கவுதம்மேனன் கனவு பலிக்குமா?
கமலுக்கு, மருதநாயகமும், மணிரத்னத்திற்கு, பொன்னியின் செல்வனும் கனவு படங்கள். அதேபோல், கவுதம் மேனனுக்கு, துருவநட்சத்திரம் கனவு படம். ஆனால், விக்ரமை வைத்து, 2017ல், அவர் இயக்கிய இப்படம், பைனான்ஸ் பிரச்னை காரணமாக கிடப்பில் கிடந்தது. இந்நிலையில், மீண்டும் அப்படத்தை துாசு தட்டப்போவதாக சொல்லும் கவுதம்மேனன், 'துருவநட்சத்திரம் திரைக்கு வந்த பின், ஒவ்வொரு சினிமா இயக்குனருக்கும், இப்படியொரு படத்தை தங்களது கேரியரில் இயக்க வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்!
ரஜினியின், கபாலி படத்தில் நடித்த, ராதிகா ஆப்தே, 'எதிர் காலத்தில், நடிப்பை தாண்டி, சினிமாவில், இயக்கத்திலும் சாதிப்பேன்...' என்று கூறி வந்தார். தற்போது, பாம் ஸ்பிரிங்ஸ் என்ற பெயரில், ஒரு குறும்படம் இயக்கியிருந்தார். அந்த படம், சர்வதேச குறும்பட விழாவில் தேர்வாகி, விருதும் கிடைத்துள்ளது. இதனால், மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ள, ராதிகா ஆப்தே, இந்த செய்தியை வெளியிட்டு, திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். தேடிப் போனது அகப்பட்டது போல்!
— எலீசா
அம்மனாக நயன்தாரா!
மூக்குத்தி அம்மன் படத்தில், அம்மனாக நடித்துள்ள, நயன்தாராவை சிலர், 'மீம்ஸ்' போட்டு கலாய்த்தனர். அவரோ, 'இந்த படம் வெளியாகும்போது, என்னை, பக்தி பரவசத்துடன் கையெடுத்து வணங்குவர். அந்த அளவுக்கு தெய்வீகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன்...' என்கிறார்.
— எலீசா
மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா!
அசைவ நடிகையாக இருந்து வந்த, ஆண்ட்ரியா, திடீரென்று, சைவத்துக்கு மாறி விட்டதாக கொடி பிடித்தார். ஆனால், 'முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு...' என்று, சிலர் அவரைப் பார்த்து கேலி செய்யவே, அதுவும் சரி தான் என்று, இப்போது மறுபடியும் அசைவத்துக்கே வந்து விட்டார். அதன் காரணமாக, ஒரு ஆங்கில வாரப் பத்திரிகைக்கு, 'செக்ஸி' ஆக, 'போஸ்' கொடுத்த அட்டைப்பட புகைப்படங்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், நடிகை. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு!
— எலீசா
ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்!
ஒரு, 'ஹீரோ' வளரவேண்டும் என்றால், அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது, 'கட் - அவுட், பேனர்கள்' கட்டி, பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்த, ரசிகர்கள் அவசியம் வேண்டும் என்பதற்காக, சந்தானமும், தமிழகமெங்கிலும் தனக்கு ரசிகர் மன்றம் உருவாக்கியுள்ளார்.
அதோடு, விஜய், அஜீத் போன்ற முன்னணி, 'ஹீரோ'களின் படங்களைப் போன்று, தன் படங்களுக்கும், 'சோஷியல் மீடியா'வில் பெரிய, 'பிரமோஷன்' கொடுக்க வேண்டும் என்று, ரசிகர் மன்றத்துக்கு ஆணைப் பிறப்பித்துள்ளார். ரசிகர்களுக்கும், தனக்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்த, அவர்கள் வீடுகளில் நடக்கும் விசேஷங்களுக்கும், 'விசிட்' அடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
சுள்ளான் நடிகர் படத்தில் தமிழுக்கு வந்த, கொடி நடிகைக்கு, அதன் பின், தமிழில் படங்கள் இல்லை. ஆனபோதும், கடும் முயற்சிக்கு பின், மீண்டும் அந்த நான்கெழுத்து வாரிசு நடிகர் மூலம் கோலிவுட்டில், 'ரீ - என்ட்ரி' கொடுத்துள்ள நடிகை, நேர் வழியில் போனால் வேலைக்கு ஆகாது என்று, குறுக்கு வழிகளில் இறங்கி இருக்கிறார். அதன் முதல் கட்டமாக, 'மிட்நைட்' மசாலா நடிகையாகப் போவதாக அறிவித்துள்ள நடிகை, சமீபத்தில் சில நரைமுடி தயாரிப்பாளர்களுக்கு,
'மிட்நைட் பார்ட்டி'யும் கொடுத்து, உபசரிப்பு நடத்தியிருக்கிறார். இந்த சேதி, அரசல் புரசலாக பரவியதை அடுத்து, மேலும், பல தயாரிப்பு வட்டாரங்களும், அம்மணியை தேடி, படையெடுக்கத் துவங்கி இருக்கின்றன.
'இன்டர்வியூக்கு நம்முடன் வந்தாளே, அனுபமா, அவள், 'செலக்ட்' ஆகவில்லை என்று தெரிந்ததும், மாற்று வழியை கண்டுபிடித்து விட்டாள்...'
'எப்படி?'
'கம்பெனி நிர்வாகி ஒருவரை, எப்படியோ கைக்குள் போட்டு, வேலையில் சேர்ந்து விட்டாள். மேலும், கம்பெனியில், முக்கிய பதவி வகிக்கும் சிலரையும் வசியப்படுத்தி, வேலையை தக்க வைத்துக்கொள்ள பார்க்கிறாள்...' என்று, தோழியர் இருவர் பேசிக் கொண்டனர்.
சினி துளிகள்!
* தமிழில், கொடி படத்தில் நடித்த, மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன், நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, தற்போது, அதர்வாவுடன், தள்ளிப்போகாதேவில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!