தந்தையுமானவள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தந்தையுமானவள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2020
00:00

'நம்ம அம்மாவுக்கா இப்டி... ஐயோ... நா என்னென்னமோ நெனச்சேனே... ஆனா, இப்டீன்னு நா நெனச்சி கூட பாக்கலியே... இது நடக்கக் கூடாது. நா நடக்க விட மாட்டேன். படுபாவீ... அந்தாள, வெட்டிப் போட்டா என்ன...'
வீட்டின் பின்கட்டில், மா மரத்தினடியில் அமர்ந்திருந்த, பிரவீண், மனதுக்குள்ளேயே புழுங்கினான்.
''பிரவீண்...''
அவனுக்குப் பின்னாலிருந்து குரல் கேட்டது.
அம்மாவை பார்க்காமல், ''ம்...'' என, குரல் கொடுத்தான்.

''சாப்பிட வா...''
''பசிக்கல.''
''சரி... எல்லாம், 'ஹாட் பேக்ல' எடுத்து வெச்சிருக்கேன்... பசிக்கறச்சே சாப்பிடு. நா கிளம்பறேன்... எனக்கு நேரமாகுது.''
''ம்...''
அம்மா போய்விட்டாள் என்பதை, இரு சக்கர வாகனத்தின் ஓசை தேய்ந்து மறைந்ததிலிருந்து தெரிந்தது. உள்ளே வந்து, அம்மா எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை திறந்து பார்த்தான்.
எல்லாம் அவனுக்குப் பிடித்த உணவு வகைகள்.
'ஹூம்... இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்...' மனதுக்குள் உறுதி செய்து கொண்டான்.
அவனுடைய அலைபேசி அலறியது. 'ஆன்' செய்தான்.
அந்த பக்கத்திலிருந்து யார் என்ன கூறினரோ, ''நா கிளம்பிட்டேன்... இன்னும், 10 நிமிஷத்தில அங்க இருப்பேன்,'' என்றான்.
பிரவீண் அங்கே போய் சேரும்போது, அவனை அலைபேசியில் அழைத்தவன், தயாராக இருந்தான்.
''வந்துட்டாங்களா கரண்...'' என்றான், பிரவீண்.
''ம்... வா போலாம்,'' என்ற கரண், அவனை, ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றான்.
அங்கே இருந்த ஒரு பெண், பிரவீணை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, அமரச் சொன்னாள்.
ஒரு மணி நேரத்திற்கு பின், பிரவீணும், கரணும், அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.
''ரொம்ப தேங்க்ஸ்டா, கரண்... நா கிளம்பறேன்,'' என்றான், பிரவீண்.
''அவங்க சொன்னதெல்லாம் கேட்டல்ல... இனிமே, நீதான் கவனமா இருக்கணும்,'' என்றான், கரண்.
''கண்டிப்பாடா.''
''மறந்துடாத... நாளைக்கு காலைல, 4:00 மணிக்கு தயாராய் இரு... நா வந்து, 'பிக் - அப்' பண்ணிக்கறேன்... 5:00 மணிலேந்து, 'கோச்சிங் க்ளாஸ்' ஆரம்பமாகும்.''
''தயாராய் இருப்பேண்டா...'' என, நண்பனுக்கு நன்றி சொல்லி, வீடு வந்து சேர்ந்தான், பிரவீண்.

குளித்து வந்ததும், 'டிவி'யை, 'ஆன்' செய்தான். காலையில், அம்மா, 'ஹாட் பேக்'கில் வைத்துச் சென்றதை எடுத்து தட்டில் போட்டு, சோபாவில் அமர்ந்து மெதுவாக சாப்பிடலானான்.
அலைபேசி சிணுங்கியது. அம்மா தான்.
''சாப்ட்டியா?'' என்றாள்.
''இப்பதான் சாப்பிடுறேன்.''
''சரி... என் பேர்ல ஒரு, 'கூரியர்' வரும், வாங்கி வெச்சுடு.''
''ம்...''
''அப்றம்... நா வர, 'லேட்' ஆகும்... இரவு சாப்பாடு...'' என, இழுத்தாள்.
''நா பாத்துக்கறேன்.''
''ஒனக்கு நீ பாத்துப்ப... எனக்கு?''
