சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (13)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
00:00

கதை வசனகர்த்தாவாக இருந்த என்னை, இயக்குனர் அந்தஸ்துக்கு உயர்த்தியது, காசேதான் கடவுளடா படம்.
இதை நாடகமாக போட்ட போதே, நல்ல வரவேற்பு. நாடகத்தை, 20 நாட்களுக்கு சபாவில், 'புக்' செய்தனர்.
நாடகத்தை பார்த்த, ஏவி.எம்., நிறுவனத்தார், 'நாங்கள், இந்த நாடகத்தை படமாக்குகிறோம். ஒரு நிபந்தனை, இந்த படத்தை, நீங்கள் தான் இயக்க வேண்டும்...' என்றனர்.
ஆனால், எனக்கு இயக்குவதில் அப்போது ஆர்வம் கிடையாது.
'என் எழுத்தை சிதைக்காமல், சி.வி.ராஜேந்திரன், படமாக்குவார். அவரையே இயக்குனராக போட்டு விடுங்களேன்...' என்றேன். இருப்பினும், 'நீங்கள் தான் இயக்க வேண்டும்...' என்று சொல்லி விட்டார், ஏவி.எம்., செட்டியார்.
படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.
'ஜம்புலிங்கமே ஜடாதரா...' என்ற பாட்டு, பயங்கர, 'ஹிட்!' முத்துராமன் - லட்சுமி பாடும், 'மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது...' என்ற பாடலுக்காக போடப்பட்ட, 'மெகா சைஸ்' டெலிபோன், ஆபிஸ் மேஜை, ஸ்பீக்கர் போன்ற அரங்க அமைப்பு, பலரால் பாராட்டு பெற்றது.
இந்த படத்தில் இடம் பெற்ற, 'இன்று வந்த இந்த மயக்கம்...' என்ற பாடல், பாடகி சுசீலாவிற்கு, தேசிய விருதை பெற்றுத் தந்தது.
ஆங்கில படம் மட்டுமே ஓடும், பைலட் தியேட்டரில், இந்த படத்தை துணிந்து, வெளியீடு செய்தார், ஏவி.எம்.செட்டியார். படத்தில், போலி சாமியாராக வரும், தேங்காய் சீனிவாசனின் வசனத்தை கேட்டு, தியேட்டரில் பயங்கர கரகோஷம்.
இதை மக்களோடு மக்களாக உட்கார்ந்து ரசித்த, ஏவி.எம்., நிறுவனத்தார், தியேட்டர் வாசலில், அன்று இரவே, தேங்காய் சீனிவாசனுக்கு, 16 அடிக்கு, 'கட் - அவுட்' வைத்து விட்டனர்.
மறுநாள் காலையில், இதை கண்ணுற்ற, தேங்காய் சீனிவாசன், வேட்டி, சட்டை, பழத்துடன் என்னைப் பார்க்க வந்து விட்டார்.
'தெய்வமே... என்னை ஆசீர்வதியுங்கள். எல்லா புகழும் உங்கள் வசனம் பேசியதால் தான்...' என்று கூறி, ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.
அவர் போன கொஞ்ச நேரத்தில், முத்துராமன் வந்தார்.
சற்றே சோகமாக, 'என்ன சார்... நான் தான் படத்தோட, கதாநாயகன். ஆனால், தேங்காய் சீனிவாசனுக்கு, 'கட் - அவுட்' வைத்திருக்காங்க...' என்றார்.
'அதெல்லாம் தயாரிப்பாளர் விருப்பம்...' என்று சொல்லி, அவரை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தேன்.
இந்த படத்தின் மூலம் நட்பு வளையத்திற்குள் வந்த இன்னொரு நடிகர், எம்.ஆர்.ஆர்.வாசு.
'கோபு... நீ எடுக்கிற எல்லா படத்துலயும் நான் இருக்கணும்...' என்பார்.
ஒருமுறை, மிகவும் களைத்துபோய் காணப்பட்டார். என்ன ஏது என்று விசாரித்த போது, 'வீட்டுப் பிரச்னையில், பசங்கள போட்டு அடிச்சுட்டேன். மனசே சரியில்லை...' என்றார்.
நான் சும்மாயிருக்காமல், ஆறுதல் சொல்கிறேன் பேர்வழின்னு, 'கவலைப்படாதே, நாளை காலை, 7:00 மணிக்கு, என் வீட்டுக்கு வந்துடு... பக்கத்துல தான் பார்த்தசாரதி கோவில்... நான் அழைச்சுட்டு போறேன். போய்ட்டு வந்துட்டா, மனப்பாரம் இறங்கிடும். மறக்காம, உன் பிள்ளைகளையும் அழைச்சுட்டு வா...' என்றேன்.
மறுநாள் காலை, 7:00 மணிக்கு, வீட்டு வாசலில் வந்து நின்ற வாசு, அவருக்கே உரிய கட்டைக்குரலில், 'கோபு...' என்ற அழைப்பில், தெருவே திரும்பிப் பார்த்தது.
'கோபு... நான் கரீட்டா வந்துட்டேன். புள்ளைகள அழைச்சுட்டு வரச்சொன்னியே, அழைச்சுகிட்டு வந்துருக்கேன். இந்த பாரு எம் புள்ளைகளை...' என்று, அவரின் இரண்டு கையிலும் துாக்கி காட்டிய இடத்தில், இரண்டு மது பாட்டில்கள்.
பயங்கர அதிர்ச்சி. அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள், போதும் போதுமென்றாகி விட்டது.
நான் ரசித்து எழுதிய நாடகம், காசேதான் கடவுளடா என்றால், ரசித்து எழுதி, இன்றைக்கும் எனக்கு பிடித்த படமாக இருப்பது, உத்தரவின்றி உள்ளே வா தான்.
பணக்காரரான ரவிச்சந்திரன், நண்பர்கள் நாகேஷ், மாலி, மூர்த்தியுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பார். அப்போது, அபலை பெண்ணான, காஞ்சனா வீட்டிற்குள் நுழைவது, மாலிக்கு குழந்தை கிடைப்பது, நாகேஷுக்கு பூர்வஜென்ம வாசனையும், வசனமும் கொண்ட, ரமாபிரபா, 'நாதா... நாதா...' என்று அழைத்தபடி அலைவது என்று, கடைசி வரை நகைச்சுவை குறையாமல், படம் விறுவிறுப்பாக செல்லும்.
'உனக்காக ஒரு படம், எனக்காக ஒரு படம்...' என்று, ஒரே நேரத்தில், இரண்டு படங்கள் எடுத்தார், ஸ்ரீதர். உத்தரவின்றி உள்ளே வா படம் எனக்கானது. அவளுக்கென்று ஒரு மனம் ஸ்ரீதருக்கானது; சோகமான படம். இரண்டு படத்திலுமே கதாநாயகி, காஞ்சனா தான்.
காலையில் வந்து, என் படத்தில் சிரி சிரி என்று சிரித்தபடி நடிப்பார்; மாலையில், ஸ்ரீதருக்கான படத்தில், பிழிய பிழிய அழுவார்.
எனக்கே எப்போதாவது மனக்கவலை வந்தால், இந்த படத்தை தான் போட்டு பார்ப்பேன். அந்த அளவிற்கு இன்றும் கூட பொருந்தக்கூடிய அளவிற்கு இந்த படத்தின் நகைச்சுவை அமைந்திருக்கும்.
நடிகர், ரஜினி, கமலுடனான அனுபவங்களை அடுத்த வாரம் சொல்கிறேன்.

