சம்பந்தியம்மா இறந்த வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, தன் மருமகளிடம் அதாவது, என் மனைவியிடம், 'அம்மாகிட்ட இருந்து எழுதி வாங்கிட்டியா'ன்னு கேட்டால், யார் தான் அதிர்ந்து போக மாட்டார்கள்.
'என்ன... இந்த அம்மா, இப்படி பட்டவர்த்தனமாக கேட்கிறாங்களே...' என்று, நினைத்த அடுத்த நிமிடம், 'யாரும் தப்பா நினைச்சுக்காதீங்க... என் சம்பந்தி, பிரமாதமா ஆவாக்காய் ஊறுகாய் போடுவாங்க... அவுங்க கை பக்குவமே தனி. அதன் தயாரிப்பு முறையை எழுதி, மகளிடம் தருவதாக சொல்லியிருந்தார். அதான் கேட்டேன்...' என்ற பிறகே, அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர்.
இதே போல, சின்ன வயதில் இறந்து போன தன் உறவுக்கார பெண் வீட்டிற்கு, துக்கம் கேட்க போயிருந்தார், என் அம்மா. அன்று தான் பூவையும், பொட்டையும் எடுக்கும் சடங்கை நடத்திக் கொண்டு இருந்தனர்.
'என்னடியிது... அநியாயமாய் இருக்கு. இவகிட்ட வாழக்கொடுத்து வைக்காம அவன் (கணவன்) நடுவுல வந்தான்; நடுவுலயே போய்ட்டான்; இவ என்ன பாவம் பண்ணினா; இப்படி கொடுமை படுத்துறீங்க... ஆரம்பத்தில் இருந்து வச்ச பூவையும், பொட்டையும் ஏன் எடுக்கணும்றீங்க...' என்று சத்தம் போட்டு, அந்த சடங்கையே நிறுத்தினார்.
இதை எல்லாம் கேட்ட ஜெயலலிதா, ரொம்பவே என் மீது பிரியம் வைத்திருந்தார். நான் பல படங்களுக்கு வசனம் எழுதி, இயக்கியிருந்தாலும், யாரிடமும் எந்த வாய்ப்பும் கேட்டதில்லை.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின், 'இன்னுமா, கோபுவிற்கு கலைமாமணி பட்டம் கொடுக்கவில்லை...' என்று கேட்டு, அந்த ஆண்டே, எனக்கு வழங்கினார்.
வெண்ணிற ஆடை படம், அவருக்கு மட்டும், திருப்புமுனையை தரவில்லை; நிர்மலா மற்றும் மூர்த்தி ஆகியோருக்கும் புகழை தந்தது. அதன் காரணமாக, இன்றளவும் அவர்கள், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என்றே அழைக்கப்படுகின்றனர்.
இந்த படத்திற்கு, முதலில் நிர்மலா வேடத்தில், ஹேமமாலினி தான் தேர்வு செய்யப்பட்டார். அவரை வைத்து வைகை அணையில், இரண்டு காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அவர், ஒல்லியாக, கன்னம் ஒட்டிப்போய் இருப்பதாக, ஸ்ரீதருக்கு மனதில் பட்டது. அதை, அப்படத்தின் ஒளிப்பதிவாளர், பாலகிருஷ்ணனும் ஆமோதித்தார்.
என்னை கூப்பிட்ட ஸ்ரீதர், 'கோபு... அந்தம்மாவை படத்திலிருந்து, 'கேன்சல்' செய்து அனுப்பிடு...' என்று, சொல்லி விட்டார்.
'ஒப்பந்தம் பண்றது நீ. 'கேன்சல்' பண்றது நானா...' என, என் கோபத்தை கண்டுகொள்ள யாரும் இல்லை.
அப்புறம், ஹேமாவின் அம்மா, ஜெயா சக்ரவர்த்தியிடம், 'ஹேமா ஒல்லியாக இருக்கிறார். அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம்; இந்த படத்தில் வேண்டாம்...' என்று, தயங்கி தயங்கி சொன்னேன்.
