ப்ளீஸ், நல்லா தூங்குங்க! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2020
00:00

இன்று, துாக்கம் பலருக்கு, கனவு தான். துாக்கத்தை தொலைத்தோர், பல வியாதிகளுக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு மனிதனும், சரியான நேரத்திற்கு துாங்க வேண்டும்; துாக்கத்தின் அளவை சரியாக வைத்திருந்தால், எந்த வியாதியும் நம்மை அண்டாது.
கடந்த, 20 ஆண்டுகளில், நாம் துாங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு, தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
இப்போது, இரவு, 9:00 மணி துாக்கம் என்பது, 10:00 மணியாகி, நள்ளிரவாகி, அதிகாலை வரை வந்து விட்டது. அதிகாலை, 3:00 - 4:00 மணி வரை கூட விழித்திருக்கின்றனர்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் துாக்கம் வராமல், இப்படி ஆவது தனி.
இரவு துாக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடி தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய், பக்கவாத நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வேகமாக அதிகரித்து வருகிறது.

இரவு துாக்கம் தாமதமாகவும், துாக்கம் வராமலிருப்பதற்கான காரணங்கள்:
உடல் பிரச்னை மற்றும் மனக் கவலைகள் தான் இதற்கு, காரணம் என, நினைக்கிறோம். இது, உண்மை அல்ல. நாம் உறக்கத்தை தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடமும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன.
இரவு சந்தையில் தான், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போது, கோடிகள் புரள்கின்றன. இரவு சந்தை என்பது, முழுக்க முழுக்க, 'டிஜிட்டல்' சந்தை.
அதிகரித்து வரும், 'காஸ்ட் ஆப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளை சமாளிக்க, தனக்கு பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும், தொழிலாளர் சட்டத்தை மதித்து, 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது, 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில், 'டார்க்கெட்'டை எட்டிப்பிடிக்க வேண்டும்.
மன உளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து, வெளியே வந்தால், கடும் போக்குவரத்து நெரிசல். அதில் சிக்கி, சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே, 'டிவி'-யை, 'ஆன்' செய்து விடுகின்றனர்.
இளம் வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில், 'பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' என, மூழ்க ஆரம்பித்து விடுகின்றனர். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்கு சென்று விட்டால், அங்கு அதற்கான வேடம் தரித்து பலர், 'பிசி'யாகி விடுகின்றனர்.
தினமும் நள்ளிரவை தாண்டிய, 'சாட்டிங்கு'க்குப் பிறகு, 'குட்மார்னிங்' சொல்லி தான், படுக்கைக்குச் செல்கின்றனர்.
இரவு உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து, 'பேஸ்புக்'கில் போட்ட புகைப்படத்துக்கு எத்தனை, 'லைக்ஸ்' மற்றும் 'வாட்ஸ் - ஆப்'பில், குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என, அடிக்கடி பார்க்கின்றனர்.
இதை, 'கம்பல்சிவ் பிஹேவியர்' எனும், ஒரு வகையான மன நலப் பிரச்னை என்றும், 'கண்டிஷனல் இன்சோம்னியா' எனும், துாக்கமின்மை நோய் என்றும், மருத்துவர்கள் சொல்கின்றனர்.
சிலர், தினமும் காலையில் கண் விழித்ததும் செய்யும் முதல் வேலை, தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து, 'நெட் ஆன்' செய்து, 'வாட்ஸ் - ஆப்'பில் ஏதேனும் குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என, பார்ப்பது தான்.
சமூக வலைதளங்களுக்கு நாம் எந்தளவுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதை, உடனடியாக உணர வேண்டிய தருணம் இது.

