பரணில் உறங்கும் உண்மை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
00:00

மகிழ்ச்சியில் திளைத்தார், விஸ்வேசுவரன். அவருடைய ஒரே மகள், மாநிலத்திலேயே முதலாவதாய் தேறி, முதல்வரின் கையால் தங்கப் பதக்கம் வாங்கியிருந்தாள். அதுவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில்.
''வாணி... உன்னை, 'பிராக்டிகல் டிரெய்னிங்'குக்கு அனுப்புவாங்க தானே?''
''ஆமாம்ப்பா, அது முடிஞ்சதும், அனேகமாய் சென்னையிலேயே வேலை கிடைச்சுடும்பா.''
''அதுல கொஞ்ச நாள் இருந்ததுக்கு அப்புறம், நாமே சொந்தமா ஒரு கிளினிக் வெச்சுடலாம்மா... உனக்கேத்த, ஒரு டாக்டர் பையனா பார்த்து, கல்யாணமும் பண்ணி வெச்சுட்டோம்னா, எங்களுக்கு நிம்மதி.''
''போங்கப்பா, இப்ப எதுக்கு அதெல்லாம்?''
''நீயே ஒரு நல்ல டாக்டரை தேடிண்டாலும், சரி தான்... உன் புருஷனும் டாக்டராயிருந்தா, பல காரியத்துக்கும் நல்லது. ஒரு, 'அண்டர்ஸ்டேண்டிங்' இருக்கும் இல்லியா,'' என்றார், விஸ்வேசுவரன்.
அவள் பதில் சொல்லாமல், சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்தாள்.

கணவருக்கும் மகளுக்குமிடையே நடந்த உரையாடலை கேட்டபடி, சமையற்கட்டில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த, புவனாவுக்கு சிரிப்பு வந்தது.
''அம்மா.''
''என்னடி... 'ஸ்டேட் பர்ஸ்ட் மெடல்' வாங்கிட்டே... உங்கப்பாவுக்கு தலை கால் தெரியலே.''
''ஏம்மா, அப்பாவுக்கு மட்டுந்தானா... உனக்கு இல்லியா?''
''அதை, நான் வேற தனியா இன்னொரு தரம் சொல்லணுமாக்கும்... கண் படாம இருக்க, உனக்கு, இன்னிக்கி சுத்திப் போடறதா இருக்கேன்... நீதான் டாக்டருக்கு படிச்சவளாச்சே, அதையெல்லாம் ஏத்துக்க மாட்டே... இருந்தாலும், உங்க பாட்டி
காலத்து சம்பிரதாயம்.''
''சரிம்மா, உன்னிஷ்டம்.''
''வாணி... உங்கப்பா கிளம்பினதுக்கு அப்புறம், உன்கிட்ட தனியாப் பேசணும்,'' என்றாள், புவனா.
''அப்பாவுக்கு தெரியாம, என்கிட்ட என்னம்மா பேசப் போறே?''
''உஸ்... மெதுவாடி.''
வாணியின் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எழுந்தன.
'அம்மாவைத் தவிர, வேறு எவளுடனாவது தொடர்பு இருக்குமோ அப்பாவுக்கு... அதிகம் சிரிக்காம, எப்பப்பாரு, அம்மா உம்ன்னு சீரியசாவே இருக்கிறதுக்கு, அதுதான் காரணமாய் இருக்குமோ...' என்றெண்ணி, மலைத்துப் போனாள்.
''சரி, நீ போய் குளிச்சுட்டு வா... பேசறேன்,'' என்றாள்.

சிறிது நேரத்திற்கு பின், கூடத்தில் தொலைபேசி சிணுங்கியது. விஸ்வேசுவரன் யாருடனோ பேசியது, புவனாவுக்கு கேட்டது.
'தேங்க்யூ... ஆமா, 'ஸ்டேட் பர்ஸ்ட்
ஹவுஸ் சர்ஜனா' கொஞ்ச நாள் இருக்கணும்ன்னு நினைக்கிறேன். மெடிக்கல் பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. ஆமாமா, ஒரு டாக்டர் பையனை தான் தேடி பிடிக்கணும். உங்களுக்கு தெரிஞ்ச வரன் இருந்தா சொல்லுங்கோ... சரி, வேற ஒண்ணுமில்லியே...'
கூடத்துக்கு வந்த புவனா, சாப்பாட்டு மேசையில் தட்டை வைத்தாள். சிரித்த முகத்துடன் அமர்ந்து, வழக்கம் போல் அன்றைய செய்தித்தாளை படிக்கலானார், விஸ்வேசுவரன். இதற்குள் குளித்து வந்த வாணி, அவருக்கு அருகில் அமர்ந்தாள்.
