அன்புள்ள அம்மா —
நான், 36 வயது பெண். கணவர் வயது: 40. என்னுடைய 23வது வயதில் திருமணம் ஆனது. 10 ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை. அதன்பின் முதல் பிரசவத்தில், இரட்டை பெண் குழந்தை பிறந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மூன்றும் பெண் குழந்தைகளாகவே இருந்ததால், எனக்கும், கணவருக்கும் எந்த மன வருத்தமும் இல்லை. ஆனால், மாமியாருக்கும், அவர் வீட்டு உறவினர்களுக்கும், இது, பெரிய குறையாக தெரிகிறது.
'மூன்றும் பெண்களாக பிறந்து விட்டதே... எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறீர்கள்...' என்று, வீட்டுக்கு வரும்போதெல்லாம், பேசி மனம் நோகடித்து செல்கின்றனர்.
உறவினர்கள் போன பின், மாமியார் பேசும் பேச்சுகளை கேட்க முடிவதில்லை. என்னை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் கரித்துக் கொட்டுகிறார். மன அழுத்தம் அதிகமாகிறது.
குழந்தை பிறக்காத, முதல், 10 ஆண்டுகளில், 'குழந்தை இல்லையே இல்லையே...' என்று கூறியவர், மூன்று குழந்தைகள் பிறந்த பின், 'பெண்களாக பிறந்து விட்டதே...' என்று குறை கூறுவது என்ன நியாயம்.
நானும், என் கணவரும், நல்ல பணியில் உள்ளோம். குழந்தைகளின் வருங்காலத்திற்காக சேமித்து வருகிறோம். நடுத்தர குடும்பமானாலும், வசதிக்கு குறைவில்லை.
எனக்கு ஒரே ஒரு தம்பி. என் பெற்றோர், கிராமத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். என் குழந்தைகளுக்கான செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக கூறி விட்டனர்.
என் கணவருக்கு ஒரு தங்கை. அவருக்கு திருமணமாகி, வெளி மாநிலத்தில் உள்ளார். அவர், போனில் பேசும்போதெல்லாம் துக்கம் விசாரிப்பது போல் விசாரிப்பார். அவருக்கு, இரண்டு ஆண் பிள்ளைகள்.
இதனால், நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். இவர்கள் சாபத்தால், என் உடல்நிலை, மன நிலை மாறி விடுமோ என்று பயமாக இருக்கிறது.
நான் என்ன செய்ய அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்
அன்புள்ள மகளுக்கு —
நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* 'திருமணமான முதல், 10 ஆண்டுகள், எனக்கு, மலடி பட்டம் சுமத்தினீர்கள். இப்போதோ, பெண் குழந்தைகளை வரிசையாக பெத்து போட்டு விட்டாய் என, சபிக்கிறீர்கள். பெண்களுக்கு பெண்களே எதிரி ஆகாதீர். தொடர்ந்து நீங்கள் என்னை காயப்படுத்தினால், நாங்கள் தனிக்குடித்தனம் போக வேண்டி வரும்
'எனக்கு நீங்கள் நல்ல மாமியாராக இல்லா விட்டாலும் பரவாயில்லை, எங்களது மகள்களுக்கு, நல்ல பாட்டியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பேத்திகளுக்கு, நீங்கள் பொருளுதவி செய்ய வேண்டாம். பாசத்தை மட்டுமாவது கொட்டுங்கள்...' என, உன் அத்தையிடம், மென்மையான குரலில் கண்டனத்தை தெரிவி
* நாத்தனார் போன் பேசும்போது, 'அம்மா, உங்களுக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். நமக்கு, பெண் குழந்தை பிறக்கவில்லையே என, நீங்கள் தான் வேதனைப்பட வேண்டும். உங்கள் மகன்கள் வளர்ந்து ஆளான பிறகு, உங்களுக்கு என்ன செய்வரோ, அதைத்தான் எங்கள் மகள்களும் எங்களுக்கு செய்வர்
'எங்களது மகள்களை இளவரசியாக பாவிக்கிறோம். தயவுசெய்து உங்களது அறியாமை வார்த்தைகளால் எங்களை காயப்படுத்த முயற்சிக்காதீர்கள்...' எனக்கூறு
* நீயும், கணவரும், நல்ல பணியில் இருக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளை வளர்க்க, உன் தம்பியிடம் ஏன் உதவி பிச்சை கேட்க வேண்டும்... எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு ஆறு மகள்கள். ஆறு மகள்களையும் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி, தகுந்த வரன் பார்த்து திருமணங்களும் செய்வித்தார். 70 வயதாகியும், மகள்கள், குடும்பங்களுக்காக பொருளுதவியும் செய்து வருகிறார். அவரில் கால்வாசியாவது நீ இருக்க வேண்டாமா?
* பிறரின், 'நெகடிவ்' விமர்சனங்களை கேட்டு நிலைகுலையாதே. இக்காலத்தில் நல்லவர் சாபங்களே பலிப்பதில்லை. அறியாமை மண்டிய தீயவரின் சாபமா பலிக்கப் போகிறது... உன்னை சுற்றி இருக்கும் நட்பு மற்றும் உறவு வட்டத்தின், ஏச்சு பேச்சுகளை புன்முறுவலோடு சந்தி
நீ, உன் கணவன், மகள்கள் கொண்ட தனி உலகத்தை உருவாக்கி, மகிழ்ச்சி கடலில் மூழ்கு. மகள்களை நன்கு படிக்க வைத்து சொந்தக் காலில் நிற்க வைப்பேன் என, சங்கல்பம் கொள். பிற்காலத்தில் மகள்களை சார்ந்து நிற்காது, முழுமையாய் ஜீவிக்கும் பொருளாதார பாதுகாப்பை நீயும், உன் கணவரும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
* பெண் குழந்தைகளை பெற்றுவிட்டு, சமூகத்தின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் பல தாய்மார்களுக்கு போராடி வெற்றி பெறும் உத்வேகத்தை கற்றுக் கொடு.
மூன்று அழகிய தேவதைகளுக்கு இந்த எழுத்துக்கார அத்தையின் அன்பு முத்தங்கள்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.