இரவு துாக்கம் தடை படுவதால் ஏற்படும் பிரச்னைகள்:
நம் உடலுக்குள் மன சுழற்சி கடிகாரம் இருக்கிறது. பொதுவாக, சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலை செய்வதும், சூரியன் மறைந்த பின், இரவு உணவை முடித்து உறங்கச் செல்வதும் தான், இயற்கையோடு இணைந்த வாழ்வு.
சூரிய வெளிச்சத்தில் மட்டும் ஏன் இயங்க வேண்டும் என்பதற்கு, அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பின், இருட்டு நேரத்தில் தான், 'மெலட்டோனின்' முதலான, 'ஹார்மோன்'கள், நம் உடலில் சீராகச் சுரக்க ஆரம்பிக்கும்.
இரவு நேரத்தில், உடலுக்கு ஓய்வு தந்து, உறங்கும்போது தான், 'மெட்டபாலிசம்' எனும் வளர்சிதை மாற்றம், உடலில் சீராக நடக்கும்.
நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான, 'ஹார்மோன்' மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான, 'ஈஸ்ட்ரோஜன் - டெஸ்டோஸ்டீரான்' போன்ற பிரத்யேக, 'செக்ஸ் ஹார்மோன்கள்' சமச்சீராக சுரக்கும். முறையற்ற இரவு துாக்கத்தால் இவை சீராக உற்பத்தி செய்யப்படாமல், பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பேறின்மை பிரச்னை, இளம் தம்பதியரிடையே அதிகரித்து வருகிறது. ஒழுங்கற்ற துாக்கத்தால், பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மன நலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும், இது தான் காரணம்.
ஒவ்வொருவருக்கும் துாக்கம் தடை படுவதற்கு, வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, துாக்கத்தை பாதிக்கும் காரணி, வெளிச்சம் தான். மொபைல் வெளிச்சம், துாக்கத்துக்கு கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்த பின், மொபைலை நோண்ட ஆரம்பித்து விடுகின்றனர்.
மொபைலை கண்களுக்கு அருகில் வைத்து பயன்படுத்தும்போது, அந்த வெளிச்சம் நம் கண்களையும், மூளையையும் பாதிக்கும்; துாக்கத்தைத் தாமதப்படுத்தும்.
ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப, தங்களது வாழ்வியல் முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக் கொண்டால் பிரச்னை வராது.
பொதுவாக, இரவு, 9:00 மணிக்குள் உறங்குவதும். காலை, 5:00 மணிக்குள் எழுவதும் தான் சிறந்தது. அதிக துாக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல, குறைந்த துாக்கமும் ஆபத்தானது. அனைவருக்கும், எட்டு மணி நேர துாக்கம் அவசியம்.
துாங்க வேண்டிய நேரத்தில் துாங்காமல் விட்டுவிட்டு, பிற்காலத்தில் நோய் வந்து, துாக்க மாத்திரை போட்டு துாங்க முயற்சிப்பது, முட்டாள் தனம். அது நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

துாக்கம் குறைந்தாலே, சிடுசிடுப்பு வந்துவிடும்; மனம் மகிழ்ச்சியாக இருக்க, அடிப்படை தேவை, நல்ல துாக்கம்; இதோ அதற்கு சில எளிய வழிகள்...
துாங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, சாப்பிட்டு விடுங்கள். பின், 20 நிமிடத்திற்கு பின், ஒரு, 'கப்' இளஞ்சூடான பால் குடியுங்கள்; துாக்கம் கண்களை சுழற்றும்
துாங்க செல்வதற்கு முன், மது அருந்துவதோ, காபி குடிப்பதோ, புகை பிடிப்பதோ கூடாது. அதே போல், நல்ல துாக்கத்துக்கு, வயிறு நிறைய சாப்பாடும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம். நிறைய சாப்பிட்டால், அரை மணி நேரத்திற்கு பின், சின்னதாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்
உங்கள் படுக்கையறை, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிச்சியாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
இரவில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது, மொபைலில், 'கேம்ஸ்' ஆடுவது, 'ஆடியோ புக்' படிப்பது மற்றும் 'டிவி' பார்ப்பது போன்றவைகளை தவிர்த்தாலே, நன்கு துாக்கம் வரும்
சுத்தமான படுக்கையும், உங்களுக்கு சவுகர்யமான உணர்வை கொடுக்கிற தலையணையும், துாக்கத்தின் சிறந்த நண்பர்கள். உங்கள் படுக்கையறையின், 'நைட் லேம்ப்' மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்தாலே போதும்
துாங்குவதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போடுங்கள்; உடம்பை துவட்டும்போதே கொட்டாவி வரும். இரவில், தளர்வான, காற்றோட்டமான, பருத்தி ஆடைகளையே அணியுங்கள்
மனதை, 'ரிலாக்ஸ்' செய்யும் புத்தகங்கள், துாக்கத்தை வரவழைக்கிற ஒரு நல்ல துணைவன்.

பா. பரத்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X