சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (8) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள் (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2020
00:00

ஊட்டி வரை உறவு படத்திற்கு, ஒரிஜினலாக, ஏற்காடு வரை உறவு என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும்.
காரணம், சிவாஜியிடம், 10 நாள், 'கால்ஷீட்' வாங்கி, மொத்த, 'யூனிட்'டும் ஊட்டி போய் விட்டது. ஆனால், ஒரு காட்சி கூட எடுக்க முடியாதபடி, 10 நாளும் மழை. 10 நாள் முடிந்தது. பெருந்தன்மையுடன், மேலும், 10 நாள், 'கால்ஷீட்' தந்தார், சிவாஜி. அந்த, 10 நாளும் மழை வெளுத்து வாங்கியது.
ஒரே ஒரு பாடல் காட்சியையும், சில காட்சிகளை மட்டும் படமாக்கி, ஊட்டியை காலி செய்து, ஏற்காடு சென்று, வெளிப்புற படப்பிடிப்பை முடித்தோம். அதன் பின், சென்னையில், 'செட்' போட்டு, ஒருவாறாக சமாளித்து படத்தை எடுத்தோம். படம் பிரமாதமான வசூலைக் கொடுத்தது.
அதுவரை, குடும்ப கதைகளில் நடித்து வந்த, கே.ஆர்.விஜயா, இந்த படத்தில் மாடர்னாக வருவார். அதிலும், இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட, நடன இயக்குனர் பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, கே.ஆர்.விஜயாவை நன்றாக வேலை வாங்கியிருப்பார். விஜயா, தலையாட்டிக் கொண்டே, 'தேடினேன் வந்தது' பாடலுக்கு ஆடியதை, இன்றளவும் பாராட்டுபவர்கள் உண்டு.
இந்த படத்தில் அசோசியேட் இயக்குனராக இருந்த, சி.வி.ராஜேந்திரனுக்கு, முழுப் படத்தையும் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் தான் கதை, வசனம் எழுதித் தரவேண்டும் என்று கேட்டு, வாங்கி செய்தார். அந்த படம் தான், அனுபவம் புதுமை. நகைச்சுவை கலந்த, 'சஸ்பென்ஸ்' படம்.
தொடர்ந்து, நில் கவனி காதலி என்று ஒரு படம். அதுவும் நகைச்சுவை கலந்த, 'சஸ்பென்ஸ்' படம். கேமராமேனை கண்ணாடி தொட்டியில் போட்டு, நீச்சல் குளத்தில் மூழ்க வைத்து எடுத்த, வித்தியாசமான பாடல் காட்சி, அப்போது பெரிதாக திரைத்துறையில் பேசப்பட்டது.
இப்படி முழுக்கதை வசனகர்த்தாவாக மாறினாலும், நாடகத்தை, நான் விடவில்லை. நேரில் கிடைக்கும் கை தட்டலும், பாராட்டுதலும் தனி தான்.
இந்த நேரத்தில், சீனாவுடனான யுத்தத்திற்கு தேவைப்படும் நிதிக்காக, தமிழகத்தில், சிவாஜி தலைமையிலான நட்சத்திரங்கள், ஊர் ஊராக போய், 'நட்சத்திர கலை விழா' நடத்தினர்; அதன் மூலம் வரும் வசூல் பணத்தை அரசுக்கு வழங்குவது என்று முடிவும் செய்தனர்.
சும்மா போய் முகத்தைக் காட்டி பேசினால் போதாது, நன்கொடை கொடுத்து வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு நாடகமும் போட வேண்டும் என்று முடிவு செய்த சிவாஜி, என்னை கூப்பிட்டார்...
'இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ஒரு, 'ஸ்கிரிப்ட்' தயார் செய்யுங்கள்; நிறைய நடிகர்கள் பங்கேற்கும் வகையில் அந்த நாடகம் இருக்க வேண்டும். கோபு என்றாலே காமெடி தானே; அதனால், காமெடி நாடகமாகவே இருக்கட்டும்...' என்று சொல்லி, அனுப்பி விட்டார்.
