சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும், மர்மங்களை துப்பறிய முயன்றனர். பொதிகை மலை உச்சிக்கு சென்ற போது, மலைவாசிகள் எய்த அம்புகள் சூழ நடுங்கி நின்றனர். இனி -
கொலை வெறியுடன் பாய்ந்தன அம்புகள்; மது, வினு அருகே மரத்தில் தைத்தன. தைத்த வேகத்தில் நடுங்கின. மது, வினுவின் தலைகளைச் சுற்றி கோலமிட்டு நின்றன. ஆதிவாசிகள் ஓடி வந்தனர்.
கழுத்தில் காட்டு பூக்களால் மாலைகள், இடுப்பில் சாக்கு போன்ற உடை.
மலையாளம் கலந்த தமிழில் பேசினர்.
'இங்கு ஏன் வந்தீங்க...'
'மலையை சுத்திப் பார்க்க...'
'எங்க தங்கியிருக்கீங்க...'
'அதோ அந்த மலை மாளிகையில...'
அமைதியாய் பேசிய ஆதிவாசித்தலைவன், 'ஓ! அந்த பேய் வீட்டிலா...' என்றான்.
'அந்த மாளிகையில் இருக்கிற வயசானவங்க, எங்க தாத்தா, பாட்டி...'
'பொய் சொல்றீங்க; உங்கள உயிருடன் விட்டால் இந்த மலைக்கு ஆபத்து...'
இருப்பிடத்துக்கு அழைத்து சென்றனர்.
அழுதாள் மது.
'ஏன் அழுற...'
'எனக்கு பயமாயிருக்குடா... ஆபத்து காலத்தில் எல்லாம் வந்து காப்பாத்தின கொளஞ்சி இந்தமுறை ஏன் வரல...'
'அதுதான் குழப்பமாயிருக்கு...' என்றவன், மலைவாசிகளின் குல தெய்வச் சிலையை உன்னித்தான்.
'நம்ப கொளஞ்சி...'
அந்த பெயர் உச்சரிப்பை கேட்டதும் ஓடி வந்தான் மலைவாசிகள் தலைவன்.
'எங்க தெய்வத்தோட பெயரை மரியாதை இல்லாம சொல்கிறாயே...'
'கொளஞ்சி உங்க சாமியா... அவர் எங்க நண்பராச்சே...'
'அப்படியா...'
'அவரோட நாலஞ்சு முறை பேசியிருக்கோம். எங்களை பலமுறை ஆபத்துகளில் இருந்து காப்பாத்தி இருக்கிறார்...'
'உண்மையாகவா...'
'உண்மை தான்...'
'எங்களை மன்னிக்கணும்...' என்றபடி, இருவரையும் விடுவித்து மரியாதை செய்தனர். உண்ண, தேனும், கிழங்கும் கொடுத்து உபசரித்தனர்.
'கொளஞ்சி நாதரை, சாமியாக எத்தனை வருஷமா கும்பிடுறீங்க...'
'மூணு தலைமுறையா...'
'மூணு தலைமுறைன்னா ஏறக்குறைய, 100 வருஷமா... நீங்க இப்படி சொல்றீங்க. கொளஞ்சிநாதர் மலை மாளிகையில, 30 வருஷத்துக்கு முன், பண்ணையாளாக வேலை செய்தார்; மிகவும் கெட்டவர்; அவரை, உங்க மூதாதையர் கொன்று விட்டதாக மலையின் கீழ் ஒரு ஆள் சொன்னாரே...'
'அது பொய்... கொளஞ்சி நாதர், 200 வருஷத்துக்கு முன் வாழ்ந்த மகான். அவரைப் பற்றிய அவதுாறு இது...'
'எங்களுக்கும் தெரியும்...'
'சரி... நீங்க யார் குழந்தைகளே...'
'சுற்றுலாப் பயணியாக வந்துள்ளோம்; மலை மளிகை வாசின்னு பொய் சொன்னோம்...'
'உங்களுக்கு எந்தெந்த விதத்தில் கொளஞ்சி நாதர் உதவினார்...'
'அது பெரிய கதை; சொல்ல ஆரம்பிச்சா பொழுது விடிஞ்சிடும்; இன்னொரு நாள் விரிவா சொல்றோம்...'
'நல்லது... இரவு இங்கேயே ஓய்வெடுங்க; காலையில் போகலாம்...'
'இல்லை... இப்போதே புறப்படுறோம்; எங்க பெற்றோர் தேடுவர்...'
'காட்டு மிருகங்கள் சேட்டை அதிகமாக இருக்குமே...'
'பரவாயில்லை... சமாளிக்கிறோம்...'
'துணைக்கு யாராவது...'
