'உலகின் மிக நீண்ட இரவுகள் என்னுடையவை' என்று, அண்மையில் கேட்ட பாடல் தான் நினைவு வந்தது, சுந்தருக்கு. சித்ரா அடிக்கடி பாடிக் கொண்டிருந்தது, செவிகளில் வந்து விழுந்தது. அவன் கொஞ்சம் கடிந்து கொண்டான்.
'வீட்டுல தான் நிம்மதியா இருக்கலாம்ன்னு வரேன், சித்ரா. 'பிசினஸ்'ல, ஆயிரம் பிரச்னை. கொஞ்சம் சும்மா இரேன்...' என்று, அவன் தலையைப் பிடித்துக் கொண்டபோது, அவள், புன்னகையுடன் தைலம் எடுத்து லேசாக நெற்றியில் தடவினாள்.
'சாரி அன்பே...' என்று, அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
காலை, 10:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, நாற்காலியை தேய்த்து, 'ஹாயாக' கிளம்பி விடுகிற குமாஸ்தாவா, அவன்...
வியாபாரி, 'பிசினஸ்மேன்!' அதிலும் ஆட்டோமொபைல் தொழிலில், உதிரி பாகங்களை வாங்கி, விற்கிற, 'டிரேடிங்!' ஒரு நாள் அசந்தாலும், 'ஆர்டர்' வேறு ஒரு கம்பெனிக்கு போய்விடும்.
நேற்று கூட அந்த முகாரி கார்ஸ், 'என்ன சார்... எஸ்.யு.வி., டைப் ஹெட்லாம்ப் கேட்டா, 'செடான்' அனுப்பறீங்க... அதிலயும், 'டெயில்'லாம் நல்ல, 'பினிஷிங்' இல்ல... 'ரிடர்ன்' கொடுக்கிறோம்... மறுபடி ஆகிடாம பாத்துக்குங்க...' என்று, எரிந்து விழுந்தான்.
போன வாரம் வேணுகோபால் கம்பெனியும், 'ரியர் டிரம் எதுவும் அம்சமா இல்லை. என்ன பிரச்னை, சுந்தர்... 'வெகேஷன்' எதுவும் போயிட்டியா, கொஞ்சம் கவனமா இருப்பா... 'ப்ளான்ட் விசிட்' பண்ணு... இது, 'டிரேடிங்...' பேர் கெட்டு போச்சுன்னா மறுபடி சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம்...' என்று, தன்மையாக சொல்லி கண்டித்தது.
ஏன், அவனே கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.
எட்டு பேர் இருக்கின்றனர். சமமாகத்தான் வேலையை பிரித்துக் கொடுத்திருக்கிறான். ஈடுபாட்டுடன் உழைத்து, வாழ்வைக் கொடுக்கிற வேலை என்று, மரியாதையுடன் இருந்தாலே போதும். ஆனால், அவன் பார்க்கும்போது ஒரு மாதிரி, அவன் இல்லாதபோது ஒரு மாதிரி நடிப்பு, போலி பணிவு. ஏன் இப்படி இருக்கின்றனர்...
தினம் தினம் போர்க்களம் இது என்று, அவர்களுக்குப் புரியவில்லையா... போரால் யார் பயன் பெறுவர்... போர் என்பதே மோசமான அழிவைத்தானே பெரும்பாலோருக்குக் கொண்டு வரும்!
''சார்... சந்திராவுக்கு, 'ஐவி டெஸ்ட்' பண்ணிக்க, ரெண்டு நாள் விடுப்பு வேணுமாம்,'' என்றான், மானேஜர்.
''ஏன்... அவங்க வந்து கேக்க மாட்டாங்களா?''
''பயந்த பொண்ணு, வாயைத் தொறந்து, தாகம் பசின்னு கூட சொல்லாது... ஆனா, வேலையில, 'கில்லி' சார்... ஒரே நாள்ல, 'ஸ்டாக் டேக்கிங்' முடிச்சு, கியர் பாக்ஸ், வால்வ்ஸ், சிலிண்டர் எவ்வளவுன்னு துல்லியமா கணக்கு எடுத்துட்டாங்க... பாவம், திருமணமாகி, நாலு வருஷம் ஆச்சு... இன்னும் மழலை பாக்கியம் இல்ல.''