பரிமாறிய பின், இருவரும் சாப்பிட துவங்கினர். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, ''சொல்லுடி, தேங்க்ஸ்... இன்னிக்கா, டிக்கெட், 'புக்' பண்ணிடு... கரெக்டா, 2:00 மணிக்கு அங்க இருப்பேன்.''
''என்னடி, சினிமாவா?''
''இல்லம்மா... வாணி மஹால்ல, நாடகம். ராணியோட போறேன்.''
இருவரும் சாப்பிட்டு முடித்த பின், கிளம்பினார், விஸ்வேசுவரன். அதன் பின், புவனா சாப்பிட்டாள். அதற்கென்றே காத்துக் கொண்டிருந்த வாணி, ''என்னம்மா சொல்லப்போறே... அப்பாவுக்குத் தெரியக் கூடாதா,'' என்றாள் ஆவலுடன்.
''நீ போய், 'ரெஸ்ட்' எடு... நாளைக்கு சொல்றேன்... அப்புறம், நாடகத்தை உன்னால ரசிக்க முடியாது. ஒண்ணும் விபரீதமான விஷயமில்லே, மனசை போட்டு உழப்பிக்காதே... ரொம்ப சாதாரண விஷயந்தான்,'' என்ற புவனா, புன்னகைத்தாள்.
மறுநாள் தன் காதலை சொல்ல ஆரம்பித்தாள்.

ஏழு ஆண்டு பயிற்சிக்கு பிறகு, புவனா, சென்னையின், ஒரு சபாவில், வீணை கச்சேரி செய்த போது தான், அவளுக்கு அறிமுகமானான், விஸ்வேசுவரன். கச்சேரி முடிந்ததும், அவளை நேரில் பாராட்டியதோடு, தானும் ஒரு வீணை கலைஞன் என்று அறிமுகம் செய்து கொண்டான்.
அப்போது அருகில் இருந்த புவனாவின் தந்தை, 'ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்களேன்...' என்று அழைக்க, அதுவே அவர்களின் தொடர்புக்கும், நட்புக்கும், பின்னர் மலர்ந்த காதலுக்கும் அடித்தளமாக அமைந்தது.
திருமணம் ஆவதற்கு முன்பே, இருவரும் இணைந்து, ஒரு கச்சேரி செய்தனர். அந்த கச்சேரி பெரிதும் பாராட்டப்பட்டது. எந்த சிக்கலும் இன்றி, இருவரும் மண வாழ்க்கையை துவங்கினர்.
சில நாட்களுக்கு பிறகு தான், சிக்கல்கள் துவங்கின.
எந்தப் பாட்டையும் வாசிப்பதற்கு முன், அதன் பல்லவியை பாடி காட்டுவாள், புவனா. பின்னர், அனுபல்லவி, சரணம் என்று அவள் பாடிய போதெல்லாம், 'இவள், வாய்ப்பாட்டே பாடலாமே...' என்று நினைக்காதோர் இல்லை.
விஸ்வேசுவரனுக்குக் குரல் வளம் கிடையாது. எனவே, அவன் வீணையை மட்டுமே வாசிப்பான். வீணை வாசிப்பிலும், புவனாவே சிறந்து விளங்க, கச்சேரிகளில் அவளுக்கே அதிக கை தட்டல்கள் கிடைத்தன.
ஒருமுறை, 'என்ன மிஸ்டர், விசு... உங்க சம்சாரம் உங்களை, 'பீட்' பண்றாங்களே...' என்று, ரசிகன் ஒருவன் அசட்டுத்தனமாய் விமர்சிக்க, அன்று வந்தது வினை.
புவனாவுக்கு, 'பக்'கென்றது. அவளுக்கு கைதட்டல் கிடைத்த போதெல்லாம் சிரிப்பற்றிருந்த அவன் முகத்திலிருந்த பொறாமையுணர்வை, ஏற்கனவே அவள் ஊகித்திருந்தாள்.
'மிஸ்டர்... அப்படியெல்லாம் இல்ல. அவர், எனக்காக விட்டுக்குடுத்து அடக்கி வாசிக்கிறார்...' என்று, கணவனை விட்டுக்கொடுக்காமல் பதில் அளித்தாள்.
அப்போதும், அவன் முகம் இறுகி இருந்தது.
வீடு திரும்பியதும், 'புவனா... இனி, நீ வீணை வாசிக்க வேண்டாம். எனக்கு அவமானமாயிருக்கு. 'அப்ளாசெல்லாம்' உனக்கே கிடைக்கிறது. நீயாவே புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன்.
