திரும்ப தரும் பிரபஞ்சம்!
யாருக்கு எதைச் செய்தாலும், 'திரும்பக் கிடைக்குமா' என்று யோசித்தால், வாழ்க்கை, கணிதவியலாக மாறிப் போகும். ஏமாற்றத்தில் நிம்மதி தொலையும். நேசத்துடன் செய்யும் எந்த உதவிக்கும் பொருந்தாது, வியாபாரக் கணக்கு.
எதிர்பார்ப்பு இன்றி ஒருவருக்கு உதவி செய்தால், தேவைப்படும் நேரத்தில், எந்த வடிவிலாவது, பலன் வந்து சேரும். திருப்பிக் கொடுக்கும் பொறுப்பை, பிரபஞ்சமே ஏற்றுக் கொள்கிறது.
வாழ்வில் கற்ற தவறான பாடங்களை மனதில் கொண்டு, பிரதிபலன் எதிர்பாராமல், உதவினால் தவறு என்றே பலரும் எண்ணுகின்றனர். கசந்த அனுபவம், ஒரு பாடம். அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதையே, பிறரும் அனுபவிக்க வேண்டும் என எண்ணக்கூடாது.
பலர், 'என்ன கிடைக்கும்' என்ற மனக் கணக்குக்கு விடை தேடிய பின்னரே உதவிக்கரம் நீட்ட முன் வருவர். அதன் பின்னரும், 'உண்மையிலே உதவி பெறும் தகுதிபுடையவரா' என்ற சந்தேகத்தில் அமைதி இழந்து தவித்து புழுங்குவர். இப்படி உதவு நினைப்பதில் பலன் ஏதும் இல்லை.
உதவி பெறுவதிலும் கூட அதே மனநிலை வந்துவிடும். யாராவது, அன்பாக உதவ முன் வந்தால் கூட, 'எதையோ எதிர்பார்த்துதான் இதை செய்கிறார்' என்றே மனம் கணக்குப் போடும். இது நேசிப்பதையோ, நேசிக்கப்படுவதையோ தடுத்து, தனிமைப்படுத்திவிடும்; வாழ்வை வெறுமையாக்கி மன உளைச்சலுக்கு வழி வகுத்து விடும்.
போதாக்குறைக்கு, 'என்னென்னவோ உதவிகள் செய்தேன்; பதிலுக்கு எதுவுமே கிடைக்கவில்லை' என்று புலம்பி தவித்து மனம் வாடும்.
உலகில், 90 சதவீத மக்கள், மன நிறைவு இன்றி தவிக்கின்றனர். இதற்கு காரணம், படிப்பில் குறைபாடோ, பதவியில் திருப்தியின்மையோ, பொருள் வசதி குறைபாடோ இல்லை; உதவ மனம் இன்றி இறுக்கமாகி விடுவது தான், என்கின்றன ஆய்வுகள்.
சிறு புன்னகையோ, வழிகாட்டும் ஒற்றை விரலோ... எதுவாக இருந்தாலும் மனப்பூர்வமாகச் செய்தால் நிறைவு கிடைக்கும். எதிர்பார்ப்பு இன்றி நேசிக்க கற்றுக் கொண்டால் மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டிருக்கும்!
வாழ்வில் முக்கியமாக கவனிக்க வேண்டியது...
உதவி செய்து விட்டு, 'நன்றியில்லை' என புலம்புவதால் பயன் ஏதும் இல்லை. மனதறிந்து, யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது மிகவும் நல்ல பண்பு. நற்செயலுக்கு, நற்பலன் கிடைப்பது போல், தீச்செயலுக்கும் உரிய பலனை தந்தே தீரும் பிரபஞ்சம்.
மகிழ்ச்சி என்பது, உள்ளுக்குள் நிறையும் உணர்வு. அதை மறந்து, பொருளிலும், புகழிலும் தேடுவது அறிவீனம்.
டாலர் ஆனது 'தால்!'
உலகிலேயே முக்கிய பணமாக, 'டாலர்' உள்ளது. பல நாடுகளில் புழக்கத்தில் இருந்தாலும், அமெரிக்கா தான், 'டாலர் தேசம்' என அழைக்கப்படுகிறது. இதன் வரலாற்றை பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளான, பிரிட்டன், டச்சு, ஜெர்மனி வியாபாரிகள் வருவதற்கு முன், அமெரிக்கப் பழங்குடிகளிடம், நாணய மாற்றுமுறை இல்லை. டச்சு வணிகர்களால் தான், இங்கு பண புழக்கம் தொடங்கியது.
டச்சு நாணயங்கள், 16ம் நுாற்றாண்டில் அமெரிக்காவிலேயே அச்சடிக்கப்பட்டன. அமெரிக்கா, பொஷிமியா, செயிண்ட் ஜோஹிம்ஸ் தால் என்ற பகுதியில்தான் டச்சு நாட்டு, வெள்ளி நாணயங்கள் அச்சாகின. ஜெர்மன் மொழியில், 'தால்' என்றால், 'பள்ளத்தாக்கு ' என்று பொருள். தால் பகுதியில் அச்சானதால், இந்த நாணயங்கள், 'ஜோஹிம்ஸ் தாலர்' என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அது சுருங்கி, 'டாலர்' என்றானது.
பின்னாளில், வட அமெரிக்கா முழுவதும், பிரிட்டன் வசமானது. இதையடுத்து, பிரிட்டன் நாணயங்கள் புழக்கத்துக்கு வந்தன. அமெரிக்கா விடுதலை பெற்றதும் சீரமைக்கப்பட்ட நாணயம், ஜூலை 6, 1785-ல் வெளியானது. 100 சென்ட்: 1 டாலர் என்ற அளவில் புழக்கத்துக்கு வந்தது.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வே, தென் அமெரிக்க நாடான, ஈக்குவேடார், வட அமெரிக்க நாடான பனாமா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, 10 நாடுகளில் புழக்கத்தில் இருந்து, உலகையே ஆட்டிப்படைக்கிறது, டாலர் நாணயம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு