ஹலோ ஹலோ...
என் உறவினர் பெண்ணிற்கு, அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண்ணிற்கு மொபைல் பரிசளித்தார், மாப்பிள்ளை. தினமும் இருவரும் பேச ஆரம்பித்தனர்.
'எந்த ஊரில் செட்டில் ஆவீர்கள்...' என, கேட்டதற்கு, அயல்நாடு போக ஆசை இருப்பதாக, ஒருநாள் கூறியுள்ளார், மாப்பிள்ளை.
தனக்கு, ஐ.டி., வேலை கஷ்டமாக இருப்பதாகவும், வேலையை விட்டு விட்டு, விவசாயம் செய்ய விரும்பவதாகவும் இன்னொரு நாள் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேசியுள்ளார், மாப்பிள்ளை.
நிலையில்லாத மனமும், அடுத்தவர்களின் ஆலோசனையும் கேட்காத இவரது தன்னிச்சையான போக்கை கருத்தில் கொண்டு, 'எனக்கு விருப்பமில்லை...' என, திருமணத்தை நிறுத்தி விட்டார், மணப்பெண்.
மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்து, 'எங்க பையன் என்ன சொல்லிட்டான்னு, திருமணத்தை நிறுத்திட்டீங்க...' என்று கேட்க, நடந்ததை கூறியுள்ளனர்.
போன் பேசுவதால் ஏற்படும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளால், பல திருமணங்கள் நின்று போகிறது. போனில் நிபந்தனை போடும் கலாசாரமும், இன்று வந்து விட்டது.
திருமணத்திற்கு முன்பே, இதுபோன்ற விஷயங்களை தீர விசாரித்து, அதன்பின் நிச்சயம் செய்வது நல்லது!
- கார்த்திகேயன், வந்தவாசி.
காற்றுள்ள போதே...
அண்மையில், என் தோழி, தன் மாதாந்திர பிரசவ பரிசோதனைக்காக, தனியார் மருத்துவமனைக்கு சென்றாள். அங்கிருந்த செவிலியர், அவளிடம், மருத்துவ பரிசோதனைக்கான, 'பில்' தந்தனர்.
'பில்'லை வாங்கிய தோழி, அதில், கூடுதலாக, 'கோவிட் - 19 நோய் தடுப்பு மருந்துக்கு...' என, கணிசமான கட்டணம் போடப்பட்டிருந்ததைப் பார்த்து, அதிர்ந்துள்ளாள்.
'அப்படி எதுவும் எனக்கு நோய் தடுப்பு மருந்து தரப்படவில்லையே... இந்த கட்டணம் எதற்கு...' என, கேட்டுள்ளாள்.
'நீங்கள் மருத்துவமனைக்குள் வரும்போது, வாசலில், உங்கள் கையில் தெளிக்கப்பட்ட மருந்திற்கு தான் அது...' என, விளக்கம் அளித்திருக்கிறார், அங்கிருந்தவர்.
'இரண்டு மூன்று சொட்டு, 'சானிடைசர்' விட்டதற்கா, இவ்வளவு கட்டணம். இந்த தொகையில், முழு பாட்டில், 'சானிடைசர்' ஐந்து வாங்கி விடலாமே... நுாதன கொள்ளை அடிக்கிறீர்களா...' என்று சத்தம் போட்டுள்ளாள்.
சத்தம் கேட்டு வெளியே வந்த மருத்துவரிடம், நியாயம் கேட்டுள்ளாள், தோழி.
'இதெல்லாமா கேப்பீங்க...' என்றவாறே, 'அந்த கட்டணத்தை கழித்து, மிச்சத்தை கொடுத்துட்டு போங்க. இனி, இங்கே வராதீங்க...' என்றிருக்கிறார், மருத்துவர்.
'நல்லாருக்கே... நியாயத்தை கேட்டா, இப்படியா... 'கொரோனா' வந்தது தான் வந்துச்சு, ஏமாந்த ஜனங்கள்ட்ட இப்படியா ஒரேயடியா கொள்ளையடிக்கணும்...' என்று புலம்பியபடியே வந்திருக்கிறாள், தோழி.
டி.எச்.லோகாவதி, மதுரை.
நேர்மையை வளர்ப்போம்!
நான், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எங்கள் மாணவர்களுக்கு, நேர்மையாக இருக்க அறிவுரை கூறுவோம். அதை நடைமுறைபடுத்த ஒரு யோசனை தோன்றியது.
மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் மிட்டாய் வகைகள் ஆகியவற்றை வைத்து, பள்ளி வளாகத்தில் ஒரு கடை அமைத்தோம்.
'கண்காணிப்பாளர்கள் யாருமின்றி, மாணவர்களே தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு, அவற்றிற்கு உரிய தொகையை அங்கே உள்ள பெட்டியில் போட்டுவிட வேண்டும்...' என, கூறினோம்.
அதை சரியாக பின்பற்றி, நேர்மையானவர்கள் என நிரூபிக்கின்றனர், மாணவர்கள்.
இந்த நேர்மை அங்காடியை பார்த்து, அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.
மற்ற பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்தலாமே!
கு. அபிராமி, தேவகோட்டை.