சீகல்கள் பறக்கின்றன!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
00:00

கணக்கு புத்தகம், நோட்டுடன் உட்கார்ந்தான், கோபி.
வகுப்பறை கண்களுக்குள், 'ட்ரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா' வந்தது.
அய்யோ, அவற்றையெல்லாம் யார் கண்டுபிடித்தனர் என்றிருந்தது அவனுக்கு. ஐரோப்பியரா, ஆங்கிலேயரா, நிச்சயம், இந்தியராக இருக்க முடியாது என்று நினைத்தான். இப்படி வணிக மனம் கொண்டவர்கள் இல்லை, இந்தியர்கள்.
கண்ணில் தெரியும் வானத்தையும், நட்சத்திரங்களையும் ரசித்தவர்கள். கோள்களின் நடமாட்டம், நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டு என்று திகைத்தவர்கள். இப்படி, 'மாட்ரிக்ஸ், அல்ஜீப்ரா, டைமென்ஷன், ஜாமெட்ரி' என்று, மண்டையை வீணாக உடைத்துக் கொள்பவர்கள் அல்ல.
இங்கும், அங்கும் பார்த்தபடி வந்து அருகில் உட்கார்ந்தாள், அம்மா.
''கோபி, அடுத்த வருஷம் நீ, பிளஸ் 2... ரொம்ப கவனமா படிக்கணும்டா... செய்யுறியா,'' என்றாள்.
''அய்யோ, ஏம்மா நீ வேற... அப்பா கொடுக்கிற, 'டார்ச்சர்' போதாதா... சும்மா நொய் நொய்ன்னு... விடும்மா, எல்லாம் பாஸ் மார்க் வாங்கிடலாம்,'' என்றான், வேகமாக.
''ஏண்டா இப்பிடி பேசுற... எனக்கும், அப்பாவுக்கும் எவ்வளவு ஆசை தெரியுமாடா, கோபி. அப்பா, நல்லா படிப்பாராம்; ஆனா, வசதி இல்லாததால, சின்ன வயசுலயே வேலைக்கு போயிட்டார். இப்பவும், குடும்பம் முன்னேறலேன்னு அவ்வளவு குறை அவருக்கு...
''உன்னையாச்சும் இன்ஜினியர் ஆக்கிப் பாக்கணும்ன்னு ஆசை. நீ என்னடா இப்பிடி சொல்றே, 'பாஸ் மார்க் வாங்கறேன்'னு,'' என்று கண்கலங்கினாள், அம்மா.
''அய்யோ அம்மா... எனக்குன்னு ஆசையே இருக்கக் கூடாதா... உனக்குத் தெரியுமா, ஆண்டு விழாவுல நான் எழுதி, நடிச்சேன்ல ஒரு நாடகம். காந்தி வந்திருந்தார்ன்னு, தலைப்பு வெச்சேனே... அந்த நாடகத்துக்கு எவ்வளவு பாராட்டு தெரியுமா...
''லெனின், மார்க்ஸ், ஷேக்ஸ்பியர் மூன்று பேரும் வந்து, பாரதியை சந்திக்கிற மாதிரி, அடுத்த நாடகம் தயார் பண்ணியிருக்கேன். கொடி நாள் அன்னிக்கு, ஸ்கூல்ல போடப் போறோம்; நீ வந்து பாரு. கண்டிப்பா உனக்கு பிடிக்கும். 'சயின்ஸ், மாத்ஸ், கெமிஸ்ட்ரி' இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலேம்மா...''
''டேய் டேய்...'' என்று, அழுதே விட்டாள். முகம் கறுத்து களைத்தது. விரும்பி வைத்திருந்த பொம்மையைத் தொலைத்துவிட்ட சிறுமியை போல, அவள் விம்மினாள்.
''என்னம்மா, நான் என்ன குற்றமா செய்யுறேன். கலைதானேம்மா, உலகின் முதல் உன்னதமான விஷயம். தெனம் பாட்டு கேட்கிறோம், கோலம் போடுறோம்; செடி, பூ, மேகம்ன்னு ரசிக்கிறோம். அதேதாம்மா நான் செய்யுறதும். எனக்கு இதுதான் விருப்பமா இருக்கு.