''ஒனக்கும் தான்.''
''சரி... பை...'' என்றாள்.
அவன் சாப்பிட்டு முடித்து, தட்டையும், மற்ற பாத்திரங்களையும் கழுவி கவிழ்த்து, தன் அறைக்குள் சென்று முடங்கினான்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும். வாசலில் அழைப்பு மணி. கதவைத் திறந்தான்.
''இங்க ஷைலஜாங்கறது...''
''எங்கம்மா தான்.''
''அவங்களுக்கு ஒரு, 'பார்சல்' வந்திருக்கு,'' என்றபடியே நீட்டினான்.
அந்த, 'பார்சலை' வாங்கி உள்ளே வைத்து, மீண்டும் தன் அறைக்குள் முடங்கினான்.
மாலையானதும், 'ப்ரிஜ்'ஜிலிருந்து இரண்டு முட்டைகளை எடுத்து, 'ஆம்லெட்' போட்டு சாப்பிட்டு, டீ போட்டு குடித்தான்.
அலைபேசியில் தன் நண்பன் கரணை அழைத்து, ''எனக்கும், அம்மாவுக்கும் இரவு சாப்பாடு வேண்டும்,'' என்றான்.
''இதிலென்னடா இருக்கு... எங்கம்மா தயார் பண்ணுவாங்க... நீ வந்து வாங்கிட்டு போ.''
அரை மணி நேரத்திற்கு பிறகு, கரணின் அம்மா செய்து கொடுத்திருந்த சாப்பாட்டை எடுத்து வந்து, அம்மா செய்தது போலவே, 'ஹாட் பேக்'கில் வைத்து மூடினான். அம்மாவுக்காக செய்த, 'ஆம்லெட்'டையும், அதில் வைத்தான்.
மறுநாள் காலை, 4:00 மணிக்கு, தன் நண்பனிடம் வாக்கு கொடுத்தது போலவே, சீக்கிரம் எழுந்து தயாரானான்.
இவன் எங்கோ கிளம்புவதைப் பார்த்து, அம்மா எழுந்து வந்தாள்.
''என்ன இது, புதுசா?''
''ம்... ஆமா...''
''எப்ப வருவ?''
''இரவு, 7:30க்கு.''
''சரி... பத்திரம்,'' என, அவனை அனுப்பி, கதவைச் சாத்தி உள்ளே போனாள்.
படுக்கச் சொல்லி உடல் கெஞ்ச, வேலை அவளை இழுத்தது.
முசுமுசுவென்று வந்த அழுகையை வலுக்கட்டாயமாக நிறுத்தி, கண்ணை அழுந்தத் துடைத்து, 'இல்ல... இது, கண்டிப்பா நடக்கும்... நா நடத்திக் காட்டுவேன்...' என்று தனக்குத் தானே உறுதி கூறி, வேலைகளை கவனிக்கச் சென்றாள்.
சொன்னது போலவே, இரவு, 7:30 மணிக்கு வீடு திரும்பினான்.
அவள் ஒரு பக்கம் மும்முரமாக சமைத்துக் கொண்டே, மறுபக்கம் அவளுடைய மடிக்கணினியில், அலுவலகப் பணியை கவனித்தபடி இருந்தாள்; 'ஹெட் போனில்' யாருடனோ காரசாரமாக ஆங்கிலத்தில் வாதாடிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்க்க, ஒரு பக்கம் கோபமாகவும், மறுபக்கம் பாவமாகவும் இருந்தது, பிரவீணுக்கு.
'இது, அத்தனையும் அம்மா எனக்காகத்தானே செய்யறா... அம்மாவோட இந்த கஷ்டத்துக்கெல்லாம் அவன் தான் காரணம்... அவன வெட்டிப் போடணும்...' என, நினைத்தபடியே, சுவரில் ஓங்கிக் குத்தினான்.
அவன் கையிலிருந்து ரத்தம் வர, எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தவள் பேச்சை பாதியிலேயே நிறுத்தி, ஓடி வந்து, கையை பிடித்து காயத்தை கவனித்தாள்.
''விடு...'' என, உதறினான்.
''மரியாதையா காட்டு,'' என்றாள், அம்மா.
''ம்ச்...'' அவன் அலுத்துக் கொண்டான்.
