ஆசிய நாடான கம்போடியாவில் உள்ள சிற்றுார் அங்கோர் வாட்; இது வரலாற்று காலத்தில் சிறப்புற்றிருந்தது. பின் அழிந்து, முழுவதும் காடாக மாறிவிட்டது. ஊர் இருந்ததே, வெளி உலகத்திற்கு தெரியாமல் உருக்குலைந்து கிடந்தது.
ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த விலங்கியல் அறிஞர் ஹென்றிமோகாத், 1861ல் இதை கண்டறிந்தார். சூரிய ஒளி நுழைய முடியாத அடர்ந்த காட்டிற்குள், பழங்கால வீடுகள், மாளிகைகள், சிற்பங்கள் நிறைந்த கோயில்கள் இருந்தன.
அவற்றை ஆராய்ந்தவர், அந்தப் பகுதி, கி.பி.1431 வரை பண்பாட்டு சிறப்பு மிக்கதாக விளங்கியதை அறிந்தார். கி.பி.9ம் நுாற்றாண்டு துவங்கி, 'அமேர்' என்ற அரச வம்சத்தினர் ஆட்சி செய்த தடயத்தை சேகரித்தார். ஆட்சியின் தலைநகராக விளங்கியது அங்கோர். நாகரிகம், பொருளாதார வளம் மிக்கதாக விளங்கியது. பாதுகாப்புக்கு, 10 லட்சம் வீரர்களையும் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அங்கோர் பகுதியில் குவிந்தனர். எங்கும், கற்கோவில்கள், பழங்கால சிலைகள் என, புராதன சின்னங்களைக் கண்டு பிரம்மித்தனர்.
அவற்றில், ஏழாம் ஜெயவர்மன் என்ற மன்னன் ஆட்சி புரிந்த ஆதாரமும் கிடைத்தது; அவர் காலத்தில் தான், அங்கோர் நகரம் விரிவாக்கப்பட்டது. புத்த மதத்தை தழுவியிருந்த அந்த மன்னர், பல புத்த விஹார்களைக் கட்டியிருந்தார். அவற்றில், பாயோன் என்ற விஹார் புகழ்பெற்றிருந்தது.
இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட, உயரமான கோபுரங்கள் உள்ளன; ஒவ்வொரு கோபுரத்திலும், 200க்கும் மேற்பட்ட, முகங்களுடன் பெரிய சிலைகள் அமைந்துள்ளன. எல்லா முகங்களும், ஒரே மாதிரி காட்சியளிக்கின்றன.
நகர வீதிகளில் இந்த முகம் சிலைகளாக காணப்படுகின்றன; அது, மன்னர் ஜெயவர்மனின் முக வடிவமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கோர் கோயில் மிக பிரமாண்டமானது. நுழைவாயில் பகுதியில், மிகப் பெரிய சிங்கத்தின் சிலைகள் காட்சி தருகின்றன. சுவரில், புன்னகை தவழும் நாட்டிய நங்கையர், போர் புரியும் வீரர்கள், யானைகள் போர் புரியும் காட்சி ஒவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.
இத்தனை சிறப்புள்ள அங்கோர், பாழடைந்த காரணத்தை தேடினர் ஆராச்சியாளர்கள். அப்போது, கண்டறிந்த விவரங்கள்:
* பயங்கர நோய் பரவியதால் மக்கள் வெளியேறி இருக்கலாம்
* அந்நியர் படையெடுப்பால், நகரம் எரிக்கப்பட்டிருக்கலாம்
* மதச் சண்டையால், மக்கள் வெளியேறி, நகரம் அழிந்திருக்கலாம்.
இப்படி காரணங்கள் கூறப்படுகின்றன.
காலம் சுழன்றது; காலங்கடந்தும் அங்கோர் நகரின் எழில் சிற்பங்களும், பிரம்மாண்டமான கோயில்களும் பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன; இன்று, புகழ்மிக்க சுற்றுலா இடமாக விளங்குகிறது. உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பராமரித்து வருகிறது, யுனஸ்கோ நிறுவனம்.