சேலம் மாவட்டம், இடைப்பாடி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 9ம் வகுப்பு படித்த போது, தமிழ் ஆசிரியராக மாசிலாமணி இருந்தார். பாடம் நடத்துவதில் தனித்துவத்தும் மிக்கவர்.
பழந்தமிழ் புலவர்கள் மீதும் பெரும் பற்று கொண்டவர். வகுப்பில், இளங்கோ, பாரதி என, கவிஞர்களின் பெயரையே உச்சரிக்க மாட்டார். அந்த பெயர் கொண்ட மாணவர்களை, அடைமொழியில் குறிப்பிடுவார்.
ஒருநாள் வகுப்பில், படித்தவற்றை, கரும்பலகையில் எழுத சொல்லி வெளியே சென்றார்.
'ஜப்பான்' என்பதை, 'ஐப்பான்' என்று எழுதி விட்டேன். எல்லாரும் கிண்டல் செய்ய, அவமானத்தில் கூனி, குறுகி நின்றேன்.
திரும்பி வந்தவர் என் நிலை கண்டு, 'வடமொழி தெரியாமல் தான் நிற்கிறானே தவிர, வளமான தமிழ் மொழியை அறியாதவனல்ல; நான்காம் தமிழ் சங்கத்தை அமைத்த புலவர் பெயரை கொண்டுள்ளவன், சிறந்த தமிழாசிரியராக வருவான்...' என்றார்.
அவர் கொடுத்த ஊக்கத்தால் கவிதை, கட்டுரை எழுதி பயிற்சி பெற்றேன்; பட்டிமன்ற மேடைகளில் பேசி சாதித்தேன்.
எனக்கு, 34 வயதாகிறது; சர்வதேசப் பள்ளி ஒன்றில், தமிழாசிரியராக பணிபுரிகிறேன்; என்னை உருவாக்கிய ஆசானை மறக்க மனம் மறுக்கிறது.
- வே.பாண்டித்துரை, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 99767 31343