வேளநாட்டு மன்னர் மகுடபதி, காட்டுப் பகுதிக்கு, இயற்கையை ரசிக்கச் சென்றார். எழில் கொஞ்சும் வனத்தை சுற்றி பார்த்து திரும்பியபோது, ஒரு சிறுவனைக் கண்டார்.
ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தவனிடம், 'ஆடு ஒன்று தேவைப்படுகிறது; விலைக்கு தருகிறாயா...' என்றார் மன்னர்.
'மந்தையின் முதலாளி, பக்கத்து கிராமத்தில் இருக்கிறார்; அவரிடம் கேட்டு, வாங்கி கொள்ளுங்கள்...' என்றான் சிறுவன்.
'இவ்வளவு ஆடுகள் இருக்கிறதே... இதில், ஒன்று குறைந்தால், உன் முதலாளிக்கு தெரியவா போகிறது. அப்படியே தெரிந்தாலும், காட்டு மிருகம் அடித்து கொன்று விட்டது என்று சொல்லி சமாளிக்கலாமே; ஏன் தயங்குகிறாய்...' என்று வற்புறுத்தினார்.
சிரித்தபடியே, 'நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்; பிறர் பொருளை அபகரிப்பது நியாயம் என்றா கருதுகிறீர்கள்; மனசாட்சிப்படி நடப்பவன் நான். ஆட்டை தர மாட்டேன்...' என்றான்.
அவன் மன உறுதியை வியந்த மன்னர், மந்தை முதலாளியை சந்தித்தார். சிறுவன், அவருக்கு அடிமையாக இருப்பதை அறிந்தார். கேட்ட பணத்தைக் கொடுத்து மீட்டார்.
மன்னரே தேடி வந்து மீட்டது முதலாளிக்கு பெரும் ஆச்சரியம் தந்தது. அவர், 'அறிமுகமே இல்லாத சிறுவனுக்காக ஏன், இவ்வளவு சிரமம் எடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
சிறுவனின் நேர்மையை புகழ்ந்த மன்னர், 'இத்தகையவர்களை காண்பது அரிது; இது போன்றோருக்கு எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்... எந்த பதவியிலும் அமர்த்தலாம்...' என்றார்.
ஆடுமேய்த்த சிறுவனை அழைத்து வந்து, முறையான பயிற்சி கொடுத்து மந்திரி பதவியில் அமர்த்தினார் மன்னர். அந்த நாடு செழித்தது.
குழந்தைகளே... நேர்மைக்கு எந்த இடத்திலும் மதிப்பு உண்டு. நேர்மையை கடை பிடிப்பவர், காட்டில் இருந்தாலும் உயர்ந்த பதவி தேடி வரும் என்பதை இந்த கதை மூலம் அறியுங்கள்.
பூங்கோதை சந்திரசேகரன்