''அப்பாகிட்ட நீதான் சொல்லணும். எப்ப பார்த்தாலும் படி படின்னு சொல்லிகிட்டே இருக்கறதா... மகனுக்கு என்ன விருப்பமோ அதை செய்ய விடலாம்ல,'' என, கெஞ்சுகிற குரலில், தாயின் கைபற்றினான்.
''இல்லடா கோபி... அப்பா ஆசை மட்டும் இல்லடா... எனக்கும் இதுதாண்டா ஆசை. என் தாய் வீடும், கஷ்டப்பட்ட குடும்பம் தான். வாய்க்கா, வரப்பு, களத்துமேடு, அன்னாடக் கூலின்னு தான் வாழ்க்கை...
''நம் குடும்பத்துக்கு, நீதாண்டா முதல் பட்டதாரி; அதுவும், பொறியியல் பட்டதாரி... கொஞ்சம் மனசு வெச்சு படிடா தங்கம்,'' என்று அரற்றிய அம்மாவை, வெறுமையுடன் பார்த்தான்.

வாசலில் அப்பாவின் பழைய வண்டியின் ஒலி கேட்டது.
பரபரப்புடன் எழுந்தாள், அம்மா.
''என்ன, இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டாரு... ஆலைல சங்கு ஊதற சத்தம் கூட கேட்கலியே... சரி சரி, சாயங்காலம் எங்கியோ வெளில பழைய நண்பர்களை பார்க்க போகணும்ன்னு, சொல்லிட்டிருந்தாரு... அதனால, 'பர்மிஷன்' போட்டிருப்பாரு... நாடகம், வசனம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சுட்டு, ஒழுங்கா படி, கோபி,'' என்று, அவன் தலையை கோதிவிட்டு, சிட்டாக பறந்தாள்.

அப்பாவின் உருவம் அருகில் வந்து நிற்பது தெரிந்து, அவன் நிமிர்ந்தான்.
''கோபி... கணக்கு பாடம் ரொம்ப கஷ்டமா இருக்குதா... உனக்கு, 'டியூஷன்' வெக்கணும்ன்னு அம்மா சொல்றா...
பரவாயில்லையாப்பா... நாளைல இருந்தே போய்க்க,'' என்றார், அவன் புத்தகங்களை பார்த்தவாறு.
''இல்லப்பா... அதெல்லாம் வேணாம்... நானே படிச்சுக்குவேன்.''
''பணம் அதிகம்ன்னு பார்க்கறியா?''
''அதிகம் தான்... ஆனால், எனக்கே என்னை தெரியுதுப்பா... கொஞ்சம் பயிற்சி எடுத்தால் போதும். கணக்கு பாடம்னாலே நிறைய போட்டு போட்டு பார்க்கணும்.''
''அதென்னப்பா புத்தகம்,'' என்று, கீழே இருந்ததை, கையில் எடுத்து பார்த்தார்.
ஜென் கதைகள், புத்தா கதைகள் இருந்தன.
''கதை புக்கா... இதையா படிச்சுகிட்டிருக்கே... ஏண்டா,'' என்று, திடுக்கிட்டார்.
''ஏன்ப்பா... நாடகம் ஒண்ணு போடணும். அதுக்கு சில, 'ரெபரென்ஸ்' வேண்டியிருக்கு. ரொம்ப நல்லா இருக்கு, இந்த கதைகள்.''
''கோபி... இந்த ரெண்டு வருஷம், உன் வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்ன்னு தெரியுமா... பிற்காலத்துல, நீ என்ன, 'கோர்ஸ்' எடுக்கணும், எந்த கல்லுாரியில படிக்கணும், எந்த மாதிரி ஆளா நீ உருவெடுக்கணும்ன்னு, தீர்மானிக்கிற காலம் இது...
''நீ புத்திசாலி... இப்படி கதை, வசனம், நாடகம்ன்னு, நேரத்தை வீணடிக்கலாமா... திரும்ப வருமா இந்த காலம், ஒழுங்கா பாடத்த படி... மனசை சிதற விடாதே, கோபி.''
''அப்படி எல்லாம் இல்லப்பா... கவலைப்படாதீங்க, நான் பொறுப்பானவன்.''
''அப்படின்னா அதை செயல்ல காட்டு. சினிமா, நாடகம், மண்ணாங்கட்டி எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படி. சோறு போட போற படிப்புக்கு, மரியாதை கொடுடா... புரிஞ்சுக்க,'' என்று, கதைப் புத்தகத்துடன், விருட்டென்று எழுந்தார், அப்பா.