''இப்ப என்ன கோபம் உனக்கு... நாந்தான் உன்ன ஒண்ணும் சொல்லலியே...''
''கைய விடு,'' என, அம்மாவை வலுக்கட்டாயமாக நகர்த்தி, குளிக்கப் போனான்.
''சரி... நான் எதுவும் கேக்கல... மருந்தாவது போடறேன்... ப்ளீஸ், கையக் காட்டு,'' என, அழுது கொண்டே கூறினாள்.
ஒரு நிமிடம் அம்மாவை பார்த்தான்.
'எப்படி இருந்தவள், இன்று இப்படி ஓடாய் தேய்ந்து...' என நினைத்தவன், அம்மாவிடம் கையைக் காட்டினான்.
அவசரமாக சென்று, அவனுடைய கை காயத்துக்கு மருந்து போட்டாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
''அழாத... கண்ணத் தொட.''
தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஆனாலும், கண்ணீர் வழிந்தது.
அம்மாவின் கண்ணீரைத் துடைத்தவன், ''நீ, அழறத என்னால பாக்க முடியல... நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்... ப்ளீஸ் அழாத,'' என்றான்.
''நெஜமாவா?''
''ம்...''
''தேங்க்யூ, வெரி மச்,'' என்று கூறி, தன் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டாள்.
அவன் கண்களில் வரத் தொடங்கியிருந்த கண்ணீரை, அம்மா அறியாமல் துடைத்துக் கொண்டே குளியலறைக்குள் புகுந்தான்.
அதன் பின் இருவரும், ஒருவர் அறியாமல் மற்றவர், கண்ணீரைத் துடைத்தபடி, தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
ஒரு நாள் -
அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லி, தன் அலைபேசியை பார்ப்பதும், மடிக்கணினியைப் பார்ப்பதுமாக இருந்தாள், அம்மா. ஆனால், அமைதியாக இருந்தான், பிரவீண்.
அம்மாவின் அலைபேசியில், குறுஞ்செய்தி வந்திருப்பதாக சத்தம் வந்தது. அவள் எதிர்பார்த்த செய்தியைத் தாங்கியிருந்த அலைபேசியை, தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
அமைதியாய் சோபாவில் அமர்ந்திருந்த பிரவீணை அணைத்து, உச்சியில் முத்தமிட்டாள்.
''தேங்க்யூ சோ மச்... தேங்க்யூ,'' என்றாள்.
அவனுடைய நண்பன், கரண் அவசர அவசரமாக, கதவைத் திறந்து, வீட்டுக்குள் வந்தான்.
''கன்கிராஸ்டா...'' என்று கூறி, பிரவீணை அணைத்து, மகிழ்ச்சியைக் காட்டினான்.
''தேங்க்ஸ்டா மச்சி. 'ரெடி'யா,'' என்றான்.
''ம்...'' என்றான், கரண்.
அம்மாவின் கையைப் பிடித்து, ''சரி... கிளம்பு... எங்கூட வா,'' என்றான், பிரவீண்.
''எங்க?''
''வா சொல்றேன்,'' என்று அழைத்தான்.
''ப்ளீஸ்... வாங்க,'' என்றான், கரண்.
அப்போது, அவன் வீட்டு வாசல் கதவை திறந்து, ஒரு நெடியவன் உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும், ஷைலஜா முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
பிரவீணும், கரணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''பிரவீண்... எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு, மை சன்,'' என்றான், அந்த நெடியவன்.
''சாரி, மிஸ்டர் தர்மராஜ்... நா உங்க பையன் இல்ல, இதோ நிக்கறாங்களே ஷைலஜா, இவங்க பையன்.''
''என்னடா உளர்ற?''
''மரியாத, மிஸ்டர் தர்மா... நல்லா ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் பிரவீண், சன் ஆப் ஷைலஜா. ஷைலஜா மட்டும் தான்.''
''ஹ.... நா இல்லாம இவ தனியா உன்ன பெத்துட்டாளா,'' என்று, அந்த நெடியவன் ஏளனமாய் கேட்டான்.
''அதுக்கு மட்டும்தான் உங்க உதவி அவங்களுக்கு தேவைப்பட்டிருக்கு,'' என்று, தன் பற்களைக் கடித்து, வார்த்தைகளைத் துப்பினான்.
