அன்புள்ள அம்மா -
நான், 23 வயது பெண்; பட்டதாரி. எனக்கு, ஏழு வயது இருக்கும்போதே, அம்மா இறந்து விட்டார். பின், சில தினங்களிலேயே அப்பா, என்னை அனாதையாக விட்டு சென்று விட்டார். அதன்பின், பாட்டி, சித்தப்பா, மாமா வீடுகளில் மாறி மாறி இருந்து வளர்ந்துள்ளேன்.
சிறு வயதில், பல கொடுமைகளை அனுபவித்தேன். பாசத்திற்கு ஏங்கினேன். பெற்றோர் பாசமும், அரவணைப்பும் இல்லாமலே வளர்ந்து விட்டேன்.
நான், 10ம் வகுப்பு படிக்கும்போது, இறந்து விட்டார், அப்பா. அந்த சமயத்தில் தான், என் அத்தை மகனுடன் காதல் கொண்டேன். ஐந்து ஆண்டுகள், காதல் தொடர்ந்தது. இருவரும் சண்டை போட்டுக் கொள்வோம். பின், நானே சென்று பேசி, சமாதானம் ஆவேன்.
பி.இ., படிக்கும்போது, கல்லுாரி சீனியர் ஒருவர், என்னை விரும்புவதாக கூறினார். அவரின் பாசத்தை இழக்க விரும்பாத நான் ஒப்புக்கொண்டேன். அதன் பின், எனக்கும், அத்தை மகனுக்கும் பிரச்னை வந்து, பிரிந்து விட்டோம். பின், ஒரு வருடம், சீனியரை காதலித்தேன்; காலம் செல்ல செல்ல அவருடனும் பலமுறை சண்டைகள் வரவே, நான் உடைந்து போனேன்.
ஒரு விழாவில், அத்தை மகனை சந்திக்கவே, பழைய காதல் நினைவிற்கு வந்தது. நான் செய்த தப்பு புரிந்தது. அவனும், மறக்காமல் என்னை விரும்புவதை தெரிந்து கொண்டேன். இப்போது, இருவரையும் இழக்க விரும்பாமல், தினமும் அழுது கொண்டுள்ளேன்.
இருவரும், என்னை உண்மையாக விரும்புகின்றனர். என் சீனியர், வேறு ஜாதியை சேர்ந்தவர். இப்போது எனக்கு, என்ன செய்வது என தெரியவில்லை.
'நான் இல்லையென்றால், தற்கொலை செய்து கொள்வேன்...' என்கிறார், சீனியர்.
என்னால் இப்போது எந்த பக்கமும் செல்ல முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
பிரபலமான விளையாட்டு வீரரை கண்டால், காதல்; ஐம்பது அடியாட்களை வீழ்த்தும் தமிழ்பட கதாநாயகனை கண்டால், காதல்; புதுக்கவிதை எழுதும் ஜோல்னாப் பையனை கண்டால், காதல்.
பைக் சாகசம் செய்யும் தெருப்பொறுக்கியை கண்டால், காதல்; ஆறு மாதம் பின்னாலேயே வந்து காதல் பிச்சை கேட்கும் நாக்குபூச்சியை கண்டால், காதல். இது மாதிரியான காதல்கள் எல்லாம், ஆண்களும், பெண்களும் காதலுக்கு செய்யும் அவமரியாதை.
தலைக்கு அடிக்கடி மாற்றும் தொப்பி தேவையில்லை; ஆயுளுக்கும் அணியக்கூடிய ஒரே ஒரு கிரீடம் தான் தேவை. காதல் என்பது, கை விரல்களுக்கு மருதாணி போடுவது அல்ல,- இதயத்தில் பச்சை குத்துதல்.
குறிஞ்சி மலர், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். உண்மையான காதலோ, 70 ஆண்டு வாழ்நாளில், ஒருமுறை தான் பூக்க வேண்டும்.
