டில்லி பாதுஷாவாக, அலாவுதீன் இருந்தார்; அவரது நெருங்கிய நண்பர் முகமது ஷா. ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். வேடிக்கை பேச்சில் கடுங்கோபமடைந்தார் பாதுஷா. மரண தண்டனை விதித்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உயிருக்கு பயந்து, தப்பி ஓடிய முகமது ஷா, அடைக்கலம் தேடி, பல மன்னர்களை கெஞ்சினார். காப்பாற்ற, எவரும் துணியவில்லை. கடைசியில், ரணதம்பவுதர் நாட்டின் ராஜா ஹமீரின்
அரண்மனையை அடைந்தார்.
அடைக்கலம் தேடியவரை காப்பாற்றுவது தானே தர்மம்.
நாடி வந்தவரிடம், 'நிம்மதியாக, இங்கு தங்கலாம். உயிர் உள்ளவரை, உங்களை காப்பாற்றுவேன். இது சத்தியம்...' என, வாக்கு கொடுத்தார் ராஜா. அங்கு தங்கினார் முகமது ஷா.
இந்த விஷயம், அலாவுதீனுக்கு தெரிய வந்தது. ராஜா ஹமீர் மீது கடுங்கோபம் கொண்டார்.
'முகமது ஷாவை, உடனே என்னிடம் அனுப்பி வையுங்கள்; அவர், மரண தண்டனை விதிக்கப்பட்டு தப்பி ஓடிய கைதி...' என்று கடிதம் எழுதினார்.
'முகமது ஷா, என்னிடம் அடைக்கலமாக வந்தவர்; என்ன கஷ்டம் வந்தாலும் சரி, காப்பேன்; அவரை ஒப்படைக்க மாட்டேன்...' என்று பதில் எழுதினார், ராஜா ஹமீர்.
கடும் கோபத்தில் அவரது நாட்டை முற்றுகையிட, பெரிய சேனையை அனுப்பி வைத்தார், அலாவுதீன்.
படை, நாலாபக்கங்களிலும் சூழ்ந்தது.
அதைக்கண்டு பயப்படுவார் என, எண்ணிய அலாவுதீன், மீண்டும் தகவல் அனுப்பினார்.
'உயிர் போனாலும், நம்பி வந்தவரை காப்பேன்...' என்று பதில் அனுப்பினார் ராஜா ஹமீர்.
கோர யுத்தம் நடந்தது. ஆயிரக்கணக்கில் வீரர்கள் மடிந்தனர்.
இதைக் கண்டு பதறிய முகமது ஷா, 'ஐயா, என்னால் தானே இத்தனை உயிர் நஷ்டம். பொறுக்க முடியவில்லை; டில்லி பாதுஷாவிடம் நானே சரணடைகிறேன்... போர் வேண்டாம்...' என்று கூறினார்.
அவரை தடுத்து விட்டார் ராஜா ஹமீர்.
கடும் போரால், நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. மஞ்சள் உடை உடுத்தி, சாகும்வரை போர் புரியும் உறுதியுடன், கோட்டைக்கு வெளியே வந்தார் ராஜா ஹமீர்.
உக்கிர சண்டையில், பெரும்பாலான வீரர்கள் கொல்லப்பட்டனர்; நகரமே சூனியமாக காட்சியளித்தது. அடைக்கலம் தேடி வந்தவரை காப்பாற்ற, நாட்டையும், உயிரையும் தியாகம் செய்தார் ராஜா ஹமீர்.
குட்டீஸ்... நம்பி பழகும் நண்பர்களை, என்ன துன்பம் வந்தாலும் காக்க வேண்டும் என்ற நீதியை உணருங்கள்!