ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளியில், அம்பாளுக்கு பொங்கலிட்டு வழிபடுவர். ஆனால், காஞ்சிபுரம், வைசூர சம்ஹாரி எனும் சந்தவெளி அம்மனுக்கு, ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கலிடும் வித்தியாசமான வழக்கம் உள்ளது.
காஞ்சிபுரத்தில், காமாட்சியம்மன் தவமிருந்தபோது, அவளது தவத்துக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, அஷ்ட சக்திகளை (எட்டு சக்திகள்) காவல் தெய்வமாக உருவாக்கினாள். அவர்களை, நகரின் எட்டுதிக்கு எல்லையிலும் நிறுத்தினாள். அவர்களில் ஒருத்தியே சந்தவெளி அம்மன்.
சந்திர புஷ்கரணி தீர்த்தம் அருகே, இவளது கோவில் அமைந்ததால், 'சந்திரவெளி அம்மன்' என, அழைக்கப்பட்டாள். இவளது பெயர் மருவி, 'சந்தவெளி அம்மன்' எனப்பட்டது. இவளை, 'வைசூர சம்ஹாரி' என்றும் அழைப்பர். இந்த அம்பாளையும், சந்திரமவுலீஸ்வரரையும் வழிபட்டு வந்துள்ளார், காஞ்சி, மகா பெரியவர்.
கைலாயம் வந்த சந்திரன், விநாயகரின் உருவத்தை பார்த்து, கேலி செய்தான்.
'யானை முகம், குறுகிய கால்கள், தொப்பை வயிறு... இப்படி கூட ஒருவன் இருப்பானா...' என்ற அவனது கேலி, விநாயகரை, கோபத்திற்கு உள்ளாக்கியது.
'சந்திரனே, நீ அழகானவன் என்ற கர்வத்தின் காரணமாகத்தானே, இவ்வாறு என்னை கேலி செய்தாய்... இனி, நீ இருளாகிப் போவாயாக...' என, சபித்து விட்டார்.
சிலர், அழகில்லாமல் இருக்கலாம்; சிலர், ஊனப்பட்டிருக்கலாம். அது, அவரவர் விதிவசத்தை பொறுத்தது. இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது. இதை, மற்றவர்கள் கேலி செய்யக் கூடாது என்ற அரிய தத்துவத்தை, இந்நிகழ்வின் மூலம் எடுத்துக்காட்டினார், விநாயகர்.
சந்திர ஒளியின்றி இருளானதால், உலக உயிர்கள் சிரமப்பட்டன.
விநாயகரை வேண்டி தேவர்கள் தவமிருந்தனர். அவரது அறிவுரைப்படி, சிவனை சந்தித்தனர். சந்திரனுக்கு ஒளி கொடுத்தார், சிவன்.
இருப்பினும், அவன் செய்த தவறுக்கு தண்டனையாக, 15 நாள் தேயவும், 15 நாள் வளரவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த சந்திரனின் பிறையை, தன் தலையில் சூடினார். இதனால், சிவனுக்கு, சந்திரமவுலி என்ற, பெயர் ஏற்பட்டது. இதற்கு பிறைச்சந்திரனை அணிந்தவர் என்று பொருள்.
இங்கு, சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தத்தை எழுப்பினான், சந்திரன். இதை இப்போது, வெள்ளைக்குளம் என்கின்றனர்.
அமாவாசை, பவுர்ணமியன்று, இங்கு சிறப்பு பூஜை நடக்கும். இந்த பூஜை செய்தால், பூர்வஜென்ம புண்ணிய பலன் கிடைக்கும். சந்திரனுக்குரிய ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கும், சந்திராஷ்டம நேரத்தில் ஏற்படும் மன பலவீனத்தை சரி செய்யவும், அர்ச்சனை செய்யப்படும்.
சூரியனும், சந்திரனும் நண்பர்கள். சந்திர ஸ்தலமான இங்கு, தன் நண்பனுக்குரிய ஞாயிற்றுக்கிழமைகளில், தட்சிணாயண காலத்தின் துவக்கமான ஆடியில், பொங்கல் இட்டால் சகல வளமும் கிடைக்கும் என, அருளினான், சந்திரன்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்திலுள்ள, குஜராத்தி சத்திரம் ஸ்டாப் அருகில் கோவில் உள்ளது.
தி. செல்லப்பா