எதிலும் மனம் ஒன்றவில்லை.
கணக்கு பாடத்தை விரல்கள் பற்றின. ஆனால், மனம் வானத்தின் மெல்லிய ஆரஞ்சையும், சிவப்பையும் சுற்றி வந்தது.
'சீகல் பறவைகளுக்கு, இந்த வானம் தான் மிகவும் பிடிக்குமாம். சூரியனை தொட்டு விட வேண்டும் என்ற வேகத்துடன் அவை அவ்வளவு விரைவாக பறக்குமாம்.
'எவ்வளவு பெரிய ஆசை... வீனஸ், மார்ஸ் என்று, எத்தனையோ கிரகங்கள் வழியில் இருந்தாலும், சீகலுக்கு, சூரியனை அடைவது தான் லட்சியம்.
'அய்யோ... என்ன செய்யப் போகிறேன், எப்படி உணர்த்தப் போகிறேன், அப்பாவுக்கு... விளையாட்டுப் பிள்ளை இல்லை நான், பிறவியின் அற்புதம் புரிந்தவன்; உன்னதமான வாழ்க்கையை எதன் பொருட்டும் வீணாக்கிவிடக் கூடாது என்று அறிந்தவன்; பயன்மிக்க ஒரு ஜீவிதமே பூமிக்கு நாம் செய்யும் நன்றி என, உணர்ந்தவன்.
'எப்படி அப்பா இதையெல்லாம் எடுத்துச் சொல்வேன்... உங்கள் தன்னலமற்ற உழைப்பின் முன், நிபந்தனையற்ற பாசத்தின் முன், என்னால் மவுனமாகத் தானே நிற்க முடிகிறது...' என, நினைத்துக் கொண்டான்.
விடியற்காலை -
எழுப்பி விட்டது, கோடை மழை. இதன் அழகே தனி. அக்கினி நட்சத்திரங்கள், நிலநடுக்கோட்டு நாடுகளை பதம் பார்க்கிற கொடும் வெயில் நாட்களில், இப்படி சகோதரியின் அன்பு போல சடாரென்று வந்து பூமியை கொஞ்சம் குளிர்வித்து போகிறது.
''கோபி,'' அப்பாவின் அழைப்பு கேட்டது.
எழுந்தான். கண்களில் லேசான வெப்பம். இரவு, கணக்கு பாடத்துடன் மல்லுக்கட்டியதில் வந்த சிவப்பு.
''அப்பா,'' என்று, எழ முயன்றான்.
''இருடா கண்ணு...'' என்று, அவன் பக்கத்தில் உட்கார்ந்து, புன்னகைத்தார்.
முகம், ஒரு மஞ்சள் மலர் போல மாறியிருந்தது. இவ்வளவு அழகாகவா இருக்கும் அப்பாவின் முறுவல் முகம்?
''சாரிப்பா... ராத்திரி கொஞ்சம், 'டைமன்ஷன் சம்ஸ்' போட்டதுல, களைப்பாகி, துாங்கிட்டேன்ப்பா,'' என்றான்.
''இதெல்லாம் இருக்கட்டும்... நீ, உன் நாடகம் பத்தி சொல்லு,'' என்றார்.
''நாடகமா... எதுப்பா?''
''காந்தி பத்தி நாடகம் போட்டியாமே... அம்மாகிட்ட சொன்னேல்ல, அதுல சுவாரஸ்யமா ஏதாவது சொல்லு...''
''சொல்றேன்ப்பா... காந்திஜி, ஒரு சமயம், மைசூர்ல தங்கியிருந்தாராம். காங்கிரஸ் கூட்டம் முடிந்ததும், நண்பர் ஒருத்தர் வந்து, 'பாபுஜி... இங்க பக்கத்தில் தான் ஜோக் அருவி இருக்கு, ஆசியாவிலேயே மிகப்பெரிய அருவி, வாங்க போய் பாக்கலாம்'ன்னு சொன்னாராம்.
''சிரிச்சுகிட்டே, 'பெரிய அருவியா, அதைவிட பெரிய அருவிய நான் பார்த்திருக்கேன்'னு, சொன்னாராம். நண்பர் திகைச்சுப் போய், 'அது எப்படி, ௧,௦௦௦ அடி உயரத்துல இருந்து விழுகிற அருவியை விட, பெரிய அருவியை நீங்க பார்த்திருக்க முடியும்'ன்னு கேட்டாராம்.