'துணையாக கொளஞ்சிநாதர் வருவார்...'
குலதெய்வம் பெயர் சொன்னதும், கன்னத்தில் போட்டுக் கொண்டனர்; முத்தம் கொடுத்து வழியனுப்பினர்.
யோசனையுடன் மதுவும், வினுவும் இறங்கினர்.
சூரியன் எழுந்தது. இருவரும் பல் துலக்கினர். காபி அளித்தாள் செண்பா. குடித்த போது, கடைக்கண்ணால் ஆராய்ந்தாள்; பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.
ஈசிசேரில் அமர்ந்திருந்தார் கொள்ளு தாத்தா; காலடியில் பாட்டி. கண்களில் பயமூட்டும் ஏதோ ஒன்று மிளிர்ந்தது.
'நேத்து ராத்திரி மலை மேல போனீங்களா...'
'ஆமா...'
'அங்க யாரையாவது சந்திச்சீங்களா...'
'யாரையாவதுன்னா...'
'குறிப்பா மலைவாழ் மக்களை...'
'இல்லை; ஏன் தாத்தா கேக்கறீங்க...'
'அவங்க ஆபத்தானவங்க...'
'அப்படியா தாத்தா...'
'ஆமாம்... நீங்க திரும்பிய போது இரவு, 11:00 மணி; இனிமேல் அகால நேரத்தில் மலை மேல் போக வேண்டாம்...'
'சரி தாத்தா...'
'இன்னைக்கு எங்க போறீங்க...'
'தென்காசி டவுனுக்கு...'
'மதிய உணவுக்கு வந்துடுவீங்க அல்லவா... சுப்பையனை அழைச்சிட்டுப் போங்க...'
'இல்லை... டவுன் பஸ்ல போயிட்டு வர்றோம்...'
'பத்திரமா போய் திரும்புங்க...'
அப்போது, வராண்டா கடைசியில் ஏழெட்டு குள்ள உருவங்களைக் கண்டான் வினு. அவை ஓடி ஒளிந்தன.
தாத்தாவுக்கு டாட்டா காண்பித்த படி நடந்தனர்.
தென்காசி ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. சன்னதித் தெருவில் நடந்தனர்.
சிதாரா ஸ்டுடியோ மாடிப்படிகளில் ஏறினர். எடுத்திருந்த போட்டோக்களை பிரிண்ட் போட கொடுத்தனர்.
'பதினைஞ்சே நிமிஷம்...'
நேரம் கரைந்தது; அறைக்குள் போன, ஸ்டுடியோ ஊழியர் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார்.
'ஏதாவது விளம்பர எழுத்துக்களை தனிதனி ஸ்நாப்களாக எடுத்தீங்களா...'
'இல்லையே...'
மீண்டும் அறைக்குள் புகுந்தார் ஸ்டுடியோ ஊழியர்.
புகைப்படம் எடுக்க வந்தவர்களை வேடிக்கை பார்த்தபடி வினு, மது அமர்ந்திருந்தனர்.
கதவை திறந்து கூடுதல் திகிலுடன் வந்த ஸ்டுடியோ ஊழியர், 'சம்திங் ராங்!' என்றார்.
பிரிண்ட்களை வாங்கியதும் அதிர்ந்தான் வினு.
அவற்றில் -
'ம, ஆ, தி, போ' போன்ற எழுத்துக்கள், குறியீடுகள் போல, சிவப்பு நிறத்தில், ஸ்நாப்புக்கு ஒன்று வீதம் இருந்தன.
எழுத்துகளை கோர்த்து, சொல்லாக்கி படிக்க முயன்றான் வினு.
அது -
வானம் சிவந்து விட்டது
திசை முடிந்து விட்டது
ஓடு!
என்றிருந்தது.
புகைப்பட பிரிண்டுகளுக்கு கட்டணத்தைக் கொடுத்து படிகளில் இறங்கினர்.
'வினு... இதுவும் கொளஞ்சியின் எச்சரிக்கையா...'
'இல்லை மது...'
'தலை சுத்துது...'
'பயப்பட்ட மாதிரி காட்டி கொள்ளகூடாது...' என, எல்லாவற்றையும் கிழித்து, திறந்தவெளி சாக்கடையில் வீசினான்.
புகைப்பட துண்டுகள் உருகி, சிவப்பு குழம்பாய் சாக்கடை நீருடன் கலந்தது.
இப்போது முழு சாக்கடையும் சிவப்பு நிறமாய் பெருக்கெடுத்தோடியது.
புகைப்படத்தை கிழித்த வினுவின் கை முழுக்க சிவப்பு வண்ணம்.
முகத்தில் திகில் படர நின்றாள் மது!
- தொடரும்...