ஏதாவது ஒரு விசேஷ தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக பொருட்கள் ஆரம்பித்து, 'லேப்டாப்' மற்றும் கார் வரை,
அத்தனை பொருட்களின் விற்பனையும், நம்மை கவர ஆரம்பிக்கும்; தள்ளுபடி சலுகை வசீகரிக்கும், அதிலும், 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடிகளுக்கு கேட்கவே வேண்டாம். 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடியில் நடப்பது என்ன... அதில் பொருட்களை வாங்குவது லாபமா, நஷ்டமா... வாருங்கள் பார்ப்போம்.
* கையிலிருந்து செலவழிக்கும் தொகை குறையும். நீங்கள் வாங்க விரும்புகிற பொருளை, குறைவான விலையில் வாங்கவும், விற்க நினைக்கிற பொருளை, நல்ல விலையில் விற்கவும் முடியும்
* உங்கள் பொருட்களை, 'எக்ஸ்சேஞ்ச்' செய்வது என்று முடிவெடுத்தால், நேரடியாக விற்பது, 'ஆன்லைன்' மூலம் விற்பது என, இரண்டு வகைகள் இருக்கின்றன. எதில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து, அதன்பின் இறங்குங்கள்
* சந்தையில் புதிதாக வந்திருக்கும் மாடலை, 'எக்ஸ்சேஞ்சில்' வாங்குவதை தவிர்க்கவும். ஒருவேளை, அதன் பயன்பாடு அத்தனை சிறப்பாக இல்லையென்றால், சந்தையில் அவற்றின் விலை பெருமளவில் குறையும். எனவே, தொடர் கண்காணிப்பு அவசியம்
* மொபைல் மற்றும் கேமரா போன்றவற்றை, 'எக்ஸ்சேஞ்ச்' செய்யும் முன், அவற்றில் உள்ள, 'கான்டாக்ட்ஸ்' மற்றும் புகைப்படங்களை, 'பேக் - அப்' எடுத்து, 'டேட்டா'க்களை முற்றிலும் அழித்து விடுங்கள். இல்லையென்றால், வாங்குபவர், உங்கள், 'டேட்டா'வை, தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது
* நீங்கள் வைத்திருக்கும் பொருளுக்கான, 'பிராண்டிலே'யே, 'எக்ஸ்சேஞ்ச்' மூலம் வேறு பொருளை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், பழைய பொருளுக்கு அதிக விலை கிடைக்கும். அதைவிடுத்து, வேறு ஒரு, 'பிராண்டில்' வாங்கினால், லாபம் குறைவாகவே கிடைக்கும். இந்த நுட்பம் தெரிந்த பின், 'எக்ஸ்சேஞ்சில்' இறங்குங்கள்
* பண்டிகை காலங்களில், 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடி கிடைக்கும் என, காத்திருப்போர், அந்த சமயத்தில், நீங்கள் வாங்க நினைக்கும் பொருளின் விலை மாற்றங்களை மூன்று மாதம் முன்பிருந்தே கவனித்து வாருங்கள்
ஒரு மிக்சி, 2,000 ரூபாய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றால், பண்டிகை காலங்களில், அதே மிக்சி, 1,500 ரூபாய்க்கு தான், தள்ளுபடியில் எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல், உங்களிடம் இருக்கும் பொருளின் தற்போதைய சந்தை மதிப்பையும் கவனத்தில் வைத்து, தள்ளுபடி பக்கம் செல்லுங்கள்
* 'இ - காமர்ஸ்' முறையில், 'எக்ஸ்சேஞ்சில்' பொருட்களை வாங்கும்போது, தள்ளுபடிகள் கிடையாது என நிபந்தனை விதிப்பர்
உதாரணமாக, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை, ஒரு குறிப்பிட்ட வங்கி, 'டெபிட், கிரெடிட் கார்டு' மூலம் வாங்கினால், 15 சதவீத தள்ளுபடி என, அறிவித்திருப்பர். இதன் மூலம், 1,500 ரூபாய் சேமிக்க முடியும்
அதே பொருளை, 'எக்ஸ்சேஞ்ச்' மூலம், 8,000 ரூபாய்க்கு வாங்கும்போது, தள்ளுபடி செல்லுபடியாகாமல் போகலாம். இதுபோன்ற சமயங்களில், 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடியை தேர்ந்தெடுப்பதா, வேண்டாமா என, யோசித்து முடிவெடுங்கள்
* 'ஷோரூமில்' இருக்கும் அனைத்து பொருட்களையும், 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடியில் வாங்க முடியாது. நீங்கள் தள்ளுபடியில் வாங்க நினைக்கும் பொருளுக்கான தரம், அவர்கள் சொல்லும் விலை, 'கேரன்டி' மற்றும் விளக்க பட்டியல் போன்றவற்றை கேட்டு, மற்ற கடைகளிலும் சரிபார்க்க வேண்டும். அப்போதுதான், 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடி, உங்களுக்கு கை கொடுக்கும்
* வாங்கும் பொருள், உங்களுக்கு அவசியம் தேவையா அல்லது 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடி காரணமாக வாங்குகிறீர்களா... 'எக்ஸ்சேஞ்ச்' இல்லாமல் நீங்கள் விரும்பிய பொருளை வாங்க முடியுமா... நன்றாக இருக்கும் பொருட்களை, 'எக்ஸ்சேஞ்சில்' மாற்றுகிறீர்களா...
மேலும், உங்களிடம் இருக்கும் பொருளுக்கு, 'எக்ஸ்சேஞ்சில்' உரிய விலை கிடைக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை பொறுத்து, வாங்கலாமா, வேண்டாமா என, முடிவு செய்யுங்கள்
* 'ஆன்லைன்' மற்றும் நேரடி விற்பனையில் பொருளை மாற்ற, அதிகாரப்பூர்வ, 'டீலர்'களிடம் மட்டும், 'எக்ஸ்சேஞ்ச்' செய்யுங்கள். இல்லையென்றால், 'வாரன்டி, கேரன்டி, சர்வீஸ்' போன்றவை, உங்களுக்கு கிடைக்காமலும் போகலாம். அதில், அநேகமான குளறுபடிகளும் ஏற்படலாம்
* கார் போன்றவற்றை, 'எக்ஸ்சேஞ்ச்' செய்யும்போது, அதை வாங்கிய தேதியை பார்க்க வேண்டாம்; காரின் தேய்மானத்தை கணக்கில் கொள்ளுங்கள். அப்போதுதான், அந்த பொருளின் தரம் மற்றும் விலையை நீங்கள் கணக்கில் கொள்ள முடியும்
* ஒரு பொருளை, இ.எம்.ஐ., முறையில் வாங்க விரும்பி, அதேநேரம், 'எக்ஸ்சேஞ்ச்' தள்ளுபடியையும் அனுபவிக்க விரும்பினால், கவனமாக இருப்பது அவசியம்
சில நிறுவனங்கள், 'பைனான்ஸ்' நிறுவனங்களோடு சேர்ந்து, வழக்கமான வட்டி தொகையை காட்டிலும் அதிகமாக, இ.எம்.ஐ., மற்றும் 'பிராசசிங்' கட்டணத்தை, நம் தலையில் கட்டி விடுவர். இ.எம்.ஐ.,யில் வாங்குவதற்கு முன், அதன் வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கையாக இருந்தால், பல சங்கடங்களை தவிர்க்கலாம்.
மு. ஆம்பலவாணன்