''போதும்... கதை கேட்கிற நேரமா இது... சப்ளையர், நான்சி ரேடியல்ஸ்கிட்ட, 'ரேடியல் டயர்' பத்தி விசாரிச்சீங்களா?''
''ஓ... 'மெயில்' வந்திருக்கு; உங்க பார்வைக்கு அனுப்பியிருக்கேன்.''
''அந்த, 'ரியர் டிரம்' விவகாரம் என்ன ஆச்சு?''
''நானும், விகாஷும், இன்னிக்கு அதை முடிச்சுடுவோம்... 'ஆர்டர்' நிச்சயம் நமக்கு தான்.''
''ஆபிஸ் ஏன் எப்பவும் ஒரே சத்தமா இருக்கு...''
''இன்னிக்கு, ஷாலு பொண்ணுக்கு பிறந்த நாள், சார்... அதான், கொண்டாட்டம்.''
''சரி சரி... எல்லாரையும் கொஞ்சம் வேலையையும் பார்க்க சொல்லுங்க,'' அவன் சிடுசிடுத்தான்.
தலைவலி அதிகரித்து, இப்படியே, 'டென்ஷன்' ஏறிக்கொண்டே போனால், என்ன தான் முடிவு... எப்படி கரையேறுவது?
''அப்பா... அப்பா...'' என்று, ஓடி வந்தான், முகில்.
''சொல்லு, முகில்.''
பிஞ்சு விரலால் அவன் முகம் தொட்டு, ''என்னப்பா, 'டல்'லா இருக்கே... நாட் வெல்,'' என்றான்.
''ஆமாம்... எப்பவும், 'பிசினஸ் டென்ஷன்... நாட் வெல்...' சரி, நீ சொல்லு... ஸ்கூல்ல என்ன ஸ்பெஷல்?''
''அடுத்த வாரம், 'இன்டர் ஸ்கூல் டிராயிங்' போட்டி; நானும் கலந்துக்க போறேன்... எந்த மாதிரி படம் வரையலாம், சொல்லுப்பா,'' என, ஆர்வத்துடன் படபடத்தான், முகில்.
''படமா... அதெல்லாம் அம்மாகிட்ட கேட்டுக்கோ, முகில்.''
''ஏம்பா, சின்ன வயசுல நீ ரொம்ப அழகா வரைவியாமே... தேர், சூரியன், காந்தி எல்லாம் சூப்பரா இருக்குமாமே, பாட்டி சொன்னாங்க.''
''அதெல்லாம் திரும்பி வராத கனவு காலம்... சித்ரா, நீதான், 'தீம், புராஜெக்ட்' எல்லாத்துலயும் கலக்குவியே... முகிலுக்கு சொல்லிக் குடேன்.''
''நிச்சயமா,'' என்று, மகனை கைபிடித்து அழைத்து போனாள், சித்ரா.
அடுத்த நாளும், தொலைபேசிகளில் புகார்கள், அலுவலக இரைச்சல்கள், கோடவுனில் பாதுகாப்பு பிரச்னைகள். விடாத தலைவலி.
எங்காவது ஓடிப் போய் விடலாம் என்று கதறியது மனது.
''சார்... நொய்டால, 'ஆட்டோ மொபைல்' கண்காட்சி. நமக்கு, சிறப்பு அழைப்பு வந்திருக்கு. மார்க்கெட்ல நம் வளர்ச்சி மேலே போய்கிட்டிருக்கு,'' என்று, மானேஜர் சொன்னதை, சரியாக உள்வாங்க முடியாமல், தலைக்குள் ஒரு மரங்கொத்தி கூராக அடித்துக் கொண்டே இருந்தது. 3:00 மணிக்கே கிளம்பி விட்டான்.
அமைதியாக இருந்தது, வீடு.
பாலை காய்ச்சியபடி, முகிலிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள், சித்ரா.
திடீரென்று விம்முவது கேட்டது.
''எனக்கு பரிசு கிடைக்கலே... எவ்வளவு கஷ்டப்பட்டு வரைஞ்சேன் தெரியுமா... பேருக்கு, ஒரு மூன்றாவது பரிசு... பிடிக்கலேப்பா,'' என்று, ஓடி வந்து தோளில் சரிந்து அழுதான், முகில்.
