கால் வரை போர்வையை போர்த்தியபடி, படுத்திருந்தாள், பத்மா.
''அம்மா, என்ன சமைக்கட்டும்,'' என்றாள், உதவிப் பெண்.
''ஐயா, என்ன காய்கறி வாங்கிட்டு வந்திருக்காரு?''
''முருங்கை, பீன்ஸ், கத்திரிக்கா, புடலங்கா, எல்லாமே இருக்கு.''
''சரி, முருங்கைக்காய் சாம்பார் வச்சு, பீன்ஸ் பொரியல் பண்ணிடு,'' என்றாள்.
காலை, 8:00 மணிக்கு உதவிக்கு வரும் பெண், படுக்கையில் இருக்கும், பத்மாவிற்கு 'டவல்-பாத்' கொடுத்து, வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
ஹாலில் உட்கார்ந்திருந்தார், ஜெகநாதன். வயது, 75ஐ நெருங்குகிறது. மனைவி பத்மா, நான்கு மாதமாக படுக்கையில் கிடப்பது, அவருக்கு மிகுந்த மனச் சோர்வை தந்தது.
பத்மாவுக்கு வயது, 68. நான்கு மாதம் முன்வரை கை வலி, கால் வலியோடு நடமாடி கொண்டிருந்தவள் தான். 'ஷுகர், பிரஷர்' தொந்தரவுகளும் இருந்தது. 'ஆர்த்தடீஸ்' மற்றும் எலும்பு தேய்மானம், என்ன செய்வது...
'டெங்கு' காய்ச்சல் வந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாள். காய்ச்சல் குணமாக, கை, கால் வலி அதிகமாயிற்று.
'இப்ப உங்க மனைவிக்கு, 'ஷுகர், பிரஷர்' எல்லாம் நார்மலுக்கு வந்தாச்சு. காய்ச்சல் குறைஞ்சுடுச்சு. இனி, வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம். காய்ச்சல் வந்ததில் கை, கால் மூட்டுவலி அதிகமாயிருச்சு.
'மாத்திரை கொடுத்திருக்கேன். 10 நாள் ஓய்வு எடுக்கட்டும். அப்புறம் மெதுவா நடக்க சொல்லுங்க, சரியாயிடும். தேவையானால், 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை தரலாம்...' என்றார், டாக்டர்.
நடக்கவே முடியவில்லை என, பத்மா தடுமாற, 'ஸ்ட்ரெச்சரில்' தான் அழைத்து வந்து படுக்க வைத்தார்.
அன்றிலிருந்து இப்போது வரை, எல்லாமே படுக்கையில் தான். 'ஹோம் நர்சிங் கேரில்' சொல்லி, அவளை கவனிக்க, ஒரு பெண் ஏற்பாடு செய்தார்.
கட்டிலுக்கு எதிரில் மாட்டப்பட்டிருக்கும், 'டிவி'யில், 'சீரியல்' பார்த்தபடி படுத்திருந்த பத்மாவிடம், ''பிசியோ தெரபிஸ்டை இன்னைக்கு வர சொல்லட்டுமா,'' என்றார், ஜெகநாதன்.
''எதுக்கு தண்டமா, அவங்களுக்கு பணம் செலவு செய்யணும். எந்த பிரயோஜனமும் இல்லைங்க... வந்து, கை, காலை மடக்கி, இன்னும் வலியை அதிகரிச்சுட்டு தான் போறாங்க... நான், இனி அவ்வளவு தான். இந்த ஜென்மத்தில் நடமாட்டம் முடிஞ்சுடுச்சு... 'வாக்கர்' வச்சு நடக்கறதுக்கு, இப்படியே இருந்துட்டு போறேன்,'' என, விரக்தியாக பதிலளித்தாள், பத்மா.
மனம் வேதனையுடன், எதுவும் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறினார், ஜெகநாதன்.
துபாயிலிருந்து மகன், மொபைல்போனில் அழைக்க, ''சொல்லு ரவி, எப்படியிருக்கே... மருமக, பேரப் பிள்ளைங்க நல்லா இருக்காங்களா?''
''நாங்க, நல்லா இருக்கோம்பா... அம்மா, எப்படி இருக்காங்க... 'பிசியோதெரபிஸ்ட்' வர்றாங்களா... ஓரளவு, 'வாக்கர்' வச்சு நடக்கறாங்களா?''
''இல்லப்பா. அம்மாகிட்டே எந்த முன்னேற்றமுமில்லை. எல்லாம் படுக்கையில் தான். எது கேட்டாலும் வாழ்க்கையே வெறுத்துப் போனது மாதிரி பேசறா... 'டிவி'யும், அந்த அறையும் தான், அவள் உலகம்ன்னு ஆயிடுச்சு. வயசான காலத்தில், இரண்டு பேரும் நடமாடிட்டு இருந்தோம்; இப்ப அதுவும் இல்லை. கஷ்டமாக இருக்குப்பா.''
