அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 33, கணவர் வயது: 36. மகன், ௮, மகள், 6 வயதும் உள்ளனர். நான் இல்லத்தரசி. தனியார் நிறுவனத்தில், பொறுப்பான பதவியில் உள்ளார், கணவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, பொறுப்பானவராக, அன்பானவராக தான் இருந்தார். அவர், மதுவுக்கு அடிமையானது முதல், நிம்மதி போனது.
நண்பர்களுடன், 'பார்ட்டி'க்கு போனவர், மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளானார். மாதத்தில் ஒருநாள் என்று இருந்தார், படிப்படியாக அதிகமாகி, வாரம் ஒரு நாள் என்று மாறி, இன்று, தினமும் என்றாகி விட்டது.
மது அருந்தி விட்டால், வீட்டில் அவர் நடந்துகொள்ளும் விதமே, வேறாக இருக்கும். அவர் போடும் சத்தத்தில், நானும், குழந்தைகளும் பயந்து, அறைக்குள் சென்று, கதவை தாழ் போட்டுக் கொள்வோம்.
மது அருந்தாதபோது, அவரிடம், தன்மையாக பேசிப் பார்த்தாயிற்று; அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சொல்லி, பஞ்சாயத்து செய்தாயிற்று. எதற்கும் அவர் கட்டுப்படுவதாக இல்லை. வீட்டு செலவுக்கு பணமும் சரியாக கொடுப்பதில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, நானும், குழந்தைகளும் என்ன சாப்பிடுகிறோம், பள்ளி கட்டணம் எப்படி கட்டுகிறோம் என்று கேட்டதே இல்லை. தற்சமயம், வீட்டு செலவுக்கு பணம் கேட்டால், எரிந்து விழுகிறார்.
சமீபத்திய ஊரடங்கின்போது, வீட்டிலேயே சரக்கு வாங்கி வைத்து, குடிக்க ஆரம்பித்து விட்டார். மாமனார் - மாமியார் ஏதாவது கேட்டால், அவர்களையும் கேவலமாக பேசுகிறார். நான் ஏதாவது கேட்டால், அடி, உதைதான் மிச்சம்.
பொறுத்து பார்த்த நான், என் பெற்றோருக்கு தகவல் தர, அவர்கள் என்னையும், குழந்தைகளையும் அழைத்து வந்து விட்டனர்.
அவர்கள் எனக்கு ஆறுதலாகவும் இருக்கின்றனர். இருப்பினும், கணவரை பிரிந்து வாழ்வதால், அக்கம் பக்கத்தினரின் விமர்சனத்துக்கு ஆளாக வேண்டுமே என்று பயப்படுகிறேன். இது, என் பெற்றோருக்கும் தலை குனிவு. குழந்தைகள், இங்கு சந்தோஷமாக உள்ளனர். அப்பா பற்றி பேச்சு எடுத்தாலே பயப்படுகின்றனர்.
நான் ஏதாவது வேலைக்கு சென்று, குழந்தைகளுடன் கவுரவமாக வாழவே விரும்புகிறேன். விவாகரத்து செய்கிறேன் என்றால், பெற்றோர் தயங்குகின்றனர். குழந்தைகளின் எதிர்காலத்துக்காவது பொறுத்திருக்கலாம் என்கின்றனர்.
நான் என்ன செய்வது, அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு—
வாழ்நாளில் ஒரே ஒருமுறை உற்சாகபானத்தை அருந்தினாலும், ஒருவன் குடி நோயாளியாக தான் கருதப்படுவான்.
உன் கணவன், குடி நோயாளியாக மாறி விட்டான். இந்த நிலைக்கு கணவன் வர, நீயும் ஒரு காரணமாக இருக்கிறாய். கணவன், 'பார்ட்டி'களில் குடித்துவிட்டு வரும்போதே, ருத்ரதாண்டவம் ஆடி, அவனை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
அப்படி குடித்துவிட்டு வருவதை பெருமையாக கருதுகிறீர்கள். கணவன், 'பார்ட்டி'களில் கலந்து கொள்வதால், அவனுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும் என, பகல் கனவு காண்கிறீர்கள். எப்போதாவது தானே குடிக்கிறான், குடித்துவிட்டு போகட்டும் என, சலுகை தருகிறீர்கள்.
உனக்கு ஆதரவாக பெற்றோர் இருப்பது, வரவேற்கதகுந்த விஷயம். அக்கம்பக்கத்தினரின் விமர்சனங்களுக்கு பயப்படாதே.
தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் மேற்கொண்டு படி. வேலைக்கு போ.
உன்னையும், குழந்தைகளையும் பிரிந்து உன் கணவனால் இருக்க முடியாது. சமாதானம் பேச வருவான். இரண்டு ஆண்டு அவகாசம் கொடு. முதலில் வாரம் ஒரு முறையாக, பின் மாதம் இருமுறையாக, அடுத்து, மாதம் ஒரு முறையாக குடியை குறைக்க சொல்.
மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறச் சொல். குடி பழக்கத்திலிருந்து மீண்டு வர, அதற்கான அமைப்பில் கணவனை சேரச் சொல். அந்த அமைப்பில் குடி பழக்கத்தை அறவே விட்டவர்களும், விட விரும்புபவர்களும் உறுப்பினர்களாக இருப்பர்.
வாராந்திர, மாதாந்திர கூட்டங்களில் குடி பழக்கத்தை விட்டவர்கள், தங்கள் அனுபவங்களை கூறுவர். வீரியம் நீக்கப்பட்ட பாம்பின் விஷம் தான், பாம்புகடிகளுக்கு மருந்து. ஒரு குடி நோயாளியின் அனுபவம் தான், இன்னொரு குடி நோயாளி திருந்த உதவும்.
எனக்கு தெரிந்து குடி நோயாளிகளில், 30 சதவீதம் பேர், ஏதாவது ஒரு காலகட்டத்தில் திருந்தி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். அந்த, 30 சதவீதத்தில் உன் கணவனும் ஒருவனாக ஏன் இருக்கக் கூடாது...
நீ கொடுத்த கெடுவுக்குள் கணவன் திருந்தாவிட்டால், தயவுதாட்சண்யம் பார்க்காமல் விவாகரத்து செய்யும் முஸ்தீபுகளில் ஈடுபடு.
மறுமணத்தை பற்றி, இப்போதே திட்டமிடாதே. காலமும், இறைவனும் முடிவு செய்யட்டும்.
பெற்றோருடன் அன்பாக இரு. குழந்தைகள் வளர்ப்பில் முழுமையாக ஈடுபடு. துாண்டிலுடன் நிறைய ஆண்கள் வருவர். ஜாக்கிரதையாக விலகி இரு.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்