இரண்டாவது இன்னிங்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
00:00

தீப்பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்தது போன்ற தோற்றத்துடன், 15 மாடிகளை கொண்ட, அடுக்கு மாடி குடியிருப்பின், ஏழாவது தளத்தில் வசிப்பவர்கள், ஸ்வேதா - வெங்கட் தம்பதி; இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
வெங்கட்டுக்கு அம்மா இல்லை. நாகர்கோவிலில் அண்ணனுடன் இருக்கிறார், அப்பா. அவருக்கு, சென்னையின் போக்குவரத்து ஆரவாரம், பிளாட் வாழ்க்கை, இதெல்லாம் அவ்வளவாக பிடிக்கவில்லை.
பழகிய ஊர், அமைதியான சூழ்நிலை, சொந்தமாக தனி வீடு; செடி, கொடிகள் இவைதான், அவருக்கு மனதுக்கு நெருக்கமாக இருப்பதால், தொந்தரவு செய்வதில்லை, வெங்கட்.
ஆண்டுக்கு ஒரு முறை, இரண்டு வாரம் விடுப்பு எடுத்து, வெங்கட்டும், ஸ்வேதாவும் அங்கு போய் விடுவர். அதுபோல, அவரும் ஒரு மாதம் சென்னையில் வந்து தங்குவார்.
ஸ்வேதாவின் அம்மா தனலட்சுமி, ஓய்வுபெற்ற வங்கி பணியாளர். அப்பா, கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இருவரும் செங்கல்பட்டில் உள்ளனர்.
பரபரப்பான வாழ்க்கையில், ஸ்வேதாவும், வெங்கட்டும் வேலைக்கு போவதால், வெளியூர் எங்கும் போக அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால், மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ தான், அவள் அம்மா வீட்டுக்கு போவாள். பார்த்து விட்டு, அன்று மாலையே திரும்பி விடுவாள்.
அவர்கள் வாழ்க்கையில் எந்த குறையுமில்லை. பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மாறாத அன்பு வைத்து, புரிதலுடன் உள்ளனர். இதோ, அடுத்த ஆண்டு வந்தால், திருமணமாகி ஒரு ஆண்டு முடிய போகிறது.
அன்றும், அப்படி தான். காலையில் கிளம்பி, ஆபீசில் இறக்கி விடும்போது, ''டாக்டரிடம், 'அப்பாயின்மென்ட்' உள்ளது. சாயந்திரம் சீக்கிரம் வந்துடுவ இல்ல,'' என்று கேட்டாள், ஸ்வேதா.
''கண்டிப்பா நானே வந்து கூட்டிட்டு போறேன். ஒருவேளை, 'லேட்' ஆயிடுச்சுன்னா, நீ நேரா போயிடு... நான் அங்கே வந்துடறேன்... சரியா.''
''ஓகே... பட், நீ வந்துட்டா நல்லா இருக்கும்,'' என்றாள் கெஞ்சலாக.
''சரி... வந்துடறேன்,'' என்று சிரித்தபடி, வண்டியை, 'ஸ்டார்ட்' செய்தான், வெங்கட்.
மாலையில் இருவரும், ஒன்றாகவே டாக்டரை பார்த்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த அந்த நல்ல செய்தியை உறுதிப்படுத்தினார், டாக்டர்.
வீட்டுக்குள் நுழைந்த இருவருக்கும், மனம் இறக்கை கட்டி பறந்தது. அவர்களின் அன்பின் சின்னமாக பிறக்கப்போகும் குட்டி தேவதையை நினைத்து, சந்தோஷத்தின் உச்சியில் இருந்தனர்.
போன் செய்து, இரு வீட்டுக்கும் விஷயத்தை சொன்னதில், மொத்த குடும்பமும் கொண்டாடின. அவள் பெற்றோருக்கு ஒரே பெண், ஸ்வேதா. அதனால், அவர்கள் குடும்பத்தின் வாரிசு. வெங்கட்டின் அண்ணன் திருமணமே செய்து கொள்ளவில்லை; அதனால், இங்கும் அப்படித்தான்.