சிவாஜி விருப்பப்படியே உருவாக்கப்பட்டது தான், கலாட்டா கல்யாணம் என்ற நாடகம். சிவாஜியே நாடகத்தின், 'ரிகர்சலை' பல நாட்கள் நடத்தி, நடிகர்களை, 'டிரில்' வாங்கினார். நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த, சிவாஜி, இதை தன் சொந்த தயாரிப்பில் படமாக்க விரும்பினார்.
சிவாஜியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்தார், ஜெயலலிதா.
சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் படம் நன்றாக ஓடியது.
ஒரு தகப்பனுக்கு, நான்கு பெண்கள். இரண்டாவது பெண்ணை மண முடிக்க பெண் கேட்டு, நாயகன் செல்வார். ஆனால், 'நான்கு பெண்களுக்கும், ஒரே நேரத்தில், ஒரே பந்தலில் திருமணம் செய்வதாக பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன். நீ வேண்டுமானால், மற்ற மூன்று பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்...' என்று மாமனாராக வரப்போகிறவர் சொல்லி விடுவார். மற்ற மூன்று பேருக்கும், மாப்பிள்ளை பார்க்கும் போது ஏற்படும் நகைச்சுவை அனுபவம் தான், கலாட்டா கல்யாணம்.
எப்போதுமே மற்றவர்கள் நடிப்பதை பார்த்து பெருமைப்படுவார், சிவாஜி. அவர்கள் நடிப்பதை உடனிருந்து ஊக்கப்படுத்தவும் செய்வார். கலாட்டா கல்யாணம் படத்தில், இது நன்றாக தெரியும். அவரது வேடம், ரொம்ப சிறிது தான். ஆனால், மற்றவர்களுடன் சேர்ந்து அந்த வேடத்தை பிரமாதப்படுத்தி இருப்பார்.
சிவாஜி என்னை நம்பி, பெரிய பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறாரே என்று எண்ணி, நான் ரொம்பவே இந்த படத்திற்கு பாடுபட்டேன். மொட்டை மாடிக்கு சென்று, எல்லாரது வசனங்களையும் நானே பேசி பார்ப்பேன்.
இதை கவனித்த அக்கம் பக்கத்தில் இருந்த வாண்டுகள், அவரவர் அம்மாக்களிடம் போய், 'பக்கத்து வீட்டு மாமா, மாடியில், அவரா பேசிட்டு இருக்காரும்மா...' என்று சொல்லியிருக்கின்றனர். அவர்கள் இதை, என் மனைவியிடம் துக்கம் விசாரிப்பது போல, வந்து விசாரித்துச் சென்றனர்.
இதைக் கேட்ட என் மனைவி, விறுவிறுவென மொட்டை மாடிக்கு வந்து, 'எதைச் செய்தாலும் கீழே வந்து வீட்டிற்குள் செய்யுங்க... உங்கள, லுாசு மாதிரி பார்க்கிறாங்க...' என்றார்.
இந்த படம் வந்த பிறகு, நான் இருந்த திருவல்லிக்கேணியில் கவனிக்கப்பட்டேன். 'தோ போறான் பாரு, இவன் தான் கோபு...' என்று, 'கிசுகிசு'ப்புகள் வலம் வந்தன.
இதனால், நல்லது நடந்ததோ இல்லியோ ஒரு வம்பு வந்தது. வந்த வம்புக்கு பெயர், துரைக்கண்ணு.

சிவாஜி விரும்பி கேட்ட படம்!
ஸ்ரீதரிடம், தன்னை வைத்து ஒரு காமெடி படம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார், சிவாஜி. அப்படி எடுக்கப்பட்ட படம் தான், ஊட்டி வரை உறவு. 1967ல் வெளியானது. சிவாஜி, கே.ஆர்.விஜயா, பாலையா, வி.கே.ராமசாமி, நாகேஷ், முத்துராமன், எல்.விஜயலக்ஷ்மி, சச்சு நடித்தது. எம்.எஸ்.வி., இசை, பாடல்கள், கண்ணதாசன்.
'ஹேப்பி இன்று முதல் ஹேப்பி... பூ மாலையில் ஓர் மல்லிகை... புது நாடகத்தில் ஒரு நாயகி... ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்... அங்கே மாலை மயக்கம் யாருக்காக... தேடினேன் வந்தது...' போன்ற இனிமையான பாடல்கள் நிறைந்த படம்.

தொடரும்
-எல். முருகராஜ்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X