''அதற்கு, 'வானத்துல இருந்து கொட்டற மழையைச் சொன்னேன்... அதைவிட பெரிய அருவி இருக்கிறதா என்ன...' என்று கேட்டாராம், காந்திஜி. ஆடியன்ஸ், இதை ரொம்ப ரசிச்சாங்கப்பா... ஒரே கை தட்டல், தமிழ் டீச்சர், வத்சலா மேடம், எனக்கு கை கொடுத்து பாராட்டினாங்கப்பா,'' என்றான்.
அவனை அணைத்து முத்தமிட்டார், அப்பா.
''சரிடா கண்ணு... நீ தொடர்ந்து நாடகம் எழுது. உனக்கு என்ன ஆசையோ அதையும் விடாம செய். பாடத்துல தலையை ரொம்ப உடைச்சுக்காம, ஜஸ்ட், பாஸ் மார்க் வாங்கிடு போதும்... சரியா,'' என்றார், மென்மையாக.
''அப்பா.. அப்பா...'' என்றான்.
என்ன சொல்கிறார், கனவில்லையே இது, அப்பாவா பேசுகிறார்?
அவன் தலையை கோதியபடியே, ''உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, பள்ளி நண்பர்கள் எல்லாரையும் கண்டுபிடிச்சு, ஒரு விழா நடந்தது... நானும் ரெண்டு நாள் போனேன்ல, அங்கதான் புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சது...
''ஆறு வருஷம், எங்க பேட்ச், 40 பேரும் ஒண்ணா ஒரே பள்ளிக்கூடத்துல படிச்சோம். ஒவ்வொருத்தன் ஒவ்வொரு வகை... இதுல முதல் வரிசை, புத்தகப் புழுவா இருந்து, முதல் அஞ்சு இடங்களுக்குள்ள வர்றவங்க... நடு வரிசை, 60 - 70 சதவீதம் வாங்குற பசங்க...
''கடைசி பெஞ்ச், இப்படி அப்படின்னு சந்தேக கேஸ்கள்... பாசும் ஆகலாம், பெயிலும் ஆகலாம். இதுல எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும்; இப்போ, 30 ஆண்டுகளுக்கு பின், நாங்க சந்திச்சபோது, எங்களுக்கு சந்தோஷமும், அதிர்ச்சிகளும் கிடைச்சது...
''முதல் வரிசை, பாலகிருஷ்ணன், ஏதாவது ஒரு கல்லுாரியில பிரின்சிபாலாவோ, தலைமை புரபசராவோ இருப்பான்னு நெனச்சோம்; அவன், போலீஸ் துறையில, அதிகாரியா இருக்கான். அவன் பக்கத்துல, 90 சதவீதம் வாங்கின, அனந்து, பிரைவேட் கம்பெனியில, மேனேஜரா இருக்கான்...
''கடைசி பெஞ்ச்ல, அப்பவே, பனை மர உயரத்துல இருந்த, தியாகு, உடற்பயிற்சி இயக்குனரா இருப்பான்னு நெனச்சேன்; அவன், மிலிட்டரியில ஒரு பயிற்சியாளரா இருக்கான். எப்பவும் ரன்னிங், உடற்பயிற்சின்னு இருந்த, லுார்து, வாலிபால் வீரனாக ஆகியிருப்பான்னு பார்த்தால், கோர்ட்டுல, ஒரு குமாஸ்தாவா ஆகிட்டான்...
''ஆனால், இந்த நடுநிலை பெஞ்ச் ஆட்கள் இருக்காங்களே, அவங்க தான் எங்களை ஆச்சரியப்படுத்திட்டாங்க,'' என்று, தொண்டையை கனைத்து, நிதானமாக தொடர்ந்தார்...
''நடு வரிசை பசங்க தான், நம்ப முடியாம பெரிய இடங்கள்ல இருக்காங்டா, கோபி... சம்பத்ன்னு சொல்வேன்ல, அவன், 'மைக்ரோ பயாலஜி' படிச்சு, அமெரிக்காவுல, லாஸ் வேகாஸ்ல பல்கலைக்கழகத்தில், தலைமை புரபசரா ஆகியிருக்கான்... வேம்புன்னு ஒரு பையன், 'எம் சேனல்' இருக்குல்ல, அதுல, 'கிரியேட்டிவ்' தலைமையாம்...