மேலும், 16 - 20 வயது பெண்களின் காதல்கள், வானவில் போல் தற்காலிகமானவை. 20- - 24வயது பெண்ணின் காதல்கள், 50 சதவீதம் வெற்றி பெறக்கூடியவை. 24- - 28 வயது பெண்களின் காதல்கள், 75 சதவீதம் வெற்றி பெறக்கூடியவை.
சரி மகளே, உன் இரட்டைக் காதலைப் பற்றி விவாதிப்போம்...
முதல் காதலன், உன் அத்தை மகன். நீயும், அவனும், ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து இருக்கிறீர்கள். உன்னுடைய இரண்டாவது காதல், 'பிரேக் - அப்' ஆனதும், மீண்டும் ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறான்.
உன்னை சிறு வயது முதலே பார்த்து வளர்ந்தவன், அத்தை மகன். உன் சண்டைக்கோழி தனத்தை சகித்து போகக் கூடியவன் இவனே. உங்களது திருமணத்துக்கு, இருவர் குடும்பத்திலும் பெரிய அளவு எதிர்ப்புவர வாய்ப்பில்லை.
இரண்டாவது காதலன், உன் சீனியர். பொதுவாக சீனியர்கள், தங்களை குருவாகவும், காதலியை சிஷ்யையாகவும் பாவிப்பர். சீனியர்கள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள். பல இடங்களில் சீனியர்களுக்கு, பல ஜூனியர்கள் காதலிகளாக இருப்பர்.
சீனியருக்கு, உன் சொந்தக்கதை, சோகக்கதை தெரியாது. சீனியருடனான உன் சண்டை, ஒட்டகசிவிங்கிக்கும், வெள்ளாட்டுக்கும் நடப்பது போன்றது. சீனியர் இப்போது பொறுத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு பின், யானைப் பாதம் கொண்டு, உன்னை நசுக்கி விடுவான். சீனியரின் தற்கொலை மிரட்டல், 'எமோஷனல் பிளாக்மெயில்' வகையை சேர்ந்தது.
உனக்கு சகலவிதத்திலும் பொருத்தமானவன், அத்தை மகனே. சீனியரிடம் மனம் விட்டு பேசு. அத்தை மகனுடனான காதலை கூறி, சீனியரிடமிருந்து விடை பெறு.
இக்கால இளைஞர்களின் தற்கொலை மிரட்டல்கள், 99 சதவீதம் பொய்யானவை. உன் சீனியர் தற்கொலை செய்து கொள்ள மாட்டான்; அவன் தற்கொலை செய்து கொண்டாலும், அது உன்னை கட்டுப்படுத்தாது.
அத்தை மகனுடன், மனம் விட்டு பேசு. உன்னுடைய இன்னொரு காதல், அவனுக்கு தெரியாது என்றால், நீயாக கூறாதே. அவனுக்கு தெரியும் என்றால், 'சீனியருடனான காதலை கத்தரித்து விட்டேன். இனி, ஆயுளுக்கும் என் காதல் உன்னுடன் தான்...' என, உத்தரவாதம் கொடு.
உன் சண்டைக்கோழி தனத்தை கைகழுவு. சண்டைக்கோழி காதலிகளை ஒரு உள்நோக்கத்தோடு ஆதரிப்பர், காதலர்கள்; சண்டைக்கோழி மனைவியரை ஒரு நொடிப் பொழுது கூட, சகித்துக் கொள்ள மாட்டார்கள், கணவன்மார்கள்.
உன்னுடைய சோகமான இளமைக்கால கசப்புகளை, வெற்றிகரமான திருமண வாழ்க்கை அறவே அகற்றட்டும்.
மூன்றாவது காதலில் விழுந்து விடாமல், சபல - சலன, மயக்க - தயக்க குழப்பங்களை தள்ளி வைத்து, உன் அத்தை மகனுடன் ஒரு பேரின்ப வாழ்க்கை வாழப்பார்.
வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.