'லோ பட்ஜெட்'டில் படம் எடுக்க, என்னை போன்றவர்களை தான் தேடுவர். 8 லட்சம் ரூபாய் இருந்தால் போதும், ஒரு படம் எடுத்து, சுமாரான லாபம் பார்த்து விடலாம்.
மெட்ராஸ் பாஷை பேசும் ஒரு தடாலடி பெண் தயாரிப்பாளரான, அமுதா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்காக, அத்தையா மாமியா என்ற படத்தை, கதை, வசனம் எழுதி இயக்கினேன்.
அத்தை வீட்டாரும், மாமி வீட்டாரும், தங்கள் வீட்டு பெண்ணை, ஜெய்சங்கருக்கு கட்டிக்கொடுக்க போட்டி போடுவர். ஆனால், அவரோ வேறு ஒரு பெண்ணை காதலிப்பார். நகைச்சுவையை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தேன். நான் ஏற்கனவே சொன்னது போல, என் திருமண அனுபவமும் இந்த படத்தில் இருந்தது.
பொதுவாக எனக்கு ஆடம்பரம் துளியும் பிடிக்காது; எளிமையாக இருப்பதும், அப்படியே வாழ்வதும் தான், என் பாணி. இத்தனை படத்தில் பணியாற்றியும், கார் வைத்துக் கொண்டது இல்லை.
ஒரு முறை, 'செகண்ட் ஹாண்ட்' அம்பாசிடர் கார் வாங்கினேன். அது வைத்த செலவை பார்த்து, 'முதல்ல, அத வித்துட்டு வந்து என்கிட்ட பேசுங்க...' என்றார், மனைவி. அதை விற்ற பிறகு தான், பேசவும் செய்தார். அதன்பின், கார் ஆசை வரவும் இல்லை; வாங்கவும் இல்லை.
சினிமாக்காரனாக இருந்தாலும், எப்போதும் வேட்டி, சட்டை தான் அணிவேன்; செருப்பு தான் பழக்கம். இப்படிப்பட்டவனுக்கு, கோட் - சூட் போட்டு, ஷூ அணியும் கொடுமை, சிவந்த மண் படத்திற்காக நடந்தது. அந்த கதையை அப்புறம் சொல்கிறேன்; இப்ப, அமுதா கதைக்கு வருகிறேன்...
பார்த்த முதல் நாளே, 'இன்னா, டைரக்டருய்யா நீ... டைரக்டருன்னா, ஒரு பந்தா வேணும் சார்... சும்மா வேட்டி கட்டிகினு, வெத்திலை பாக்கு போட்டுக்கினுகீறே... சித்ராலயா கோபுன்னு உன் பேரைக் கேட்டு, நான் எம்மாம் துாரம் அசந்திருக்கேன் தெரியுமா... நீ என்னடான்னா தவுசுப் புள்ள கணக்கா நிக்கிறே...' என்றார்.
'படம் ஆரம்பிக்க போறீங்க... 'பிளான்' எல்லாம் பண்ணிட்டீங்களா... பணம் எல்லாம் தயாரா வச்சுருக்கீங்களா...' என்று கேட்டேன்.
'அதப்பத்தி நீயேன் டைரக்டரு பயப்படற... நாலைஞ்சு சீட்டு கட்டிகினு வர்றேன். எல்லாம், 50 ஆயிரம் ரூபாய் சீட்டு. தேவைப்படும் போது, பணத்தை கொண்டாந்திருவேன்; படத்தை, 'ரீஜெண்டா' முடிப்பேன்...' என்றார்.
பட சம்பந்தமாக அவர் வீட்டிற்கு போனால், 'முதல்ல, மசாலா டீ குடி...
படம் பத்தி அப்பால பேசலாம்...
படம் எங்கே போயிடப் போகுது...' என்பார்.
'யோவ், வஜ்ரம்... என்னய்யா, பணத்தை கண்ணுல காட்ட மாட்டேங்கிற... 'அண்டர்கிரவுண்ட்'ல பூட்டுயா, நான் வரட்டா...' என்று, யாருக்காவது போன் போடுவார்.
அவர், அப்படி தடாலடியாக பேசினாலும், படப்பிடிப்பு நிற்காமல் பார்த்துக் கொண்டார்.
