வட மாநிலத்தில், 1927ல், வள்ளிமலை சுவாமிகள், யாத்திரை செய்த நேரம், அது. அயோத்தி கோவிலில், ஸ்ரீ ராமரை தரிசித்து, திருப்புகழ் பாடி வழிபட்ட சுவாமிகள், சற்று துாரத்தில் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நாகதாளி எனப்படும், சப்பாத்தி கள்ளி செடி புதர்களுக்குள், ஆடையேதும் இல்லாமல், மகான் ஒருவர் படுத்திருந்ததை பார்த்தார், சுவாமிகள்.
உடனே, காட்டை விட்டு நாட்டிற்குள் திரும்பிய சுவாமிகள், லட்டு, ஜிலேபி முதலான இனிப்பு வகைகளை வாங்கி வந்து, மகானுக்கு ஊட்டினார்; அதன்பின், புதரில் இருந்ததால், மகானின் உடம்பில் குத்தியிருந்த சப்பாத்தி கள்ளி முட்களை, பொறுமையாக ஒவ்வொன்றாக எடுத்த சுவாமிகள், அவரை வணங்கி, ஆசி பெற்று புறப்பட்டார்.
சற்று நேரத்தில், அன்ன ஆகாரமின்றி, காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்து, திருப்புகழை பலமாகப் பாடிக் கொண்டிருந்தார். சுவாமிகள் அமர்ந்திருந்த மரத்தின் மேல், ஏராளமான குரங்குகள் இருந்தன.
நண்பகல் நேரம். சுவாமிகளுக்கு பசி உண்டானது; நடு காட்டில், உணவுக்கு எங்கே போவது...
'வஞ்சங் கொண்டுந் திடராவண' எனும் திருப்புகழ் பாடலில் உள்ள, ராவணனுக்கு எதிராக, வானரப்பட்டாளம் செய்த நிகழ்வுகளை, பாடினார், சுவாமிகள்.
அதே விநாடியில், மரத்தின் மேல் இருந்த குரங்குகள், தொப்பென்று குதித்து, ஓடின. சற்று துாரத்தில், காட்டிற்குள் பஞ்சாபியர்கள் சிலர், சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருந்தனர். அங்கு போன குரங்குகள், அவர்களிடம் இருந்த சப்பாத்திகளை எடுத்து ஓடி வந்தன.
கைகளில் குச்சியோடு குரங்குகளை துரத்தியபடி ஓடி வந்தனர், பஞ்சாபியர்கள்.
சப்பாத்தியோடு வந்த குரங்குகள், மரத்தின் அடியில் அமர்ந்து, திருப்புகழ் பாடிக் கொண்டிருந்த சுவாமிகளின் முன் போட்டன.
பின்னால் துரத்தி வந்த பஞ்சாபியர்கள், குரங்குகளின் செயலையும், சுவாமிகளையும் பார்த்தனர். உண்மை விளங்கியது.
'ஆகா... உத்தமரான, இந்த சாதுவுக்காக தான், குரங்குகள் சப்பாத்தியை எடுத்து ஓடி வந்ததா...' என்று வியந்து, சுவாமிகளை வணங்கி திரும்பினர்.
அன்று, ஸ்ரீராம நவமி.
ஸ்ரீராமர் சும்மா விடுவாரா...
'அயோத்தியில், என் சன்னிதி முன் நின்று, திருப்புகழ் பாடிய இந்த துாய மனம் கொண்ட பக்தனை, ராம நவமியன்று, நான் பசித்திருக்க விடுவேனா... பட்டினியாய் இருக்கலாமா அந்த பக்தன்...' என்று, ஸ்ரீராமரே அருள் புரிந்ததைப் போன்ற நிகழ்வு இது.
தெய்வம் ஒருபோதும் கை விடுவதில்லை என்பதை விளக்கும் இந்நிகழ்ச்சி, வள்ளிமலை சுவாமிகளின் வாழ்க்கையில், நம் காலத்தில் நடந்தது. தைரியத்தை விட வேண்டாம்.
ஒரு பெரிய உயரமான பாதையில் கஷ்டப்பட்டு மேலே ஏறிவிட்டோம்; இனி சுலபமாக இறங்கி விடலாம். சற்று பொறுமையாக, அமைதியாக,கோப தாபங்களை விட்டு செயல் படுவோம்; பழையபடி உற்சாகமாக வலம் வருவோம்.
பி. என். பரசுராமன்