மை டியர் பிளாரன்ஸ்...
தனியார் பள்ளியில் பணிபுரியம் ஆசிரியை நான். எனக்கு, இரண்டு குழந்தைகள். மூத்தவள், 4ம் வகுப்பு படிக்கிறாள். இளையவன், 3ம் வகுப்பு படிக்கிறான். கணவர் மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறார்.
வீட்டுக்கு அடிக்கடி என் அண்ணன் வருவார். அப்போதெல்லாம், 'என் மருமகன், மருமகளுக்கு நீச்சல் கத்துக்கொடு; இந்த உலகேம நீரில் மூழ்கினாலும் உன் பிள்ளைகள் நீந்தி பிழைத்து கொள்வர்...' என்பார். மழுப்பலாய் தலையாட்டி வைப்பேன்.
இது பற்றி என் கணவரிடம் பேசினால், 'நான் எல்லாம் நீச்சல் கத்துக்கிட்டா, 40 வயசுவரை குப்பை கொட்டிக்கிட்டு இருக்னே. நீச்சல் கத்துக்கிறது கிரிமினல் வேஸ்ட்!' என்று கத்தரித்து விடுகிறார்.
குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தரலாமா என, நல்ஆலோசனை சொல்.
பிரியமுள்ள அம்மா,
நாம் நிலத்தில் வாழும் உயிரினம். மீன்கள் நீரில் வாழும் உயிரினம். தவளைகளோ நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். நீச்சல் கற்றுக் கொண்டால் நாமும் நிலத்திலும், நீரிலும் வாழும் உயிரினம் ஆகிவிடுேவாம்.
ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் நின்று குளிப்பதை விட, நீரில் நீந்தி குளிப்பது சுகமானது. நீச்சல், மனிதருக்கு கூடுதலாக இரு கை, கால்களை பரிசளிக்கிறது.
நீச்சலின் அருமை பெருமைகளை கேளுங்க...
* எல்லா வயதினருக்கும் உகந்தது நீர் விளையாட்டு
* ஆஸ்துமா நோய் பாதிப்பிருந்தால், தினம், 30 நிமிடம் நீந்தினால் குணமாகும்
* கர்ப்பிணி பெண் கூட நீந்தலாம்
* தினம் நீந்தினால் சுகமான துாக்கம் வரும்
* நீச்சலில் ஈடுபவருக்கு, 'எண்டார்பின்' அதிகம் சுரந்து குதுாகலமான மனநிலை ஏற்படும்
* நீச்சலிலால், வயிற்றிலும், புட்டத்திலும், தொடையிலும் இருக்கும் ஊளை சதை குறைந்து, கச்சிதமாக காட்சியளிப்பர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்
* தினமும் நீந்தினால் தோல் பளபளப்பாகும். இதயதுடிப்பு அதிகரித்து உடலில் அழுத்தங்கள் அகலும்
* நீந்த தெரிந்தவருக்கு தசைபலம், இருதயபலம் கூடும்
* சைக்கிள் ஓட்டுவதை விட, நடைபயிற்சியை விட, நீச்சல் முழு உடலுக்கும் நன்மை பயக்கும்.
பெரும்பாலான சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கி இறக்கின்றனர். நகரத்து இளைஞர்கள் கடலில் மூழ்கி இறக்கின்றனர். நீச்சல் தெரிந்தால் இவ்வகை அகாலமரணங்களை தவிர்க்கலாம். நீந்த தெரிந்த மாணவர்களுக்கு, கடல், கப்பல் சார்ந்த பணிகள் எளிதில் கிடைக்கும்.
கிராமத்தில் இருந்தால், முதுகில் மண்ணெண்ணெய் டின் கட்டி கிணற்றில் இறக்கி நீச்சல் கற்றுத்தரலாம். நகரங்களில் அந்த வாய்ப்பில்லை. முதலில் நகரிலுள்ள நீச்சல் குளங்களை ஒன்று விடாமல் பார்க்கவும். பள்ளிநேரம் பாதிக்காமல், எந்த நேரத்தில் நீச்சல் கற்று தரலாம் என்பதை யோசிக்கவும்.
குளத்திலுள்ள நீரை அடிக்கடி மாற்றுகிறார்களா; சுகாதாரமாக இருக்கிறதா; தகுதியான பயிற்சியாளர் இருக்கிறாரா போன்ற விவரங்களை கவனக்கவும். கட்டண விவரத்தையும் விசாரித்து தெரிந்து கொள்ளவும். இரு குழந்தைகளையும் நீச்சலுக்கு கூட்டி சென்று, அழைத்துவரும் பணியை நீங்களே மேற்கொள்ளவும்.
அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ், தமிழகத்தின் குற்றாலீஸ்வரன் போன்ற நீச்சல் வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து கூறினால் ஆர்வத்தை ஏற்படுத்தும். மகனும், மகளும் டால்பின்களாய் நீந்தி களிக்கட்டும்.
- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.