கிளியூரில் வசித்தாள் செண்பகவள்ளி. விபத்தில் கணவரை இழந்து வாடியவள், மனதை தேற்றி, காடு, கழனியில் கடினமாக உழைத்தாள். சம்பாதித்த பணத்தில், இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்தாள்.
ஒருத்தி, குடை வியாபாரிக்கு மனைவியானாள்; இன்னொருத்தி, 'நுாடுல்ஸ்' உணவு தயாரிப்பாளருக்கு மனைவியானாள்.
கடமை முடிந்ததை எண்ணி, நிம்மதி பெருமூச்சு விட்டாள் செண்பகவள்ளி. அவ்வப்போது, மகள் வீடுகளுக்கு சென்று, ஓரிரு நாட்கள் தங்கி, மகிழ்ச்சியுடன் திரும்புவாள்.
ஒரு நாள் -
முதல் மகள் வீட்டுக்குச் சென்றாள். அது, கடும் வெயில் காலம்! குடை வியாபாரம் செய்ய போயிருந்த, மருமகன் வெறுங்கையோடு திரும்பியதைக் கண்டு வருந்தினாள். பணமின்றி மகள் கஷ்டப்படுவதாக எண்ணினாள். மேலும் சிரமம் கொடுக்க விரும்பாமல், மறுநாளே, ஊர் திரும்பி விட்டாள்.
அன்று முதல், வெயில் சுட்டெரிக்கும் போதெல்லாம், முதல் மகளின் வாழ்க்கையை எண்ணி, 'இந்த வெயில் தொலைந்து, மழை பெய்ய கூடாதா...' என்று அழுது புலம்பினாள். வெறுப்பில் வாடினாள்.
'மூத்த மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே' என, வருந்தி, இளைய மகள் வீட்டுக்குப் போனாள் செண்பகவள்ளி.
அன்று வானில், கருமேகங்கள் திரண்டிருந்தன; குளிர் காற்று வீசத் துவங்கியது.
அவ்வளவு தான். வெயில் குறைந்து மழை பொழிய ஆரம்பித்தது.
உணவு தயாரிப்பு தொழில் நடத்திய மருமகனும், மகளும் படாதபாடு பட்டனர். தயாரித்த, நுாடுல்ஸ் உணவை உலர வைக்க முடியவில்லை; விற்பனை பாதிக்கப்பட்டது.
இதைக் கண்டு, 'இப்படியும் வேதனை வர வேண்டுமா... அட கடவுளே... மழை தொலைந்து, வெயில் அடிக்க கூடாதா...' என, வாய்விட்டு கதறினாள் செண்பகவள்ளி.
மழை சற்று ஓய்ந்தது. மகளுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பாமல் புறப்பட்டாள்.
அன்று முதல் மழையை வெறுத்தாள்; மழை பற்றி எண்ணினாலே, இளைய மகளின் கஷ்டம், கண் முன் வந்து நின்றது.
மழையும், வெயிலும் மாறி மாறி வருவது இயற்கையின் ஏற்பாடு.
அதை புரிந்து கொள்ளாமல், மழை, வெயில் காலங்களில் மாறி மாறி புலம்பி தவித்தாள் செண்பகவள்ளி. அவள் நிம்மதியாக சிரிக்க வேண்டுமானால், இயற்கையில் ஏதாவது கோளாறு ஏற்பட வேண்டும். அதாவது வேண்டியவர்களுக்கு வெயிலும், தேவையானவர்களுக்கு மழையும், ஒரே நேரத்தில் கிடைக்க வேண்டும்.
இது, நடக்கிற காரியமா...
அவள் அழுது புலம்பியது, காலதேவதையின் காதுகளில் விழுந்தது.
ஒரு நாள் மாலைநேரம் -
வீட்டு கதவு தட்டும் ஒலி கேட்டது. அழுது கொண்டிருந்த செண்பகவள்ளி திறந்தாள்.
எதிரே, நின்று கொண்டிருந்த தேவதை, 'ஏன் தாயே அழுகிறீர்...' என்று பரிவுடன் கேட்டாள்.
காரணத்தை சொன்னாள் செண்பகவள்ளி. பின், அவளை குறித்து விசாரித்தாள்
'நான் காலதேவதை...'
'அம்மா... என், மகள்களின் கஷ்டத்தைப் போக்குவாயா...'
'சரி; நான் என்ன செய்யணும்...'
'மழையையும், வெயிலையும் தேவைக்கு ஏற்ப, மாற்றி அமைக்க கூடாதா...'
காலதேவதை இடியென சிரித்தாள்.
'ஏனம்மா சிரிக்கிறாய்...' என்றாள் செண்பகவள்ளி.
'உங்க யோசனையைக் கேட்டா, யாருக்குத்தான் சிரிப்பு வராது...'
'ஏன், அப்படி சொல்றே...'
'பகலும், இரவும் மாறி வருவது போல், மழையும், வெயிலும் மாறி மாறி வரும். இது, இயற்கையின் நியதி. இதில், எதையும் பிரித்து, பங்கீடு செய்ய முடியாது. காலத்தை புரிந்து, அதற்கேற்ப நடப்பது தான் புத்திசாலித்தனம்...'
'நீ சொல்றது சரி தான்... அப்படின்னா... என் கவலை தீர வழியே இல்லையா...'
'நீங்க மகிழ்ச்சியா வாழுறதுக்கு வழி இருக்கு...'
'என்ன வழி...'
'மழை பெய்யும் போது, உணவு தொழில் செய்யும் மகளை நினைக்காதீங்க...குடை வியாபாரியை மணந்த மகளை நினைச்சுக்குங்க... மழையில் குடை வியாபாரம் அமோகமாக நடக்கும்; அவங்க மகிழ்ச்சியை எண்ணி பாருங்க...
'வெயில் காலத்தில், நுாடுல்ஸ் உணவு தயாரிக்கும் மருமகனையும், மகளையும் நினைச்சுக்குங்க... இப்படி மனம் பக்குவப்பட்டா, கவலைப்பட தேவையே இருக்காது... சிரிச்சிட்டே இருக்கலாம்...'
'தேவதையே... உன் வழிகாட்டலுக்கு ரொம்ப நன்றி...' என்றாள். காலதேவதை மாயமானாள்.
அன்று முதல், செண்பகவள்ளின் கண்களில், ஆனந்த கண்ணீர் மட்டுமே வந்தது.
குழந்தைகளே... சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் எப்போதும் மகிழ்ச்சியாக வாழலாம்.