''மூன்றாம் பரிசா... ஏன் கண்ணா, நீதான் அருமையா வரைவியே... என்ன ஆச்சு?''
''தெரியல... எல்லாம், 'பாலிடிக்ஸ்'ப்பா,'' என்றான்.
''முகில்... 'பாலிடிக்ஸ்'ங்கிறதெல்லாம் பெரிய வார்த்தை... விபரம் தெரிஞ்ச பையன் நீ... அப்படி பேசலாமா... தகுதி இல்லாத ஓவியத்துக்கு, முதல் பரிசு கொடுப்பாங்களா?''
''கடல்ல சூரிய உதயம், பாய்மர படகு, ஆரஞ்சு வானம், நீல பாய், கட்டு மரம்ன்னு பாத்தாலே ஆர்மனியா இருக்கா, இல்லையா... மலை, பசு, யானை இப்படியா வரைஞ்சேன்... என் ஓவியம் எவ்வளவு அழகா இருந்தது,'' கோபமாக சொன்னான், முகில்.
''உன் ஓவியம் அழகாக இருந்தது. சரி... முதல் பரிசு வாங்கின ஓவியத்தை பாத்தியா?''
''பாத்தேன்.''
''எப்படி இருந்தது?''
''காடு மாதிரி மசமசன்னு மரங்கள்... இடி, மழை, காத்து, புயல், அருவி, வெள்ளம், தலை சாய்கிற மரங்கள்... ஒரே களேபரம்... அதுக்கு போய் எப்படிம்மா முதல் பரிசு தர முடியும்?''
மகனின் தலையை வருடியபடி, ''கண்ணா... நீ, அதை இன்னும் கூர்ந்து கவனிச்சிருக்கணும். அந்த ஓவியத்துல இருந்த ஒரு மரத்துல, காட்டுக் குருவி ஒண்ணு, தன் கூட்டுலயிருந்த குஞ்சுகளுக்கு, அலகால் உணவை ஊட்டியபடி இருந்தது. அதோட முகத்தைப் பார்த்தால் அவ்வளவு பொறுமை, நிதானம், அக்கறை...
''சூழலோட கடினத்தன்மை எதுவுமே, அம்மா குருவியை பாதிக்கல... தன் வேலை எது, தான் என்ன செய்கிறோம், இதோட, 'பர்ப்பஸ்' என்ன இதெல்லாம் மட்டும் தான், அதோட முகத்துல தெரிஞ்சது...
''அதுல, நம் எல்லாருக்குமே ஒரு செய்தி இருக்கு, கண்ணா... இது, பரபரப்பான காலம். எல்லாருக்கும் வேகம், 'டிராபிக் சிக்னலில்' நிற்க பொறுமை இல்ல... 'பாஸ்ட் புட், கிராஷ் கோர்ஸ்'ன்னு போகுது வாழ்க்கை... இதோட பாதிப்புகள் எவ்வளவு மோசமா இருக்கும்...
''சூழல் எப்படி இருந்தாலும், நாமளும் இந்த வேகப் பாய்ச்சல்ல பங்கு எடுத்துக்க வேண்டிய நிலைமை இருந்தாலும், அந்த குருவி மாதிரி, நம்மாலயும் இருக்க முடியும், முடியணும். அடுத்தவரை குறை சொல்றதை விட்டுட்டு, நம்மால இதை எப்படி, 'பெட்டரா' கையாள முடியும்ன்னு பாக்கணும்...
''அலைகள் ஓய்ந்த பின், கால்களை நனைக்கலாம்ன்னா என்னிக்கும் அது நடக்காது... குப்பைகளை கடந்து போகும்போது, காலணிகளை அணிந்து கொள்கிறோம்; தும்மல் வந்தால், மூக்கை மூடிக்கிறோம். அது போல, நாம தான், மன அமைதியை தேடி அடையணும்... அதைத்தான் அந்த குருவி, 'சிம்பாலிக்கா' சொல்லுது... அந்த கருத்துக்கு தான் முதல் பரிசு,'' என்றாள், சித்ரா.
''சூப்பர்மா... இப்பதாம்மா புரியுது,'' என்றான், முகில்.
மனைவியை அணைத்து, ''எனக்கும் இப்போ தான் புரியுது கண்ணே,'' என்றான், சுந்தர்.
- வி. உஷா