பயமுறுத்திய, 'தேனாற்றங்கரையினிலே...'
தமிழில், 1971ல், வெளிவந்தது, உத்தரவின்றி உள்ளே வா நகைச்சுவை திரைப்படம். சித்ராலயா பிக்சர்ஸ் சார்பில், ஸ்ரீதர் தயாரிப்பில், என்.சி.சக்கரவர்த்தி இயக்கத்தில், கோபு கதை, வசனத்தில் வெளியானது. இப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், ரமாபிரபா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, தேங்காய் சீனிவாசன் மற்றும் மாலி போன்ற பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம் பெற்ற, 'உத்தரவின்றி உள்ளே வா...' பாடலை முணுமுணுக்காதவர்களே கிடையாது. அதே போல, 'தேனாற்றங்கரையினிலே தேய்பிறையின் நிலவினிலே...' என்ற பாடலை, அடிக்கடி அப்போது இரவு நேரத்தில், ரேடியோவில் ஒலிபரப்பி பயமுறுத்துவர். இந்த பாடலுக்காகவே, பெரும் வரவேற்பை பெற்றார், ரமாபிரபா.

தொடரும்
எல். முருகராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anvarsha - san francisco,யூ.எஸ்.ஏ
06-ஆக-202008:02:34 IST Report Abuse
anvarsha உத்தரவின்றி உள்ளே வா படம் பிடித்திருக்கிறது என்று கோபு அவர்கள் சொன்னதால் நேற்று பார்த்தேன். நகைச்சுவை விஷயத்தில் பரவாயில்லை என்றாலும், மிகவும் ஆட்சேபத்துக்குரிய விஷயங்கள் இருந்தன. ஒரு பெண் உடை மாற்றுவதை நால்வர் மறைந்து நின்று ரசிப்பது (அதில் ஒருவர் அந்த பெண்ணின் காதலராக வருவார் பின்னால். கொடுமை) , மன நிலை தவறிய பெண்ணை நகைச்சுவைக்காக உபயோகப்படுத்தியது, அதே பெண்ணை வெறுத்து ஒதுக்கினாலும், குளிக்கும்போது சோப்பு போடுவது, சச்சு சில நொடிகளில் காதலிக்க ஒப்புக்கொள்வது, நால்வரில் ஒரு நண்பனாக இருந்தாலும் சம்பளம் குறைந்த வேலையில் இருப்பதால் எல்லா எடுபிடி வேலைகளுக்கும் அவரை மற்றவர்கள் உபயோகப்படுத்தி க்கொள்வது.. சொல்லிக்கொண்டே போகலாம். படம் வெளிவந்த காலத்தில் இதெல்லாம் வெறும் நகைச்சுவைக்காக என்று எளிதாக எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ. இப்போது இவை தாண்டி படத்தை ரசிக்க முடியவில்லை
Rate this:
Cancel
Lakshmi - Thirumazhisai (TP),இந்தியா
05-ஆக-202011:44:33 IST Report Abuse
Lakshmi "காசே தான் கடவுளடா" அருமையான நகைசுவை படம். தேங்காய் சீனிவாசன் அவர்களின் நடிப்பு - சிரிப்பூ. கோபு அவர்களின் வசனம், இயக்கம் மிக சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X