அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2020
00:00

அன்பு தோழிக்கு —
நான், 55 வயது பெண்மணி. படிப்பு: எம்.பி.ஏ., எனக்கு ஒரு அண்ணன் உண்டு. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, என்னுடைய, 23வது வயதில் திருமணம் செய்து வைத்தனர். எனக்கு, ஆண் - பெண் இரு குழந்தைகள்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 10 ஆண்டுக்கு முன், குழந்தைகளுடன் அம்மா வீட்டில் தஞ்சமடைந்தேன். படித்த படிப்பு, கை கொடுக்க, 'மார்க்கெட்டிங்' வேலை கிடைத்தது.
வேலைக்கு சென்று, அம்மாவின் துணையோடு, குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தேன்.
அண்ணன் மகனுக்கு, என் மகளை திருமணம் செய்து வைக்க நினைத்தேன். வெளிநாட்டில், 'செட்டில்' ஆன, அண்ணனும், அண்ணியும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
எல்லாம் முடிந்த நிலையில், என் மகள், 'இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை; நான், வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்...' என்று, குண்டை துாக்கி போட்டாள்.
நான் அனுபவித்த கஷ்டங்களையும், அண்ணன் குடும்பத்துக்கு வாக்கு கொடுத்ததையும் கூறி, அவளை சமாதானம் செய்ய முயன்றேன். எதற்கும் அவள் மசியவில்லை.
சரி... கொஞ்ச நாள் ஆகட்டும், மீண்டும் பேசலாம் என்று, அப்போதைக்கு அதை கிடப்பில் போட்டது தப்பாகி விட்டது.
தான் காதலித்தவனை, யாருக்கும் தெரியாமல், பதிவு திருமணம் செய்து, என் தலையில் மண் அள்ளி போட்டாள். அவளது இச்செயலால், மனம் நொந்து போனேன். மீண்டும் மீண்டும் அதுவே என்னை சுற்றி சுற்றி வந்து வேதனைப்படுத்துகிறது.
இதையறிந்த அண்ணனும், அண்ணியும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், என்னை சமாதானப்படுத்துகின்றனர்.
இத்தனை பெருந்தன்மையுள்ள குடும்பத்தில் வாழ கொடுத்து வைக்கவில்லை என்று நினைத்து, தினமும் அழுது கொண்டுள்ளேன்.
மன நோயாளி ஆகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இந்த மனப்போராட்டத்திலிருந்து நான் மீண்டு வருவது எப்படி... ஆலோசனை தாருங்கள்.
இப்படிக்கு,
உங்கள் தோழி.


அன்பு தோழிக்கு —
உன்னிரு குழந்தைகளில் பெண் குழந்தை மூத்தவளா, ஆண் குழந்தை மூத்தவனா என்பதை, நீ கடிதத்தில் குறிப்பிடவில்லை. சில வீடுகளில், மகன் மூத்தவனாக இருந்தாலும், மகளுக்கு தான் முதலில் திருமணம் செய்து வைப்பர். ஆகவே, உன் மகன் மூத்தவனாக இருப்பான் என, யூகிக்கிறேன். உன் மகனுக்கு, வயது, 30 இருக்கக்கூடும்.
சமூகரீதியான, சட்டரீதியான ஒப்பந்தமே திருமணம். அது ஆண்களையும், பெண்களையும் சட்ட, பொருளாதார மற்றும் உணர்வு ரீதியாக இணைக்கிறது.
குடும்பம் என்கிற கோவிலின் நுழைவாயில், திருமணம்; அது, ஒரு ஆயுட்கால பந்தம். உன் அண்ணனுக்கும் உனக்குமா திருமணம்...
அண்ணன் மகனுக்கும், உன் மகளுக்கும் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டாய். உன் மகள், வேறெருவனை காதலித்து, மணந்து கொண்டாள். ஒரு வேளை, உன் மகள், அண்ணன் மகனை திருமணம் செய்திருந்தால், அவர்களது திருமணம் தோல்வி அடைந்திருக்கலாம்.
அண்ணன் மகனை, மருமகனாக நாம் அடையவில்லையே என, நீ வருத்தப்படலாம். உன் மகளை, மருமகளாக நாம் அடையவில்லையே என, உன் அண்ணன் குடும்பம் வருத்தப்படவில்லை. அவர்கள் வருத்தப்படாதது, அவர்களின் பெருந்தன்மையை காட்டவில்லை. எவனையோ காதலித்தவள் நமக்கு மருமகள் ஆகவில்லையே என்கிற தப்பித்தல், அவர்களது பாவனையில் தெரிகிறது.
உன் மகள், ஒரு தவறானவனையா காதலித்து மணந்து கொண்டாள்... மகளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக உள்ளதா என, தள்ளி நின்று பார். உன் மகளும், மருமகனும் ஆனந்தமாக வாழ, உன்னாலான உதவிகளை செய். மகளை சபிக்காதே. காதலனை நினைத்துக் கொண்டே உன் மகள், அண்ணன் மகனுடன் ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்திருந்தால், அது நன்றாகவா இருக்கும்...
பிறக்கும்போதே உன் மகளை இடுப்பில் சுமந்து கொண்டேவா பிறந்தாய்... உனது, 24வது வயதில் வந்த உறவு, 55வது வயதில் கையை விட்டு போகிறது; விடு போகட்டும். போகும் உறவு நன்றாக இருக்கட்டும்.
மகளின் திருமணத்தை பற்றியே நினைத்து மனநோயாளி ஆக துடிக்கும் நீ, மகனின் எதிர்காலத்தை பற்றி துளியும் நினைத்து பார்க்க மாட்டாயா... உன்னுடைய உறவுக் கூண்டில் இருந்த கிளி, ஜோடியுடன் பறந்து விட்டது. கூண்டில் மீதி இருக்கும் மயிலை நினைத்து சந்தோஷப்படு. அது தோகை விரித்தாடட்டும்.
மகனுக்கு நல்லதொரு பெண்ணை பார். மகனுக்கும், உனக்கும் பிடித்த பெண்ணாக இருக்கட்டும். மகனின் திருமணத்தை, நீயும், அண்ணன் குடும்பமும் முன் நின்று நடத்துங்கள். திருமணத்திற்கு உன் மகளையும் கூப்பிடு.
வாழ்க்கையில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் தத்துவார்த்தமாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள். இதுவும் கடந்து போகும் தோழி.
— -என்றென்றும் அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X