திருப்பத்தூர் மாவட்டம், தென்னம்பட்டு, அரசு துவக்கப்பள்ளியில், 1990ல், 3ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, தாய் இறந்ததால் மறுமணம் செய்தார் என் தந்தை.
கொடுமை செய்த சித்தி, 'பெண் பிள்ளை, 5ம் வகுப்பு வரை படித்தால் போதும்...' என்று தடைவிதித்தார்.
பிடிவாதமாக, 'படிப்பேன்...' என்று அழுது புலம்பியதை கண்ட என் தமிழ் ஆசிரியை லலிதா, என் அம்மாவின் தங்கையுடன், தந்தையை சந்தித்து அறிவுரைத்தார்.
என் சித்தி, 'நீங்க யார், இதையெல்லாம் கேட்க...' என்று திமிராக கேட்டார்.
கோபமடைந்த ஆசிரியை, 'இச்சிறுமிக்கு நடக்கும் கொடுமையை போலீசில் கூறினால், நீங்கள் சிறையில் களி தின்ன வேண்டியது தான்...' என்று மிரட்டி, என் படிப்பு தொடர வழிகோலினார்.
என் வயது, 40; நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கி, சிறப்பாக வாழ்கிறேன். என் கல்வி தொடர உதவிய ஆசிரியை, மற்றும் உறவினரை தினமும் வணங்க தவறுவதே இல்லை.
- சோபனா, கோவை.