''வருத்தப்படாதீங்க, அம்மா குணமாகிடுவாங்க. இரண்டு மாசம் கழிச்சு, எனக்கு, 10 நாள் விடுமுறை கிடைக்கும். அங்கு, அம்மாவுடன் இருந்து அவங்களை நடக்க வைக்கிறேன். நீங்க அம்மாவை நினைச்சு வருத்தப்பட்டு, உடம்பை கெடுத்துக்காதீங்க.''
கைத்தாங்கலாக, பத்மாவை துாக்கி உட்கார வைத்தாள், உதவிப் பெண். சமைத்து வைத்ததை தட்டில் போட்டு, மனைவி முன் வைத்தார். கட்டிலிலேயே சாப்பிட்டு, கை கழுவினாள், பத்மா.
''உங்களுக்கு, நான் பாரமா போயிட்டேன். இல்லையாங்க.''
''அப்படி இல்லை, பத்மா... இந்த வீட்டில், நீ பழையபடி நடமாடணும். அது தான் என் ஆசை. புரியாமல் ஏதாவது பேசாதே. மாத்திரை தரேன், சாப்பிட்டு படு,'' என்றார்.
''ஐயா உங்களை, அம்மா கூப்பிடறாங்க,'' என்றாள், உதவிப் பெண்.
''பத்மா, என்ன வேணும்?''
''யாருங்க போனில்?''
''உன் மாமா மகள், வனஜாவும், அவ வீட்டுக்காரரும், இங்கே பக்கத்தில் இருக்கிற மாரியம்மன் கோவிலுக்கு ஏதோ பிரார்த்தனை நிறைவேத்த வர்றாங்களாம். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போறதா சொன்னாங்க,'' என்றார்.
''வனஜாவுக்கு என்னை விட ஒரு வயது குறைச்சலாக இருக்கும். இன்னும் ஊர், ஊரா சுத்தறா. எனக்கு தான் வாழ்க்கையே அஸ்தமிச்சு போச்சு.''
அவள் புலம்பலை கேட்க முடியாமல் வெளியேறினார்.
''வாங்க, வாங்க,'' காரிலிருந்து இறங்கியவர்களை வரவேற்றார், ஜெகநாதன்.
வனஜா, அவர் வீட்டுக்காரரை தொடர்ந்து, வயதான முதியவள் ஒருத்தி இறங்க, அவளை கைத்தாங்கலாக பிடித்து, இறங்க உதவினார்.
''என்ன மாமா, அப்படி பார்க்கறீங்க... இது, என் மாமியார்,'' என, அறிமுகப்படுத்தினாள், வனஜா.
'டிக்கி'யைத் திறந்து, 'வாக்கரை' அவளிடம் தர, ''வாங்க, பெரியம்மா... நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்,'' என்றார், ஜெகநாதன்.
''இன்னொரு முறையில், பத்மா, எனக்கு மகள்; துாரத்து சொந்தம். அவ முடியாம இருக்கிறதா, வனஜா சொன்னா. அதான் அவளையும் பார்த்துட்டு, கோவிலுக்கு போயிட்டு வரலாம்ன்னு கிளம்பி வந்தோம்.''
''உட்காருங்க, பெரியம்மா.''
''இருக்கட்டும். பத்மா எங்கே இருக்கா... வாங்க, அவளை பார்ப்போம்.''
''என் நிலையை பார்த்தியா, வனஜா. அந்த கடவுள், இரக்கமே இல்லாமல் என்னை படுக்கையில் போட்டுட்டான்.''
''அப்படி சொல்லாதே, சீக்கிரம் குணமாகிடுவே.''
''பெரியம்மா... நீங்களும் என்னை பார்க்க வந்தீங்களா... உங்களுக்கு இருக்கும் பலம் கூட, எனக்கு இல்லாமல் போச்சே.''
''வருத்தப்படாத, பத்மா,'' ஆறுதல் சொன்னாள், பெரியம்மா.
''சரி, எல்லாரும் வாங்க... 'டிபன்' சாப்பிடலாம்.''
''உங்களுக்கு எதுக்கு சிரமம்?''
''இதில் எந்த சிரமமுமில்லை. எங்களுக்கு தயார் பண்றதுடன், கூட இரண்டு பேருக்கு இருக்கு... வாங்க,'' அவர்களை அழைத்தார், ஜெகநாதன்.