'ஸ்ரீதர் படமாச்சே என்று, நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, பரவாயில்லை...' என்று சொல்லி, கிளம்பி விட்டனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், மும்பை சென்று, ஹிந்திப் படங்களில் நடித்து, இந்தியாவின் கனவுக்கன்னியாக ஜொலித்தார், ஹேமா. அதன்பின், ஒரு ஹிந்தி படம் பண்ணும் போது, 'ஹேமா இருந்தால் நன்றாக இருக்கும்; போய் பேசிப்பார், கோபு...' என்று, அப்போதும் என்னை தான் அனுப்பினார், ஸ்ரீதர்.
பழைய விஷயங்களை மனதில் வைத்து, எப்படியெல்லாம் என் மீது எரிந்து விழப் போகின்றனரோ என்று நினைத்துக் கொண்டே தான் போனேன். ஆனால், எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாமல், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
திரும்பும்போது, 'கோபு சார்... இப்ப என் மகள், ஒல்லியா இல்லியே...' என்றார், ஹேமாவின் தாயார், ஜெயா.
அது, கிண்டலா, இல்லையா என்பது, அவருக்கு தான் தெரியும்.
'காதலிக்க நேரமில்லை போலவே, ஒரு படம் வேண்டும்...' என்று சொல்லியபடியே, வந்தார், கோவை செழியன். அவருக்காக உருவான படம் தான், ஊட்டி வரை உறவு; காமெடி கலந்த, 'சஸ்பென்ஸ்' படம். டாக்டர் திருப்பதியாக வந்து கலக்கியெடுப்பார், நாகேஷ். அவரை ஒரு காட்சியில், ஆணியில் தொங்கவிட்டு விடுவார், சிவாஜி. ரசிகர்களின் கை தட்டலில் அரங்கமே அதிர்ந்தது.
இந்த படத்திலும் பாலையாவின் வேடம், பிரமாதமாக பேசப்பட்டது.
'நான் தான் உங்கள் மகள்...' என்று சொல்லிக் கொண்டு வந்து விடுவார், கே.ஆர்.விஜயா. அவரை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், பாலையா படும் அவஸ்தை, அவருக்கே உரிய தனி ரகம்.
ஒரு காட்சியில், மாடிப்படியில் ஒளிந்து கொண்டு இருப்பார்.
'இங்க என்ன செய்றீங்க...' என்று கேட்டதும், 'அது வந்து, ஒண்ணுமில்ல... வீடு கட்டும்போது, இங்க வந்தது. இப்ப எப்படி இருக்குன்னு பார்க்க வந்தேன்...' என்பார்.
தியேட்டரே சிரிப்பில் கலகலத்து போகும்.
இந்தப் படத்தின் பெயரை உண்மையில், ஏற்காடு வரை உறவு என்று தான் வைத்திருக்க வேண்டும். அதற்கு ஒரு காரணம் உண்டு. அது என்ன காரணம்?
மூர்த்தி தேர்வானது எப்படி?
வெண்ணிற ஆடை படத்திற்கு, நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டு இருக்கும் போது, மூர்த்தி வந்தார். அவரைப் பார்த்த, ஸ்ரீதர், 'நான் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிக் கொண்டு இருக்கிறேன். நீ லட்சணமா, அழகா இருக்கே. அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே போய்ட்டு வா...' என்று சொல்லி விட்டார்.
முகத்தை தொங்கவிட்டு கிளம்பிய, மூர்த்தி, திடீரென, 'யு டர்ன்' அடித்து, 'அழகா இருக்கிறது ஒரு தப்புங்களா...' என்று முகத்தை அஷ்ட கோணலில் வைத்து, கேட்டார்.
அவர் கேட்ட முறையும், 'பாடி லாங்வேஜும்' பிடித்துப் போய் விட, ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின், இன்று வரை, வெண்ணிற ஆடை மூர்த்தியாக வலம் வருகிறார்.
— தொடரும்
எல். முருகராஜ்