வணக்கம்.
என் பேரு அ. ஜெயா. ஆனைமலை வட்டம், தம்மம்பதி மலைகிராமவாசி. பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில, பி.ஏ., வரலாறு மூணாவது ஆண்டு படிக்கிறேன்.
'என் கதை தெரிஞ்சதுக்கப்புறம் அனுதாபப்படாம, 'இந்த நிலைமையிலேயும் இந்த பொண்ணு இவ்வளவு தூரம் வந்திருக்கே'ன்னு நீங்க பெருமையா நினைச்சா நான் சந்தோஷப்படுவேன்!
ஜெயா எங்கெல்லாம் சுற்றுலா போயிருக்கீங்க?
ஒரே தடவை கோவை போயிருக்கேன்; அவ்வளவுதான்!
விடுமுறை தினங்கள் எப்படி கிழயும்?
அப்பா, அம்மா கூட காட்டு வேலைக்கு போயிருவேன்.
மறக்க முடியாத சாகச பயணம்?
தினசரி பஸ் பிடிச்சு காலேஜ் போயிட்டு வர்றது!
எத்தனை ஜோடி காலணி இருக்கு?
இதென்ன கேள்வி... ஒரே ஒரு ஜோடிதான்!
அதிகாலை 5:00 மணிக்கு எழுந்திருப்பேன். 6:30 மணிக்கு பேருந்து. 8:00 மணிக்கு காலேஜுக்கு வந்துடுவேன். வீட்டுல இருந்து கொண்டு வந்த காலை சாப்பாடு 9:00 மணிக்கு; மதியத்துக்கும் அதேதான்! சாயங்காலம் 4:00 மணி பேருந்து மூலமா சரளபதியில இறங்கி யானைகள், காட்டுப்பன்றிகள் நடமாடுற வனம் வழியா 4 கி.மீ., நடந்தா, 6:30 மணிக்கு வீட்டுக்கு வந்திடுவேன்.
இந்த சூழல் மாறணும்!
எங்க மலைகிராம ஆண்கள்ல இதுவரைக்கும் ஒரேயொரு அண்ணன்தான் பி.காம்., முடிச்சிருக்காங்க. பெண்கள்ல ஒரு அக்கா நர்ஸிங் முடிச்சுட்டு வேலைக்குப் போறாங்க; நானும் விமலாவும் காலேஜ் போறோம். 90 குடும்பங்களுக்கு மேல இருக்குற எங்க கிராமத்துல கல்வி வளர்ச்சி இவ்வளவுதான்! இதுக்கு, முறையான போக்குவரத்து வசதி இல்லாதது, ஜாதி சான்றிதழ் கிடைக்கிறதுல சிக்கல்னு பல காரணங்கள் இருக்கு.
வாழ்க்கையும் ஆசையும்!
அரசால், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் இருக்கிறார் ஜெயா. உணவு அருந்தவும், உறங்கவும் திண்ணை. வீட்டின் மேற்கூரையில், கான்கிரீட் பூச்சு உதிர்ந்த இடங்களில் இரும்பு கம்பிகள் துருத்தி தெரிகின்றன. மழை நேரங்களில் வானத்தோடு சேர்ந்து வீடும் அழுமாம்!
மேற்படிப்பு பயில இவருக்கு ஆசையிருப்பினும், வெளியூர்களுக்கு சென்று படிக்க வீட்டின் பொருளாதாரம் ஒத்துழைக்காது. திருமூர்த்திமலை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நம்பியிருந்தவருக்கு, அது மூடப்பட்டதில் பெரும் வருத்தம்.
வாழ்க்கை சூழல் மேல உங்களுக்கு வருத்தமிருக்கா ஜெயா?
வருத்தமில்லை; ஆனா, கோபம் உண்டு.