''எனக்கு எதுவும் வேண்டாம். ஒரு டம்ளர் காபி மட்டும் எடுத்து வர சொல்லுங்க. நான், பத்மா பக்கத்தில் இருக்கேன். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க.''
''இப்ப உனக்கு என்ன தான் செய்யுது, பத்மா?''
''சுகர், ப்ரஷருக்கு மாத்திரை சாப்பிடுவதால், கட்டுப்பாட்டில் இருக்கு. கை, கால் மூட்டு வலி அதிகமா இருக்கு. நடக்க முடியலை. மருந்து, மாத்திரை, தைலம்ன்னு போட்டுக்கறேன்... 'பிசியோதெரபிஸ்ட்' வந்து, என்னை நடக்க வைக்கிறேன்னு, கை, காலை மடக்கி, வலியை அதிகமாக்கிட்டு போறாரு... இனி, படுக்கையோடு இருந்து சாகப் போறேன். எனக்கு எல்லாம் வெறுத்து போச்சு, பெரியம்மா.''
''எனக்கு, 84 வயசு முடிஞ்சு, 85 ஆகுது. எனக்கு மட்டும் மூட்டு தேய்மானம், வலி இல்லைன்னு நினைக்கிறீயா... எல்லாமே இருக்கு. சொல்லப் போனா, காரில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து வந்ததுல, இடுப்பு எலும்பு வலிக்குது.
''வயசுக்கான முதிர்ச்சி என்கிட்டே இருக்கு. அதனால், என்னால் சமாளிக்க முடியுது. உன்கிட்டே அது இல்லை. அதான் உன்னை படுக்கையில் போட்டுடுச்சு. எல்லத்துக்கும் மனசை தளர விடக்கூடாது. ஒரு வியாதியின் தன்மை குறையணும்ன்னா, எதிர்மறையான எண்ணங்கள் வரக்கூடாது.
''இனி, நடக்க முடியாது. வயசாயிடுச்சு, நான் இருந்து என்ன பிரயோஜனம் என்ற நினைப்பு தப்பு, பத்மா. 'இந்த வலிகளிலிருந்து என்னை நிச்சயம் மீட்டெடுப்பேன். என் மேல் பிரியம் வைத்திருக்கும் கணவருக்காக, எங்கோ கடல் கடந்து இருக்கும் மகன், என் மேல் வைத்திருக்கும் அன்பிற்காக... நான் சீக்கிரம் குணமாகி எழுந்திருப்பேன்'னு, நினைச்சுப் பாரு...
''உன் எண்ணங்களின் வலிமை, உனக்கு புது தெம்பை கொடுக்கும். நம்பிக்கையோடு முயற்சி பண்ணு... உன்னால் முடியும். நீ சீக்கிரம் குணமாகணும்ன்னு, பிரார்த்திக்கும் நல்ல உள்ளங்கள், உன்னை சுத்தி இருக்கு, பத்மா... இதை புரிஞ்சுக்கிட்டா, இந்த வலிகளை நீ ஜெயிக்கலாம்.
''வலி இல்லாத வாழ்க்கை, யாருக்கு இல்லை சொல்லு. எல்லாரும் ஒவ்வொரு வலிகளோடு வாழ்ந்துட்டு இருக்கோம். இப்ப பாரு, என் உடம்பு தொந்தரவை விட, மகன், மருமகளோடு வந்தோம். உன்னைப் பார்த்தோம். அம்மனை கும்பிட்டோம்கிற திருப்தி மட்டும் தான், நான் ஊருக்கு திரும்பும்போது, என் மனசில் நிறைஞ்சிருக்கும்.
''நமக்காக இல்லாட்டியும், மத்தவங்களை சந்தோஷப்படுத்தவாவது, நாம் வாழணும், பத்மா. இதை நீ புரிஞ்சுக்கிட்டால், அடுத்த முறை நான் வரும்போது, நீயே வாசலில் வந்து என்னை வரவேற்பே,'' என்றாள், பெரியம்மா.
''ரவி, ஆச்சரியமான விஷயம். இன்னைக்கு உன் அம்மா, 'பிசியோதெரபிஸ்ட்' உதவியோடு, 4 அடி எடுத்து வச்சா. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு... உங்கம்மா சீக்கிரமே நடமாட ஆரம்பிச்சிடுவான்னு, நம்பிக்கை வந்துடுச்சு,'' என்றார், ஜெகநாதன்.
மகனிடம் பேசுவதை கேட்ட, பத்மா, மகிழ்ச்சி பொங்க கண்ணில் வழியும் நீரை துடைத்தபடியே, கை, கால்களை மடக்கி, நீட்ட ஆரம்பித்தாள்.
பரிமளா ராஜேந்திரன்