மசக்கை காலத்தில், சென்னை வந்து, முதல் மூன்று மாதம் பார்த்துக் கொண்டார், ஸ்வேதாவின் அம்மா. அதன்பின், ஸ்வேதாவை தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான், வெங்கட்.
பிரசவ தேதிக்கு, 10 நாள் முன்பு தான், அம்மா வீட்டுக்கு போனாள், ஸ்வேதா.
''நான் போன் பண்ணினா, உடனே வந்துடு...'' என்றபடியே விடைபெற்றாள்.
மெதுவாக வலி ஆரம்பித்ததும், வெங்கட்டுக்கு போன் போக, பறந்து வந்தான். அவளை மருத்துவமனையில் அனுமதித்ததில் இருந்து, குழந்தை பிறக்கும் வரை, தனலட்சுமியை விடவும், 'டென்ஷன்' ஆக இருந்தான், வெங்கட்.
அழகான பூக்கூடை ஒன்று, பூமிக்கு வந்தது.
அந்த குட்டி தேவதைக்கு, 'சோனா' என்று பெயர் வைத்தனர். அன்றோடு, 15 நாள் விடுப்பு முடிந்தது. சென்னை திரும்ப மனம் இல்லாமல், வார கடைசியில் வந்து போவதாக சொல்லி கிளம்பினான், வெங்கட்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு வேலை தவிர, குழந்தை சம்பந்தப்பட்ட மற்ற எல்லா வேலைகளையும், தாத்தாவும் - பாட்டியும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர். அவளுடைய உடம்பு தேற வேண்டும் என்பது மட்டும் தான், அவர்கள் சிந்தனையில் இருந்தது.
'டயப்பர்' மாற்றுவதிலிருந்து, குளிக்க வைப்பது, உடம்புக்கு, 'பேபி ஆயில்' தடவுவது என்று, சகலத்தையும் பார்த்துக் கொண்டனர். ஸ்வேதாவுக்கான பத்திய சாப்பாடு, ஜூஸ், சூப்; அவர்களுக்கான சாப்பாடு என்று, நாள் முழுவதும் மாறி மாறி வேலை செய்தார், தனலட்சுமி.
வார கடைசியில், வெங்கட் வரும்போது, அவன் ஒரு வாரம் என்ன சாப்பிட்டானோ என்று, அப்போது மட்டும், ஸ்வேதா, அவனுக்காக ஏதாவது செய்வாள். இரண்டரை மாதங்கள் ஓடியது.
மூன்றாவது மாதம்...
''ஸ்வேதா வா, சோனாவ குளிப்பாட்டு,'' என்றார், தனலட்சுமி.
''நானா... நீதானம்மா தினமும் குளிப்பாட்டுவ, எனக்கு தெரியாது.''
''கத்துக்க... முன்னல்லாம் நாங்க, காலை நீட்டி, அதுல குழந்தையை குப்புற படுக்க போட்டு குளிப்பாட்டுவோம். இப்பல்லாம் ரொம்ப ஈசி. அதான், சின்னதா, 'பாத் டப்' இருக்கே. மெதுவா தண்ணிய மேல விட்டு குளிப்பாட்ட வேண்டியது தான்... இந்த பக்கம் வந்து உட்காரு,'' என்றாள்.
உட்கார்ந்தாள், ஸ்வேதா.
ஜாலியாக, தண்ணீரில் கையை காலை உதைத்து, தண்ணீரை மேலே தெறித்தாள், சோனா. அது, அவளுக்கு அபிஷேக பன்னீர் போல இருந்தது. குழந்தையை குளிப்பாட்டி, துடைத்து, கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்தாள்.
பிறகு, பாலை கொடுத்ததும் துாங்கிப் போனாள், சோனா.
