்!