''மஜீத்ன்னு ஒருத்தன், ஐஸ் கட்டிகள் தயாரிக்கிற பெரிய தொழிற்சாலைகளுக்கு தலைவன்... அப்புறம், வாசுதேவன், ஆஸ்திரேலியாவுல, ரேடியோ ஒன்றை ஆரம்பிச்சு, பெரிய, 'ஹிட்' ஆகி முதல் இடத்துல இருக்கானாம். இவங்க எல்லாருமே, தன் மனசுக்கு என்ன விருப்பமோ அதுக்கு முதலிடம் கொடுத்தவங்கடா, கோபி...
''அந்த ஒன்றை உள்ளேயே போற்றி வெச்சு, காலம் கனியும்போது, மெல்ல மெல்ல நடைமுறைக்கு எடுத்து வந்து ஜெயிச்சவங்க... முதல் வரிசை போல, படிப்புலயே மூழ்கி யந்திரமாகவும் ஆகலே, கடைசி வரிசை போல, கல்வியை அலட்சியப்படுத்தவும் இல்லே...
''கவுரவமா பாஸ் பண்ணி, வெளில வந்து தங்களோட கனவுகளுக்காக உழைச்சு, இப்போ மகிழ்ச்சியா, வெற்றியா வாழறாங்க... எனக்கு அவ்வளவு பெருமையா இருந்துச்சுடா, கோபி, அந்த நண்பர்களை பார்க்கும்போது,'' என்றார்.
அவனை அணைத்து முத்தமிட்டு, ''உன் கனவை, ஆக்கப்பூர்வமா நடைமுறைப்படுத்து. சின்ன சின்ன காலடிகளால துவங்கு. முடிந்தவரை பாடங்களை படி. 90 - 95 சதவீதம்ன்னு, உயிரை விட வேண்டாம். அடுத்த வருஷ முடிவில் இன்னும் தெளிவு வந்திருக்கும்; வேகமும் வரும். பாத்துக்கலாம்... சரியா கண்ணு?''
அப்பாவின் கைகளில் முகத்தை பதித்து, ஆனந்தமாக கண்ணீர் விட்டபடி, சிரித்து தலையாட்டினான்.
சீகல் பறவைகள், உயரே பறந்து கொண்டிருந்தன.

உஷா நேயா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
29-ஜூலை-202022:28:41 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI கனவுகள் நனவாகும்என்றுகூறியுள்ளார் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். ஆனால் அந்தக்கு கனவும் நம் மனதில் ஆழமாக வேரூன்றி என்றும் நிரந்தரம் பெற்றால் மட்டுமே நனவாகும். கோபிநாத் போல ஒவ்வொரு மாணவனும் தத்தம் கடமைகளை சரியாக செய்தால் போதுமானது. நல்ல தேர்வு. மாணவர்களின் கனவு நாயகன் டாக்டர் அப்துல்கலாம் ஐயா அவர்களின் நினைவு தினம் நினைவு கூர்ந்ததை போன்றவர்கள் இருந்தது
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
28-ஜூலை-202022:59:37 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI சபாஷ் கோபிநாத் நினவு தான். அப்பாவுக்கும் ஒரு பாராட்டு.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
27-ஜூலை-202009:34:50 IST Report Abuse
Girija கலையெடுத்தால் தான் பயிர் செழிக்கும், குழந்தைகளுக்கு உலகம் என்ற ஜன்னலை திறந்து காட்டி, எதார்த்தத்தை புரியவைக்கவிட்டால் அதே குழந்தைகள் நாளை வாழ்க்கையில் முன்னேறாமல் அல்லது எதோ ஒரு வகையில் பின்தங்கிவிட்டாலோ என்ன சொல்வர் ? என் பெற்றோர்கள் தகுந்த அறிவுரை சொல்லி வளர்க்கவில்லை, வழிகாட்டவில்லை என்று. பிளஸ் 2 என்பது விமான பயணம், ரயில் பயணம், பேருந்து பயணம் போன்றது, எது என்பதை முடிவு செய்யவேண்டிய இடம். விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்து கொண்டார் என்பது போல், இப்போது எதிரில் என்ன தெரிகிறது என்பதை தான் நன்கு பற்றிக்கொள்ள வேண்டும் . முதலில் கல்வி என்ற அடித்தளம் சரியாக அமைந்துவிட்டால் வானம் வசப்படும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X