அவர்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
00:00

''பிரமாதம் தர்மா... உன்னோட முயற்சி, வளர்ச்சி அபாரம்,'' என்றான், ஆறுமுகம்.
''ஒரு நாள், நீ இப்படி உயரத்துக்கு வருவேன்னு எனக்கு தெரியும்,'' என்றான், கந்தன்.
மையமாக புன்னகைத்தான், தர்மா.
தர்மாவை சிறிய வயதிலிருந்தே அறிந்த இருவரும், ஒரே ஊர்க்காரர்கள்.
அப்போது, சாப்பாட்டுக்கு சிரமம். அப்பா இல்லை. அம்மாவோடு வயல் வேலை. உழைத்து கூலி வந்தால் தான் சாப்பாடு, பள்ளிக்கூட கட்டணம், புத்தகம் எல்லாம்.
பணம் இல்லாத போது, ஆறுமுகத்திடமோ, கந்தனிடமோ போய் நிற்பான்.
இருவரும், அப்பாவின் நெருங்கிய நட்பு மற்றும் உறவினர்கள்.
ஆறுமுகம் சட்டை பையில் பணம் இருக்கும்; அதை வெளியில் எடுக்க மனம் வராது.
'காலையில் வந்து பாரு... சாயங்காலம் வா... அவசர வேலையா வெளியில் போறேன்... என்னையே சுத்தி வந்தால் எப்படி... எந்த நேரமும் பையில் பணம் இருக்குமா, இரண்டு நாள் கழிச்சு வா...' என்றெல்லாம் அலைய விடுவார்; கடைசியில், சொற்பமாக கொஞ்சம் தருவார். அது, பள்ளிக்கூட கட்டணம் கட்டவும் போதாது, புத்தகம் வாங்கவும் போதாது.
கந்தன், வேறு விதம்.
'ஏட்டு சுரக்கா கறிக்கு உதவாது, எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கு இல்லை ஒப்புக்கொள்ன்னு, பெரியவங்க சொல்லியிருக்காங்க. பெரிய படிப்பு படிச்சவனெல்லாம் வேலை கிடைக்காமல், அஞ்சுக்கும், பத்துக்கும் அலையறான். படிப்பை விடு, போய் ஏதாவது வேலையை பார்...' என்று, அறிவுரை சொன்னவன்.
இப்போது, 'எனக்கு அப்பவே தெரியும், நீ நல்லா வருவே...' என்று சொல்கின்றனர்.
மழை இன்றி, விவசாயம் பொய்த்து, வேலையோ, வருவாயோ இல்லாத நாளில், 'டவுன் பக்கம் போனால் கட்டட வேலை கிடைக்கும்...' என்று, ஊரை விட்டு, 10 பேர் புறப்பட்டனர். அதில், தர்மாவும், அவன் அம்மாவும் அடக்கம்.
ஓரிடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. கல், மணல், ஜல்லி, கலவை என்று தலையில் சுமந்தாள்.
அவனுக்கு போதிய வயதில்லை என்று ஒதுக்கினர். அவர்கள் தங்கியிருக்க, கட்டுமானம் நடக்கும் இடத்துக்கு பக்கத்தில் போட்டிருந்த ஓலை குடிசையினுள் அவனை இருக்கச் சொல்லி, தான் மட்டும் வேலைக்கு சென்றாள், அம்மா.
வேலை நடக்கும் இடத்தை சுற்றி சுற்றி வந்தான், தர்மன்.
பள்ளியில் படிக்க முடியாத குறையை, வேலை நடக்கும் இடம் சொல்லிக் கொடுத்தது.
மணல் ஒரு லோடு எவ்வளவு, கல் விலை என்ன, சிமென்ட் விலை என்ன, ஜல்லி, மணல் மற்றும் சிமென்ட் கலவை எப்படி போடுகின்றனர், அஸ்திவாரம் எப்படி கட்டுகின்றனர் என்று வேடிக்கை பார்த்து, ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டான்.
