அப்பா...
ஜூன் 21 - தந்தையர் தினம்
உன் ஆள்காட்டி விரல்
பிடித்து நடந்த காலந்தொட்டு
என் நடையை மட்டுமல்ல
நடத்தையையும் ஒழுங்குபடுத்திய
வகுப்பறை காணாத ஆசிரியர் நீ!
உயரங்களை விட உயரமாக
நான் உயர வேண்டும் என்பதற்காக
தோள்களையே ஏணியாக்கிய
உழைப்பின் உருவம் நீ!
எண்ணும், எழுத்தும்
என் கண்களாவதற்காக
உன்னையே உருக்கிக் கொண்ட
மெழுகுவர்த்தி நீ!
கஷ்டங்கள் சூழ்ந்து விடாமலிருக்க
உழைப்பு நேரத்தை நீட்டிக் கொண்ட
இரவில்லா பகல் நீ!
குடும்ப விருட்சத்தின்
கிளைகள் தோறும்
வெற்றிகளை விளைத்தெடுக்க
உன்னையே உரமாக்கிக் கொண்ட
விசித்திர பிறவி நீ!
ஒளியை இழந்த பிறகு தான்
கண்களுக்கு
வெளிச்சத்தின் அருமை புரியும்...
என்பதை உணர்த்திய
அமரத்துவம் நீ!
அப்பா...
உன் சுவடுகளெல்லாம்
சுடர்களாக ஒளிர்வதால்
பாதை மாறாமல் பயணப்படுகிறேன்!
கவிதாசன், கோவை