ஜி.குப்புசாமி, சென்னை: சமூக இடைவெளியுடன், சினிமா ஷூட்டிங் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
காதல் பாட்டுகளை நினைத்துப் பாருங்கள்... ௩ அடி இடைவெளி விட்டு, கதாநாயகனும், நாயகியும் நடனமாடினால் ரசீப்பீர்களா? இதனால், அப்படிப்பட்ட படப்பிடிப்பு நடப்பதற்கு வாய்ப்பில்லை!
* சம்பத்குமாரி, திருச்சி: ஊழல் சேற்றில் உழன்ற அரசியல்வாதிகளை, முச்சந்தியில் நிற்க வைத்து, கசையடி கொடுக்காமல், அவர்களுக்கு சிலை வைப்பதும், நினைவு இல்லங்கள் அமைப்பதும், சரித்திர பாடங்களில் இடம் பெறச் செய்வதும், இந்தியாவில் மட்டும் தானா... உலகெங்கும் நடக்கிறதா?
எனக்குத் தெரிந்த வரை, நம் நாட்டில் மட்டும் தான், இந்தக் கொடூரம் நடந்து வருகிறது! படு கேவலம்!
த.வேல்முருகன், கொளத்தான் வலசு, ஈரோடு: அந்துமணியின் பதிலுக்கும், நடிகர் - நடிகையின் பதிலுக்கும் என்ன வித்தியாசம்?
இப்போ, வேல்முருகனின், 'இ - மெயில்' கேள்வியை தேர்வு செய்து, நானே பதில் எழுதுகிறேன். நீங்கள் கேட்டவர்களின் பாதி பேருக்கு மேல், தமிழே படிக்கத் தெரியாது. கேள்வியை தேர்வு செய்வதும், பதிலளிப்பதும் அவர்களின், பி.ஆர்.ஓ.,க்கள் தான்! இது தான் வித்தியாசம்!
* என். அன்புச்செல்வி, பெரியகுமட்டி, கடலுார்: 'இருவரும் நல்ல சம்பளத்தில் இருக்கிறோம். ஆனாலும், குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுகிறது...' என்று, புலம்புகிறாளே என் தோழி...
இப்போது, அதாவது, 'கொரோனா' காலத்தில், 'துண்டு' காணாமல் போயிருக்குமே... இதேபோல் நடந்து கொள்ளச் சொல்லுங்கள்; புலம்பல் காணாமல் போகும்!
அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி: ஜோக்கை படிக்காமலேயே, படத்தை பார்த்தே சிரிக்க வைத்த, 'வாரமலர்' இதழின் பீட்டர், இப்போது என்ன செய்கிறார்?
முதலில், 'ராணி' இதழில் தான் இருந்தார்! அவரின் படங்களை பார்த்துவிட்டு, பொ.ஆ.,விடம் சிபாரிசு செய்து, நமது இதழுக்கு கூட்டி வந்தேன். இப்போது, ஓய்வுபெற்று, தன் சொந்த மாநிலமான கேரளாவின், கோட்டையத்தில் வசித்து வருகிறார்!
* ஷ.பானு, துாத்துக்குடி: 'தினமலர்' நாளிதழில், சினிமா விளம்பரங்கள் வருவதில்லையே... ஏன்?
அனைத்து பதிப்புகளிலும் வெளியிட, ஒரு லட்சம் என்றால், அவர்கள், 10 ஆயிரம் ரூபாய்க்கு கேட்பர்! இன்னொரு நாளிதழோ, அதற்கு சம்மதிக்கிறது. ஏனெனில், இதைப் பார்ப்பதற்கு என்றே, அந்த பத்திரிகையை வாங்குகின்றனர் என்ற காரணத்தால்! 'தினமலர்' நாளிதழுக்கு அப்படிப்பட்ட வாசகர்கள் தேவையில்லை!