அவர் பேச்சும், நடவடிக்கையும் தான் அப்படியே தவிர, நல்ல குணம் கொண்டவர். எனக்கு கொஞ்சம் பாக்கி தர வேண்டியிருந்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல், படத்தை முடித்துக் கொடுத்து, வந்து விட்டேன். பொதுவாக, அது மாதிரி பாக்கி பணம் எல்லாம் கோவிந்தா தான்.
ஆனால், படம் சுமாராக ஓடி, லாபம் வந்தவுடன், 'இன்னா, கோபு சார்... எப்படிகீரே...' என்று கேட்டு, வீடு தேடி வந்து, பழத்தட்டில் பாக்கி பணத்தை வைத்து, கொடுத்துட்டுப் போனார்.
இவர் இப்படி என்றால், சினிமா ஆசையில், தங்களையும் சிரமப்படுத்தி, எங்களையும் சிரமப்படுத்தியவர்களும் உண்டு.
எட்டு லட்சத்துக்குள் எடுக்கக்கூடிய, 'லோ பட்ஜெட்' படம் அது. படத்திற்கு, நான்கு தயாரிப்பாளர்கள் இருந்தும், பணத்தை புரட்ட முடியாமல், மூன்று ஆண்டு இழுத்தனர். படத்திற்கு பெயர், ராசி நல்ல ராசி. ஆனால், எங்களுக்கு தான் சுத்தமாக ராசியில்லை.
அப்படி, இப்பிடி என, பணத்தை எடுத்து வரும்போது, படத்தின் ஒரு நாயகி கர்ப்பமாக இருந்தார்.
'என்ன சார்... கதைப்படி, இவர் டான்சர், இப்படி கர்ப்பமா இருக்கிறாரே...' என்றனர்.
'மூன்று ஆண்டுகளா படம் எடுத்தா அப்படி தான்...' என்றேன்.
கடைசியில், 'கிளைமாக்சில்' வரவேண்டிய நடிகர்கள் பலர், பண பாக்கியால் வரவில்லை. அவர்கள் புகைப்படத்தை வைத்தும், 'டூப்' போட்டும், காட்சிகளை இருட்டாக்கியும், ஒரு வழியாக எடுத்து முடித்தோம்.
'படத்திலேயே, அந்த காட்சி தான் பிரமாதம்...' என்று, விமர்சனம் வேறு; படமும் லாபத்தை தந்தது. உச்ச பட்ச லாபமும், பெருத்த நஷ்டத்தையும் கொடுத்த ஒரு படத்தை பற்றி, அடுத்த வாரம் சொல்கிறேன்.
சுருளிராஜன் பட்டபாடு!
படத்தை முடிக்க, சுருளிராஜன் நடித்து கொடுக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது.
'அவருக்கு, 2,000 ரூபாய் கொடுங்கள், நடித்து கொடுத்துவிடுவார்...' என்றேன்.
சிரமப்பட்டு புரட்டிக்கொண்டு வந்து கொடுத்தனர்.
பிறகு, அவர் சேலத்திற்கு அவசரமாக புறப்பட்ட போது, 'நாங்களும் அங்கு தான் போகிறோம்... உங்களை பத்திரமாக இறக்கி விட்டுர்றோம்...' என்று ஏற்றிச் சென்றனர்.
போகும் வழியில், 'காருக்கு பெட்ரோல் போடணும், 300 ரூபாய் கொடுங்க, சேலம் போனதும் வாங்கி தருகிறோம்...' என்று, கேட்டு வாங்கிக் கொண்டனர்.
அடுத்து, 'டிபன் சாப்பிட்டதும், 'பில்' பணம், 200 ரூபாயும், ஊர் போனதும் தர்றோம்...' என்று வாங்கிக் கொண்டனர். வழியில், 'வண்டி, 'ரிப்பேர்' ஆகி விட்டது, 500 ரூபாய் கொடுங்க...' என்று, வாங்கிக் கொண்டனர்.
இப்படியே ஊர் போவதற்குள், 2,000 ரூபாயையும் வாங்கிக் கொண்டனர்.
ஊரை நெருங்கும் நேரத்தில், 'டீ சாப்பிடலாமா...' என்று கேட்டனர்.
'டீயும் வேண்டாம்; காரும் வேண்டாம்...' என்று இறங்கி, கிடைத்த பஸ்சை பிடித்து, ஊர் சேர்ந்திருக்கிறார்.
— தொடரும்
எல். முருகராஜ்