''டேய்...'' என்று கர்ஜித்தான்.
ஷைலஜா கல் போல நின்றிருந்தாலும், அவளுடைய உடல் நடுங்கியது.
அம்மாவை ஆதரவாய் பிடித்து, சோபாவில் அமர வைத்த, பிரவீண், ''ஜஸ்ட் ரிலாக்ஸ்,'' என்றான்.
தன் கோபத்தை விட்டு, ''டேய் பிரவீண்... அப்பாகிட்ட வாடா,'' என, மகனை அழைத்தான், தர்மா.
''என்னது அப்பாவா... அப்பாவா, என்ன பண்ணின... என்ன ஸ்கூல்ல சேத்து, படிக்க வெச்சதுலேந்து, வளத்தது எல்லாம், எங்கம்மா சம்பாதிச்ச பணத்திலதானே... எங்கம்மா, உனக்கும் சேத்துதானே சம்பாதிச்சி போட்டாங்க... எல்லாத்தையும் எடுத்து வீணா செலவு பண்ணின... போய்த் தொலையுதுன்னு விட்டாங்க...
''நீ குடிச்சி சீரழிஞ்சது போறாதுன்னு, என்னையும் தப்பு வழியில திருப்பின... குடிச்சு, 'ட்ரக்' அடிக்க வெச்சி, என்ன கெடுத்த... உன்னால கெட்டுப் போய், பள்ளியில, 'மிஸ் பிஹேவ்' பண்ணேன்... பள்ளியில் இருந்து என்னை, 'டிஸ்மிஸ்' பண்ணாங்க...
''அதுக்காக, நான், தற்கொலைக்கு முயற்சி பண்ணப்ப, என்ன காப்பாத்த, உன்கிட்ட எவ்ளோ கெஞ்சினாங்க... உதவிக்கு வந்தியா நீ... சாகட்டும்ன்னு சொன்னேல்ல... இப்ப மட்டும் என்ன, அப்பான்னு வந்து உரிமை கொண்டாடுற... இவங்க என் உயிரக் காப்பாத்தி, திரும்பவும் பள்ளியில் சேத்து படிக்க வெச்சாங்க... என் மனச சரியாக்க பாடுபட்டாங்க...
''இன்னிக்கு, நான், 'யுனிவர்சிட்டி'ல, முதல், 'ரேங்க்' வாங்கி, 'கோல்ட் மெடலிஸ்ட்'டா நிக்கறதுக்கும், 'ஸ்விம்மிங்'ல, 'ஸ்டேட் சேம்பியனா' ஆனதற்கும், இவங்க தான் காரணம். இப்ப நான் ஜெயிச்சதும், என்னை சொந்தம் கொண்டாட வந்திருக்கியே... உனக்கு வெக்கமாயில்ல.''
தர்மாவுக்கு, கோபம் வந்தது.
''டேய்... என்னடா பெரிசா என்னமோ ஊர் உலகத்தில எந்தப் பொம்பளயும் செய்யாதத, இவ செஞ்சா மாதிரி அலடிக்கற... இவ என்ன படிக்காதவளா... கல்லொடைக்கற வேலைக்கா போனா... எல்லாம், 'ஐடி' கம்பெனி வேலை தானே... ஜம்முன்னு, 'ஏசி'ல உக்காந்து, நாற்காலியை தேச்சிட்டு சம்பளம் வாங்கினா... அதப் போய் பெரிசா சொல்ற?''
''யோவ்... மனுஷனாய்யா நீ... சே, உங்கிட்டல்லாம் பேசறதே பாவம்... போய்டு, என் கண்ணு முன்ன நிக்காத போய்டு,'' என்றான், பிரவீண்.
''ஹ... உண்மைய சொன்னா கசக்குதோ?''
''எதுய்யா உண்மை... உனக்கு, உண்மை தெரியுமா, உனக்காக ஒழச்சு ஒழச்சு இவங்க ஓடாத் தேஞ்சது தான் மிச்சம்... என்ன பாக்கற, இவங்க சிறுநீரகத்தில் கல்லு இருக்கு... அதுவும் உடனடியா, 'ஆபரேட்' பண்ணியே ஆகணும். இல்லன்னா இவங்க உயிருக்கே ஆபத்தாம்... பாவீ, எல்லாம் உன்னாலதான்யா,'' என்றான், பிரவீண்.