துவைத்த அத்தனை குழந்தை துணிகளையும் எடுத்து வந்து, ஸ்வேதாவை மடிக்க சொன்னாள், தனலட்சுமி. மடித்து முடிப்பதற்குள் எழுந்து விட்டாள், சோனா.
மாலை, 4:00 மணி-
''எனக்கும், அப்பாவுக்கும் டீ போட்டு குடு; உனக்கு, கஞ்சி போட்டுக்கோ... 'நைட்' இட்லி ஊத்திக்கலாம். மல்லி சட்னி அரைச்சுடு, ஸ்வேதா,'' என்றாள், தனலட்சுமி.
எதுவும் பேசவில்லை. சொன்னதை செய்தாள்.
அடுத்த நாள் காலை, வழக்கம் போல மெதுவாக எழுந்து, அம்மா கொடுத்த கிச்சடியை விழுங்கினாள், ஸ்வேதா.
''மதியம், வெண்டைக்காய் பொரியலும், கேரட், குடை மிளகாய் போட்டு சாம்பார் வெச்சுடு. சாதம் ரெண்டு டம்ளர் வெச்சா போதும், ஸ்வேதா,'' என்றாள், தனலட்சுமி.
குளித்து, சோனாவை குளிப்பாட்டி, பால் கொடுத்து, தொட்டிலில் துாங்க வைத்து, சமையலறை வந்தவளுக்கு, அம்மாவின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை.
வெளியில் தோட்டத்தில், செடிகளிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள், அம்மா. அதை பார்க்க எரிச்சலாக இருந்தது.
'பேசாமல் என் வீட்டுக்கே போகலாம். பாவம், வெங்கட். தனியா இருக்காரு, வாரா வாரம் அலைச்சல் வேறு...' என்று, நொந்து கொண்டாள். அவள் கண்களில் கண்ணீர் தளும்பியது. ஆபீஸ் தோழியரும் நினைவுக்கு வந்தனர்.
அவர்களில் பலருக்கு, அப்பா - அம்மா கூடவே இருந்து, பிள்ளைகளை வளர்த்து கொடுக்கின்றனர்; இல்லையென்றால் மாமியார் - மாமனார் பார்த்துக் கொள்கின்றனர்.
இப்போது, இங்கே சொந்த அம்மா வீட்டில், நான் இப்படி என்று நினைத்தபோது, ஓவென்று வாய்விட்டு கதறி அழ தோன்றியது.
வெங்கட், செங்கல்பட்டுக்கு வந்தபோது, காலையில் எழுந்ததிலிருந்து, இரவு படுக்கும் வரை, ஸ்வேதாவின் வேலை சிரமத்தை பார்த்தான்.
அன்றிரவு, ''ஸ்வேதா... எப்போ வீட்டுக்கு வர்ற,'' என்று கேட்டான்.
''எப்போ போகலாம்,'' என்றாள்.
''நீ சொல்லுடா... எனக்கு, நீங்க ரெண்டு பேரும் இல்லாம, அங்கே இருக்கவே பிடிக்கல. 'வீக் எண்ட்' எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கு... அதை, 'பெண்டிங்'ல வச்சுட்டுதான், இங்கே உங்களை பார்க்க வரேன்,'' என்று, அவன் சொன்னபோதே, அவள் கண்கள் கலங்கின.
''ஏய், சாரி... நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா... நீ இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு கூட வா,'' என்றான்.
''மூன்று மாதம் முடிந்தது. எனவே, நாளைக்கே கூட போகலாம்,'' என்றாள்.
''இல்ல, ஸ்வேதா... அது நல்லாயிருக்காது... திடீர்னு கிளம்பற மாதிரி இருக்கும். அடுத்த வாரம் வந்து கூட்டிட்டு போறேன்,'' என்றான்.