சின்னதாக, 'கான்ட்ராக்ட்' எடுத்து செய்யும்போது, வயது, 18. மொத்தமாக ஒரு கட்டடத்தை கட்டும் திறமை வந்த போது, வயது, 24. சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தலைவரானது, 26வது வயதில்.
அவனோடு வந்த, 10 பேரில், சிலர், அடிக்கடி ஊருக்கு போவர், வருவர். மழை பெய்தால் விவசாயம் பார்க்க, ஊரிலேயே இருந்து விடுவர்.
'நாமும் போவோம்...' என்பாள், அம்மா.
'அங்கு போனால், கூலி வேலை தான். இங்கும், அது தான். ஒரு இடமாக இருந்தால் நல்லது...' என்றான்.
ஏற்றுக் கொண்டாள்.
உறவுகள் விட்டுப் போய்விடக் கூடாது என்று, நாலும் கிழமையும் வந்தால், ஊருக்கு போய் எட்டிப் பார்த்து வருவாள், அம்மா.

இந்த முறை பயணத்தின்போது, 'நாங்களும் வர்றோம்...' என்று, தொற்றிக் கொண்டனர், ஆறுமுகமும், கந்தனும்.
அவனது நிறுவனத்திற்கு வந்திருந்த, அவர்களைப் பார்த்ததுமே, சுருக்கென்று கோபம் வந்தது, தர்மனுக்கு. 'நறுக்'கென்று கேட்க வேண்டும் என்று துடித்தான்.
அடக்கியபடி, ''எப்படி இருக்கீங்க,'' என்றான்.
''ஏதோ இருக்கோம்.''
''நல்லா இருக்கோம்ன்னு சொல்லுங்க... நம் நிலைமை எதுவாக இருந்தாலும், வார்த்தையில் தொய்வு வரக்கூடாது; நிமிர்ந்து உட்காருங்க,'' என்றான்.
ஆசிரியருக்கு கட்டுப்பட்ட மாணவர்கள் போல், இருவரும் நிமிர்ந்து, அமர்ந்தனர்.
''உங்களை கடைசியா இப்படிதான் தோரணையோடு பார்த்திருக்கேன். பேச்சும் அப்படி தான் இருக்கும்.''
'அது அப்போ...' என்றனர்.
''வயசானால், தெம்பா இருக்கக் கூடாதா என்ன,'' என்றான்.
அவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்பி இருந்தாள், அம்மா.
மூவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
''பெரிய ஆளாகியும் கர்வமில்லாமல் எங்களோடு சேர்ந்து சமமா உட்கார்ந்து சாப்பிடற பாரு... இந்த குணம் தான் உன்னை உயர்த்தி இருக்கு,'' என்றான், ஆறுமுகம்.
''அம்மா வளர்ப்பு அப்படி,'' என்றான், கந்தன்.
'உன் அப்பாவுக்கு ஒரு கனவு இருந்தது. தன் மகன், எதிர்காலத்தில் ஒரு நல்ல இடத்துக்கு வந்து, சவுக்கியமா இருக்கணும்ன்னு, அதை நீ நிறைவேத்திட்டே. அப்பா நினைவாக, ஊருக்கு ஏதாவது நீ செய்யணும், தர்மா...' என்றெல்லாம் பேசினர்.
''நிச்சயம் செய்வோம்; அதற்கு உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியும், உதவியும் தேவை,'' என்றான்.
'ஆஹா... என்ன வேணும் சொல்லு, செய்ய காத்திருக்கோம்...' என்றனர்.
''நேரம் வரும்போது சொல்றேன்,'' என்ற தர்மா, ஆளுக்கொரு கவரை கொடுத்து, ''செலவுக்கு வச்சுக்கங்க,'' என்றான்.
அவர்கள் புறப்பட்டனர். ஒவ்வொரு கவரிலும், 10 ஆயிரம் ரூபாய் இருந்தது.