ஷைலஜா, தன் மகனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளைத் தன் கண்களால் சமாதானம் செய்தான், பிரவீண்.
''வெறும் கல்லுதானே... நல்ல வேள, நீ பாட்டுக்கு, 'கிட்னி பெயில்யரு'ன்னு, உன்னோட, 'கிட்னி'ய குடுத்துடப் போற,'' என்று, கல் மனதுடன் கூறிய, தர்மாவை வெறுப்புடன் பார்த்தான், பிரவீண்.
''நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட... அப்டி ஒரு தேவை வந்திச்சுன்னா, எங்கம்மாவுக்காக என் ரெண்டு, 'கிட்னி'யையும் குடுக்க, நான் தயாரா இருக்கேன்,'' என்றான்.
''டேய்... எது எப்படியிருந்தாலும் நீ என் மகன்கறது மாறிடாதுடா... நீ வேணும்னா, ஐம் பிரவீண், சன் ஆப் ஷைலஜான்னு சொல்லிக்கலாம்... ஆனா, தர்மப்படியும், சட்டப்படியும், நீ, 'டீ.பிரவீண்' தான்,'' என்று பெருமையுடன் கூறிய, தர்மாவை ஏளனமாகப் பார்த்தான்.
''கரண்... அத எடு,'' என்றான்.
கரண் ஏதோ காகிதத்தை எடுத்து, அவனிடம் கொடுத்தான்.
''தர்மப்படி... ஒழிஞ்சி போ... நா ஒனக்கு கடைசி காரியம் கூட பண்ண மாட்டேன்... இந்தா, நல்லா பாத்துக்க... நா டீ.பிரவீண் இல்ல... சட்டப்படி நேத்திலேந்து, எஸ்.பிரவீண்... எஸ் பார் ஷைலஜா... ஷைலஜாவோட மகன், பிரவீண்... புரியுதா, இவங்கதான் என் அப்பா, அம்மா எல்லாம். என்னோட, 'இனிஷியலு'க்கு சொந்தக்காரங்க,'' என்றான் தெளிவாக.
''அடப்பாவி...'' என்று கத்தினான், தர்மா.
''இவன் என்ன செஞ்சி கிழிக்கறான்னு, நானும் பாக்கறேன்னு, எங்கம்மாகிட்ட சொன்னியே... நா கிழிச்சுட்டேன், என் பேர்லேந்து உன் பேரை கிழிச்சி எறிஞ்சிட்டேன். இனி, என் பையன்னு சொந்தம் கொண்டாடிகிட்டு இந்த வீட்டுப்பக்கம் வந்தன்னு வை, காலை வெட்டிடுவேன்,'' என்று கர்ஜித்தான்.
திட்டிக் கொண்டே சென்றான், தர்மா.
அதிர்ச்சியில் உறைந்திருந்த, ஷைலஜாவை இயல்புக்குக் கொண்டு வந்தனர், பிரவீணும், கரணும்.
''பிரவீண்,'' என்று அழத் துவங்கினாள்.
''ம்மா... அவன் கெடக்கான்ம்மா... வா, உனக்கு, 'ஆபரேஷ'னுக்கு, நாள் குறிச்சாச்சு... நாம மருத்துவமனைக்கு போகணும்.''
''எப்டிடா... எப்டி தெரியும்?''
''ம்மா... நா உன் புள்ளமா... என் அம்மா கஷ்டப்பட்டா அது எனக்குப் புரியாதா?''
கணவன் தன்னைக் கைவிட்டு, வேறு ஒருத்தியுடன் குடித்தனம் செய்யப் போகும்போது ஏற்பட்ட வெறுமை எல்லாம், மகனின் இந்த வார்த்தையால் மறைந்து மாயமாகியதைப் போல உணர்ந்தாள். தன் மகனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள், ஷைலஜா.
அவன், தன் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தான்.
''அம்மா... இல்ல... இல்ல... அப்பா, வாங்க... மருத்துவமனை போகணும்... நேரமாகுது,'' என்று, தாயாகவும், தந்தையாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தெய்வத்தை அழைத்தான், பிரவீண்.

அன்னபூரணி தண்டபாணி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X