நம் நன்மைக்காக சொல்பவர்களின் பேச்சைக் கேட்டு அதன்படி நடந்தால், கண்டிப்பாக நன்மை விளையும்; தெய்வமே வந்து துயரைத் தீர்க்கும்; சந்தேகமே இல்லை.
பேரையூர் சாந்தலிங்க அடிகள் எனும் மகான், தன் சீடரான, குமாரதேவர் என்பவரை அழைத்து, 'நீ, விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டும்...' என்றார்.
நுண்ணுணர்வு மிக்கவர்; ஞானம் -தெளிவு கைவரப் பெற்றவர்; ஆகவே, குருநாதரின் வாக்கிற்கு இணங்க, விருத்தாசலத்தை நோக்கிப் புறப்பட்டார்; சின்னச்சேலம் எனும் ஊரை நெருங்கினார், குமாரதேவர்.
வழியில், விருத்தாசல ஈசன்- சிவபெருமான், மானிட வடிவம் தாங்கி வந்து, ஓரிடத்தில் தண்ணீர்ப்பந்தல் வைத்துக் கொண்டிருந்தார்.
குமாரதேவர் அங்கு வந்ததும், 'அப்பா... நீ மிகுந்த தாகத்தோடு இருப்பதாகத் தெரிகிறது. இங்கு எம்மிடம் ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், குளத்து நீர் எனும், நான்கு வகை தண்ணீரும் இருக்கின்றன. வேண்டிய மட்டும் குடித்து, தாகத்தை தீர்த்துக்கொள்...' என்றார்.
தாகம் தீர்த்து, அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலத்தை அடைந்த, குமாரதேவர், அங்கே மணிமுத்தாறு கரையில் இருந்த அரச மரம் ஒன்றின் நிழலில் அமர்ந்தார்.
நீண்ட துாரம் நடந்த களைப்பு, குமாரதேவரை வாட்டியது.
அதே நேரத்தில், விருத்தாசலம் கோவிலில், அம்பிகை பெரியநாயகிக்கு, அபிஷேகம் செய்வதற்காக, தங்க பாத்திரத்தில் பசும் பால் எடுத்து வைத்திருந்தனர். அந்த பாலை எடுத்து, ஒரு முதியவள் வடிவில், குமாரதேவரிடம் வந்தாள், அன்னை பெரியநாயகி.
அம்பிகை வந்த நேரத்தில், அசதியில் சற்று கண்ணயர்ந்திருந்தார், குமாரதேவர். அவர் அருகில் உட்கார்ந்தாள், அம்பிகை. மெல்ல குமாரதேவருடைய தலையை துாக்கி, தன் மடியின் மீது வைத்து, தங்க பாத்திரத்தில் இருந்த பாலை, கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினாள்.
தளர்வு நீங்கி சற்று தெம்பு வந்ததும், கண்களை திறந்து பார்த்தார், குமாரதேவர்.
யாரோ ஓர் அன்னை தனக்கு பால் புகட்டி தளர்வு நீக்கியதை கண்டதும், 'அம்மா... நீங்கள் யார்...' என, கேட்டார்.
முதியவள் வடிவில் இருந்த அம்பிகை, 'அப்பா, குமாரதேவா... நான் தான் பெரியநாயகி. நீ எப்போதும் எம்மிடத்திலேயே நலமாக இரு...' என்று, ஆசி கூறி மறைந்தாள்.
தேடி வந்து அருள் செய்த, அம்பிகை பெரியநாயகியின் கருணையை எண்ணி நெகிழ்ந்தார், குமாரதேவர்.
அற்புதமான ஞான நுால்கள் பலவற்றை எழுதியவர், குமாரதேவர்.
தன் நலனுக்காக, குருநாதர் சொன்ன சொல்லை கேட்டு, அதன்படியே நடந்த, குமாரதேவரை தேடி வந்து, ஈசனும் - அம்பிகையும் அருளாடல்கள் புரிந்து, துயர் தீர்த்த வரலாறு இது.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
* சனி பகவானுக்கு, வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது
* ஈரத் துணியை உடுத்தி பூஜைகள், ஜபங்கள் செய்யக் கூடாது.