சாப்பிட்ட உடனே, 'வயிறு வலிக்குது' என்பர் சிலர். 'சாப்பிட்டது வயித்துல தங்கவே மாட்டேங்குது' என்பவர்களும் உண்டு. இவர்களின் உடல் கழிவான, மலத்தை சோதித்தால், 'அமீபியாசிஸ்' என்ற நோய் இருப்பது தெரியவரும்.
கண்ணுக்கு புலப்படாத கிருமியால், இந்த நோய் உண்டாகிறது. இந்த கிருமிக்கு, 'என்டமீபா ஹிஸ்டோலிடிக்கா' என்று பெயர். இது, குடலினுள் தங்கி நோயை ஏற்படுத்தும்.
கல்லீரலிலும் தொல்லை தரும். உணவை, சரியாக செரிக்க விடாது. குடலின் மெல்லிய பகுதிகளை சிதைக்கும். இதனால் ரத்தக் கசிவு ஏற்படும். சரியாக, செரிக்காத உணவு துகளுடன், ரத்தமும் கலந்து மலத்துடன் வெளிவரும்.
அமீபியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் மலத்துடன், இந்த கிருமியின் முட்டையும் வெளியேறும். சுத்தம் செய்யும் போது, கை விரல் நக இடுக்கில் முட்டை தங்கும். அவர் தொடும் பொருள் மற்றும் தயாரிக்கும் உணவு மூலம் பரவும்.
சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவை சாப்பிட்டால், இந்த நோய் பரவ வாய்ப்பு உண்டு.
இதை தடுக்க...
* கை, கால்களில், நகங்களை வெட்டி சீராக்க வேண்டும்
* நக இடுக்கில், கிருமி முட்டை தங்கி, மீண்டும் வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பு தரக்கூடாது
* வெறும் காலில் நடக்க வேண்டாம்; செருப்பு அணிந்து செல்ல வேண்டும்
* வெளியே சென்று வந்தவுடன், கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும்
* மலம், சிறுநீர் கழித்த பின், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்
* உள்ளாடையை துவைத்து வெயிலில் உலர்த்தி அணிய வேண்டும்
* பச்சைக் காய்கறி, கீரையை நீரில் அலசிய பின் சமைக்க வேண்டும்
* காய்கறிகள் நன்றாக வேந்தபின் உண்ண வேண்டும்
* நோய் பாதிப்பு தெரிந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும்.
இவற்றை கடைபிடித்தால், நோய் அண்டாது. ஆரோக்கியமாக வாழலாம்.