அடுத்த நாள் அவன் சென்னைக்கு கிளம்பும்போது, ''அடுத்த வாரம், ஸ்வேதாவை அனுப்பி வையுங்களேன்,'' என்றான், அவளது பெற்றோரிடம்.
அடுத்த வாரம், தனலட்சுமி - கிருஷ்ணமூர்த்தி, ஸ்வேதா, சோனா, வெங்கட் ஆகிய ஐவரும், அவனுடைய அந்த சின்ன வீட்டில் அடியெடுத்து வைத்தனர்.
பத்து நாட்கள் கூடவே இருந்த, ஸ்வேதாவின் பெற்றோர், கிளம்பினர்.
''அத்தை, நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... எனக்கு, அம்மா இல்ல; நீங்க தான் எனக்கும் அம்மா மாதிரி,'' என்றான், வெங்கட்.
''நீங்க எனக்கு, பிள்ளைதாம்பா.''
''அத்தை, ஒரு ரெண்டு மாசம், நீங்களும், மாமாவும் இங்கே இருந்தீங்கன்னா, ஸ்வேதாவுக்கு உதவியா மட்டுமில்ல, ஆறுதலாவும் இருக்கும்.''
''வெங்கட், அவளுக்கு ஆறுதலுக்கான அவசியமே இல்லப்பா... உங்களை விடவா நாங்க, அவளை பார்த்துக்க போறோம். நீங்க தான், உங்க பொண்டாட்டி மேலயும், பொண்ணு மேலயும் உசிரையே வெச்சிருக்கீங்களே.''
''இருந்தாலும், அத்தை...'' என்று, இழுத்தான்.
''தப்பா நினைச்சுக்காதீங்க. காலத்துக்கும், யாரும் யாரையும் நம்பி வாழ முடியாதுப்பா... இப்ப, ஸ்வேதாவால குழந்தையையும், உங்களையும் பார்த்துக்க முடியும்... நாங்க ஏற்கனவே, ஒரு, 'இன்னிங்ஸ்' ஆடி, 'ரிட்டயர்' ஆயிட்டோம். திரும்பவும், ரெண்டாவது, 'இன்னிங்ஸ்' ஆடினா, சரியா வராது...
''உங்க குழந்தையை வளர்க்கிறதுல இருக்கிற கஷ்ட நஷ்டம், பிற்காலத்துல நினைச்சு பார்க்கும்போது, பிரமிப்பாகவும், பெருமையாகவும், சந்தோஷமாவும் இருக்கும்.''
''மாப்பிள்ளை, தலைமுறை மாற்றத்தை எல்லாராலும் ஈசியா அனுசரிச்சு போக முடியாது. சில நேரம் எங்களுக்கு சரின்னு படற விஷயம், இப்ப சரிப்படாம இருக்கும்,'' என்றார், கிருஷ்ணமூர்த்தி.
''அப்பப்ப வரோம், நீங்களும் வாங்க... ஏதாவது பிரச்னைன்னா, சந்தேகம்னா உடனே போன் பண்ணுங்க... குழந்தையோட மூணு மாசத்துலேர்ந்து, அஞ்சு மாசம் வரைக்கும் இருக்கிற இந்த காலம், வாழ்க்கையில் திரும்ப கிடைக்கவே கிடைக்காது...
''குழந்தையின் சின்ன சின்ன அசைவுகள் கூட ஆனந்தமா இருக்கும். அம்மா - அப்பாவ பார்த்து தான், அவங்க எல்லாமே கத்துப்பாங்க. அம்மா தான் முதல் டீச்சர். கொஞ்ச காலத்துக்கு, அவ அம்மாவா மட்டும் இருக்கட்டும்,'' என்று, தனலட்சுமி சொன்னது புரிந்தது.
''இதற்காக தான் எனக்கு எல்லாத்தையும் பழகிக் கொடுத்து அனுப்பினியாம்மா... கிரேட்,'' என்று, ஓடிப்போய் கட்டிக்கொண்டாள், ஸ்வேதா.