ஊர் திரும்பும்போது, கந்தனிடம், ''தருமா, சின்னவனா இருக்கும்போது, படிக்க வசதி இல்லாம, உதவி கேட்டு என்கிட்ட வருவான். நான் அவனை சுத்தல்ல விட்டு, ஏதோ கொஞ்சம் கொடுத்து, அவனை வேதனைப்படுத்தி இருக்கேன். அதையெல்லாம் மனசுல வச்சுக்காம, சோறு போட்டு, பணமும் கொடுத்து, கவுரவமா வழியனுப்பி இருக்கான்,'' என்றான், ஆறுமுகம்.
''எனக்கும் ஒரு உதைப்பு இருக்கு. படிக்க பணம் கேட்டு வந்தவனை, உழைக்க போன்னு விரட்டினேன். ஏதோ நல்ல நேரம், மேலே வந்துட்டான். இல்லைன்னா, காலத்துக்கும் என்னை கரிச்சுக் கொட்டியிருப்பான்,'' என்றான், கந்தன்.
''இனிமே, யார் உதவி கேட்டாலும், சட்டுன்னு செய்துடணும்,'' என்றான், ஆறுமுகம்.
''நானும், அந்த முடிவுக்கு தான் வந்திருக்கேன்,'' என்றான், கந்தன்.
இதை தான் இவர்களுக்கு சொல்ல இருந்தான், தர்மா.

படுதலம் சுகுமாரன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
07-ஆக-202020:33:33 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ஈத்துவக்கும் இன்பமே தனி தான். உணர்த்த வந்த கதை. நம்மிடமுள்ள பணத்தை தேவை என்ற நபருக்கு கொடுத்து உதவுவது என்பது நன்மை தரும். அவர்களை அலையவிட்டு ஏதாவது ஒரு வகையில் இகழ்ந்தாலும் நம்மை நாமே அழித்துகொள்வதற்கு சமம்.
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
04-ஆக-202001:15:36 IST Report Abuse
Manian நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாட்கள் இதோ என் மேஸ்திரி சிங்காரத்திடம் சித்தாளா ஒரு மாசம் வேலை பாருங்க. அப்பாலே ஊலே உங்களுக்கே ஒரு கட்டுமான தொழில் ஆரம்பிக்க உதவி செய்கிறேன் என்றான் தர்மு.. ஒரு மீனை தற்றத விட, மீன் பிடிக்க கத்து தந்தா வாழ் நாள்ளே கவலையே இருக்காதே நீங்க முன்பு உதவி செய்லைன்னு வருத்தமே இல்லை 'ஊணினை உருக்கி உள் ஒளி பெருக்கின்னு தேவாரம்' ஞாபகம் இருக்கா. அது மாதிரி நீங்க எனக்குள்ளே இருந்த திறமைகளை மறைமுகமாக வெளிப்பபடுத்தினீர்கள். ரொம்ப நன்றி. என் டிரைவர் உங்களை ஊர்லே கொண்டு விடுவார். கை செலவுக்கு தோ என் அன்பளிப்பு 100 ரூ என்று கொடுத்தான். காசே கொடுக்காமல்,, ஓட்டு வாங்கி விஞ்ஞாக் கொள்ளை அடிக்க அரசியல்வாதிகள் போல வந்த கந்தனும், ஆறுமுகமும், தமிழை சரியாக பேச, எழுத கற்றுக் கொள்ள விரும்பாமல் திரிந்த பலனை உணர்ந்து,"ம்ம்" என்று குனிந்த தலையுடன் போனார்கள். “ உன் நண்பர்களை விட, உன் எதிரிகளே உன் திறமையை உணரச் செய்வார்கள்" என்று தமிழ் ஆசிரியர் மின்னல்தாசர் சொன்னதை நினைத்து பார்த்தான் தர்மு இது போன்ற நாய் வால்ளை நிமிர்த்த முடியாது, அது அவர்கள் மரபணு வழி என்பதை உணர்ந்தவன் தர்மு
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-ஆக-202011:11:20 IST Report Abuse
D.Ambujavalli ஈயாத பேருக்கு இட்டு காட்டு, செய்யாத பேருக்கு செய்து காட்டு என்பார்கள். அதுதான் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X