தனுஷை உசுப்பேற்றிய, போட்டி நடிகர்கள்!
ராஜ்கிரணை வைத்து, பவர்பாண்டி என்ற படத்தை இயக்கிய, தனுஷ், அதையடுத்து, நான் ருத்ரன் என்றொரு சரித்திர படத்தை இயக்கி நடித்து வந்தார். திடீரென்று, 'பைனான்ஸ்' பிரச்னை காரணமாக, கிடப்பில் போட்டார். இதையடுத்து, தனுஷின் சில போட்டி நடிகர்கள், 'அவ்ளோதானா, இயக்குனர், தனுஷ் காலியா...' என்று, அவரை, மறைமுகமாக கிண்டல் செய்து வந்தனர். விளைவு, மீண்டும் தற்போது, நான் ருத்ரன் படத்தை துாசு தட்டியுள்ள, தனுஷ், 'பவர்பாண்டி படத்தை விட, 'ஹிட்' படமாக கொடுத்து, நான் யார் என்பதை நிரூபிப்பேன்...' என்று, வரிந்து கட்ட தயாராகி விட்டார்.
— சினிமா பொன்னையா
'ஜிம் பாடி'யை காட்டிய, ரகுல்பிரீத் சிங்!
திடீரென்று, 'டயட்' கடைப்பிடிக்காமல், முழு கட்டு கட்டி வந்த, ரகுல்பிரீத் சிங், 'புசுபுசு'வென்று பெருத்ததால், அவர் மீது, இயக்குனர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், இந்த, 'லாக் டவுன்' நேரத்தை பயன்படுத்தி, இடைவிடாத உடற்பயிற்சியில் இறங்கிய, ரகுல்பிரீத் சிங், தற்போது பழைய நிலைக்கு உடற்கட்டை கொண்டு வந்து விட்டார். அதையடுத்து, 'ஜிம்'மில் வியர்வை சொட்ட சொட்ட, பயிற்சியில் ஈடுபட்டுள்ள, தன், 'கியூட் ஜிம் பாடி'யை வெளிப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு, அபிமானிகளை அசர வைத்துள்ளார், நடிகை. சமர்த்து உள்ள சேவகனுக்கு, புல்லும் ஆயுதம்!
— எலீசா
கிச்சன் கில்லாடி, கீர்த்தி சுரேஷ்!
சமீப காலமாக தான் சமையல்கட்டு பக்கம் செல்லத் துவங்கி இருப்பதாக சொல்லும், கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது, 'கிச்சனு'க்குள் புகுந்து, சமைத்து வருகிறார். அதோடு, தான் சாக்லேட் தோசை செய்வதை, 'வீடியோ' எடுத்த, கீர்த்தி சுரேஷ், அதை, தன் கோலிவுட் அபிமானிகளுக்கும், 'ஷேர்' செய்திருக்கிறார்.
'இதுபோன்று, இன்னும் நிறைய அயிட்டங்கள் நம் கைவசம் உள்ளது. அவ்வப்போது, 'வீடியோ' அனுப்புறேன். வீட்டில் செய்து அசத்துங்கள்...' என்று, கேட்டுக் கொண்டுள்ளார். அதையடுத்து, கீர்த்தி சுரேஷை, நடிகையர் பலரும், 'கிச்சன் கில்லாடி' என்று அழைத்து வருகின்றனர்.
சமையல் பாகம் தெரிந்தவளுக்கு, உமையவர் பாகன் உள்ளங் கையில்!
— எலீசா
குறி பார்த்து அடிக்கும், சிவகார்த்திகேயன்!
சில படங்களின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு, 'ஹிட்' பட இயக்குனர்களின் மீது, தொடர்ந்து கல்லெறிந்து வந்தார், சிவகார்த்திகேயன். அப்படி அவர் குறி பார்த்து அடித்ததில், தற்போது, வெற்றிமாறன் விழுந்திருக்கிறார். அதையடுத்து, அவருடன் ஒரு படத்தில் நடிக்க, 'டீல்' பேசி வரும், சிவகார்த்திகேயன், இனி, பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதில் இருந்து விலகி, உயிரோட்டமான கதைகளில் அதிகமாக நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
உச்ச நடிகரின் படத்தில், தமிழில் அறிமுகமான, மூன்றெழுத்து பூ நடிகை, அவருடன், இப்போது வரை, நட்பில் இருக்கிறார். அதோடு, அரசியல் கட்சி துவங்க தயாராகிக் கொண்டிருக்கும் அவரை, அடிக்கடி சந்திக்கிறார். இதனால், அம்மணி இடம்பெற்றுள்ள தேசிய கட்சியினர், கடும் அதிருப்தியில் இருப்பதோடு, இதை காரணம் காட்டியே, அவரை கட்சியில் இருந்து நீக்கவும் நேரம் பார்க்கின்றனர். ஏற்கனவே சிலர், மேற்படி நடிகருடன் நட்பு வைத்த காரணத்திற்காக, தேசிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது போன்று, பூ நடிகையும், விரைவில், அதிரடியாக நீக்கம் செய்யப்படுவார், என்று, 'கிசுகிசு'க்கப்பட்டு வருகிறது.
தோழி 1: 'நம் பிளாட்டில் குடியிருப்பவர்களின் மகன், டிகிரி முடிச்சுட்டு, கதை எழுதறேன், கவிதை எழுதறேன்னு சுற்றிகிட்டு இருந்தானே... அவன், எதிர் வீட்டு கல்லுாரி மாணவிக்கு காதல் கவிதை ஒண்ணு எழுதி கொடுத்திருக்கிறான், பாரு... தெருவே சிரிப்பா சிரிக்குது...'
தோழி 2: 'அப்படி என்ன எழுதியிருந்தான்; அது எப்படி தெருவில் உள்ளோருக்கு தெரிந்தது...'
தோழி 1: 'அண்ணாமலை படத்தில், 'கொண்டையில் தாழம்பூ... கூடையில் என்ன பூ... குஷ்பூ...' என்று, ஒரு பாட்டு வந்ததே நினைவிருக்கிறதா... அந்த பாட்டை அப்படியே காப்பியடிச்சு, 'நீ தான் என் குஷ்பூ... என் மன வானிலும் குஷ்பூ, நிலவாக பவனி வருகிறாள்...' என்று உளறி கொட்டியிருக்கிறான். அதை படிச்ச அந்த பொண்ணு, தன் தோழிகளுக்கும், நம்ம தெரு நல வாழ்வு சங்க, 'வாட்ஸ் ஆப் குரூப்'பிலும் போட்டுடுச்சு...
'அந்த பையன் ரெண்டு நாளா, வெளியே தலையே காட்டவில்லை. ஹி... ஹி...'
சினி துளிகள்!
* 'ரஜினியுடன் நடிக்கும், அண்ணாத்த படம், என் சினிமா, 'கேரியரில்' மிகப்பெரிய, 'ரீ - என்ட்ரி'யாக அமையும்...' என்கிறார், குஷ்பு.
அவ்ளோதான்!