'தூக்குப்போட்டு செத்துப்போன ராதா வந்திருக்கேன்!' - பெண்களை மட்டும் 'பேய்' பிடித்தாட்டுவதேன்! | நலம் | Health | tamil weekly supplements
'தூக்குப்போட்டு செத்துப்போன ராதா வந்திருக்கேன்!' - பெண்களை மட்டும் 'பேய்' பிடித்தாட்டுவதேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
00:00

''என் மகளுக்கு பேய் பிடிச்சிருச்சு... பேயை ஓட்ட பல இடத்துல வைத்தியம் பார்த்தும் குணமாகலை...,''- கவலை தேய்ந்த முகத்துடன் பெண்ணின் தந்தை கூறினார். அப்பெண்ணின் உடலில், பல இடங்களில், ரத்தக்காயங்கள் இருந்தன. பரிசோதித்த கோவை ராயர்கேர் மருத்துவமனையின் மனநல மருத்துவர் பரந்தாமன் சேதுபதி, முதலில் காயத்துக்கான மருத்துவம் அளித்தார்.
பின்னர், அப்பெண் ஹிஸ்டீரீயா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதற்குரிய மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை, குறிப்பிட்ட இடைவெளியில், மூன்று மாதங்கள் அளித்தார்.
சில கவுன்சிலிங்கில், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தற்போது, அப்பெண் பூரண நலம் பெற்று, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். ''டாக்டர்...இது போல் பேய் பிடிக்கறதுன்னு சொல்றதெல்லாம் உண்மையா...,'' என்ற நம் கேள்வியை சிரித்தபடி எதிர்கொண்ட டாக்டர் பரந்தாமன், ''ஒருவர் தனது இயல்பு நிலையை இழப்பதே, இதற்கு காரணம். இதை ஹிஸ்டீரியா என்று அழைக்கின்றனர். விஞ்ஞானத்தை ஏற்க மறுப்பவர்கள் இதை பேய், ஆவி, சூன்யம் என்கின்றனர்,'' என்றார்.
''எதனால் இந்த இயல்பிழப்பு ஏற்படுகிறது,'' என்று கேட்டதற்கு, ''இயல்பிழப்பு என்பது ஆளுமையில், தைரியம் குறைந்த மக்களிடையே ஏற்படும். மனதுக்குள் தேங்கி கிடக்கும் கோபம், வெறுப்பு, இயலாமை ஆகியவை தாங்க முடியாத கட்டத்தில், வெடித்துச் சிதறி இவ்வகை நோயாக வெளிப்படும். இது போன்ற சூழ்நிலையில், தன் மீது அதிகாரம் செலுத்தியவர்கள், தன்னிடம் தஞ்சமாவதை பார்த்து, ஆழ்மனதுக்குள் மகிழ்ந்து, அதே போன்ற சூழ்நிலையை, சிலர் தங்களுக்கு, தாங்களே அடிக்கடி உருவாக்கிக் கொள்வர்,'' என்றார் டாக்டர்.
இது குறித்து, மேலும் அவர் விளக்கி கூறியதாவது:காலம், காலமாக வளர்க்கப்பட்டு வரும், சில நம்பிக்கைகளும், இதற்கு ஒரு காரணம். சிலருக்கு கோவிலின் சூழல், வாத்தியங்களின் முழக்கம் ஆகியவை, இவ்வகை வெளிப்பாடு தோன்ற காரணமாக அமையலாம். ஆழ் மனப்போராட்டங்களையும், குமுறல்களையும், வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாகவே, இது உள்ளது.பெரும்பாலும் பூசாரிகள், மந்திரவாதிகளால் இது குணப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை உண்டு. இது ஒரு மனநல பாதிப்பு. இதற்கு மருத்துவ ஆலோசனையும் தேவை என்பதை, அனைவரும் உணர வேண்டும். பல நேரங்களில், இது போன்று நோய் வந்தவர்களுக்கு, சமூகத்தில் மதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் தெய்வசக்தி, உள்ளவர்களாக கருதப்பட்டு வணங்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் இல்லை
ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஆழ்மனம், மேலும் அழுத்தப்படும்போது, மனதில் இருந்து வெளிப்பட்டு, உதவிக் கோரும் குரலே இந்த நோய் எனலாம். இது வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்படும் செயல் அல்ல. குறிப்பிட்ட நபரை அறியாமல் நடக்கின்ற அனிச்சை செயலே.இது போன்ற நோய்கள், வெளிநாடுகளில் ஏறக்குறைய இல்லை. ஆனால், நம் நாட்டில் இது பெரும்பாலும், இளம் பெண்களுக்கே இந்த மனநல பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லாத காரணத்தாலும், ஆண்களை போல, சொந்த பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாத காரணத்தாலும், நம் நாட்டில் இந்த இயல்பிழப்பு அதிகம் காணப்படுகிறது.
என்னதான் தீர்வு
இது தற்காலிகமான, முற்றிலும் தீர்க்கப்படக்கூடிய மன நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுடைய சொந்த பிரச்னைகள், உறவுகளுக்கு இடையே உள்ள புரிதல் ஆகியவை குறித்து, தெளிவான கவுன்சிலிங் கொடுப்பதால், குணமாக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

மந்திரவாதிக்கு சக்தி இருக்கிறதா?
''சாமியார்கள், மந்திரவாதிகளால் இது முடியும் அல்லது முடியாது என்று அறுதியிட்டு கூற முடியாது. இது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம் என்பதால், அவர்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை, ஆதரவான மொழியில் பேசி, குணமடைய செய்ய வாய்ப்புண்டு. பல இடங்களில், அது போல் நடந்து இருக்கிறது,''

இறைச்சியும் மதுவும் ஏன்?
''கிராமங்களில் பெண்களுக்கு 'பேய்' பிடித்து விட்டால், அவர்கள் அதே பகுதியில் வசித்து, இறந்து போன நபரை போல பேசுவதும், அளவில்லாமல் இறைச்சி உண்ணுவதும், மது அருந்துவதும் ஒரு வகையான ஆழ்மன பாதிப்புதான். இந்நோயால் தாக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகள், பாவனைகளை தன் ஆழ்மனதில் இருத்திக் கொண்டு, அதே போல நடப்பது, பேசுவது, உண்ணுவது என, அனைத்து பாவனைகளையும் செய்வர்,''.

டாக்டர் பரந்தாமன் சேதுபதி,
மனநல மருத்துவர்,
95974 27975.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X