''உங்களுக்கே உங்களுக்கான அருமையான பொக்கிஷம், சோனா. அவள பத்திரமா பார்த்துக்கங்க. வாழ்த்துக்கள்,'' என்று, வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லி, கம்பீரமாக கிளம்பிய, மாமனார் - மாமியாரை பார்த்துக் கொண்டே இருந்தான், வெங்கட்.

மாலா ரமேஷ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
13-ஜூலை-202001:02:43 IST Report Abuse
Manian இதில் சொல்லாமல் விட்ட முக்கியமான மருத்துவ உண்மை:பிள்ளை பெற்ற பின்,பெண் உடலில் ஹார்மோன்கள் உடனே சரி சமமாக மாறாது. இதை போஸ்ட் பார்ட்டம் (Postpartum ) சிண்டிரோம் என்பார்கள். ரிலாக்சின்(Relaxin ) ஹார்மோன் பிரசவ சமயம் வரை ஓவரிஸ்,தொப்புள் கொடி,கர்பபையை பாதுகாக்கிறது . புரோலாக்டின்(Prolactin )குழந்தைக்கு ஊட்ட பால் சுரக்க வைக்கிறது. மூன்றாவது ஆக்ஸிடாக்சின்(Oxytocin) தாய் பால் ஊற,அணைப்பு இன்பம்,தாய்-சேய் பிணைப்பை ஏற்படுத்துகிறது. எல்லாப் பிராணிகளுக்கும் இது உண்டு.எஸ்டிரோஜன்(Estrogen), ப்ரோஜெஸ்டிரோஜன்(Progestrogen ) என்ற இரண்டு ஹார்மோன்கள் இவேயே கர்பகாலப்பெண்களை காக்கின்றன.இதில் எஸ்டிரோஜன் அதிக உற்பத்தி தைய்ராய்ட் உந்தல் அட்ரினல் அழுத்தம், ப்ரோஎஸ்டிரோஜன் சமநிலை தடுமாற்றத்தால் பெற்ற குழந்தையைக் கூடக் கொல்லும் நிலை ஏற்படுகிறது. ஆகவே பொதுவாக, 6 மாதம் தாய்வீட்டில் பிரசவித்த பெண் இருப்பது அவசியம். இந்தப் பெற்றோர்களுக்கு இது புரியவில்லை என்பது பொது விதி. வெங்கட்-ஸ்வேதா மின்வலைத்ளத்தில் தேடி இதையெலல்லாம் கூடவா தேடி புரிந்து கொள்ளவில்லை? இதை நான் செய்திருக்கிறேன்.என் மனைவியின் தாய் - என்னை "மருமகப் பிள்ளை, நீங்கதான் தாயுமானவர் என்று சொல்வார்". காதல் திருமணம் செய்யும் முன் -யார் உதவியும் தேவை இல்லை- என்பதை, குழந்தை பிறந்தால்என்றும் சிந்திக்க வேண்டும். விக்கட் வீழ்ந்தது
Rate this:
Cancel
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
12-ஜூலை-202015:41:18 IST Report Abuse
Mohanraj Raghuraman இரண்டாவது இன்னிங்ஸ் சிறுகதை அருமை. மனம் மகிழவும் நெகிழவும் செய்த முடிவு. திருப்பம், சஸ்பென்ஸ் என்ற பெயரில் கதையை நீட்டாமல், நல்ல முடிவை எதிர்பார்த்தே படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு மகிழ்ச்சி தரும் முடிவு.
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
12-ஜூலை-202014:16:54 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அம்மா ஸ்வேதா உங்கள் குடும்பம் நீங்கள் பார்க்கவேண்டும் அதுக்குதான் உங்க அம்மா எல்லாத்தையும் கத்துக்க வச்சாங்க. சரி உங்கள் குடும்ப நலன் உங்கள் கையில்தான் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X