'ஆனா, எப்பவுமே நீ என்னை மிஞ்சுற மாதிரி தான் வாசிக்கிறே, பாடவும் செய்யறே... அதென்ன தாலி கட்டின புருஷனோட, உனக்கு அவ்வளவு போட்டி மனப்பான்மை...' என்று, அவன் காட்டமாக வினவியதும், திடுக்கிட்டு தான் போனாள்.
'அய்யோ, உங்களை மிஞ்சணும்கிற நினைப்பெல்லாம் எனக்கு கிடையவே கிடையாது. அது இயல்பா எனக்கு அமைஞ்சிருக்கு. நான், உங்களை மிஞ்சுறதுக்கு முயற்சியெல்லாம் பண்ணினதே இல்லை...' என்றாள்.
'ஓ... உனக்கு அந்த திறமை இயல்பா அமைஞ்சிருக்கு. ஆனா, எனக்கு அப்படி அமையல. அதாவது, என்னை ஒரு மக்குன்றே, அதானே...' என்று, அவன் கண்கள் சிவப்பாகியது.
'அடக் கடவுளே... சத்தியமா அப்படி இல்லே...' என்றாள் கண்ணீருடன்.
'அப்படின்னா, நாளையிலேர்ந்து நீ வீணையை தொடக்கூடாது...' என்றான்.
அவள் தொடவில்லை. தான் இல்லாத நேரங்களில் அவள் வாசிக்கக் கூடாது என்பதற்காக, அதை, அதற்குரிய மரப்பெட்டியில் வைத்து பரணில் ஏற்றினான்.
அப்போது, அவள் வயிற்றில் இரண்டு மாத கருவாக இருந்தாள், வாணி. புவனாவின் மனம் சிதறிப் போயிருந்ததை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவள் ஏன், அவனுடன் சேர்ந்து வாசிப்பதில்லை என்று கேட்டவருக்கெல்லாம், கர்ப்பமாயிருக்கும் காரணத்தை சொல்லி சமாளித்தான்.
பிறகு குழந்தை வளர்ப்பில், அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்ததை காரணமாய் சொன்னான்.
'புவனாவின் அம்மா, குழந்தையை பார்த்துக் கொள்ளலாமே...' என்று, சில விடாக்கண்டர்கள் வினவியபோது, மாமனார்- - மாமியாருக்கு, வயதாகி விட்டதென்று சமாளித்தான்.
சொல்லி முடித்ததும், கண்களில் திமிறிய கண்ணீரை துடைத்தபடி திரும்பிக் கொண்டாள், புவனா.
''ஏம்மா, இத்தனை நாளும் எனக்கு நீ சொல்லல... உனக்கு வீணை வாசிக்க தெரியும்ன்னு கூட, நீ சொன்னதில்லையே,'' என்று, வாணி ஆத்திரமாய் கேட்டாள்.
''உன் அப்பாவுக்கும், உனக்கும் நடுவில நான் வரக்கூடாதுன்ற எண்ணந்தான். அவர் மேல உனக்கு வெறுப்பு வர்றதால எனக்கு என்ன லாபம். ஆனா, இப்ப அப்படி இல்லே. நீ, ஒரு டாக்டரை கல்யாணம் பண்ணிண்டா அவன் ரொம்பவும் நல்லவனாய் இருந்தாலொழிய, அவனை விட நீ திறமைசாலியாய் இருந்தா, அதை பொருட்படுத்த மாட்டான்.
''அப்படி இல்லேன்னா ரொம்ப கஷ்டம், வாணி. டாக்டர் வேண்டாம்மா. ஐ.ஏ.எஸ்., போலீஸ் ஆபீசரோ, காலேஜ் லெக்சரரோ உனக்குப் புருஷனா வர்றது தான், நல்லதும்மா.
''எம்.எஸ்., அம்மாவுக்கு, சதாசிவம் மாமாவும், டி.கே.பட்டம்மா மாமிக்கு, ஈசுவரன் மாமாவும் வாய்ச்சது மாதிரி, பொறாமைப்படாத நல்லவங்க இருக்காங்க தான். ஆனா, அது அபூர்வம். அதனால, யோசிச்சு ஒரு முடிவுக்கு வா,'' என்றாள், புவனா.
''ஆனா, வீட்டில் கூட நீ ஏம்மா வீணை வாசிக்கிறதே இல்லே... உன் வீணையை அப்பா வித்துட்டாரா,'' என்றாள் வாணி.
''இல்லே. அதை ஒரு மரப்பெட்டியில வெச்சு, பரண்ல ஏத்தி வெச்சுட்டாரும்மா. ஆனா ஒண்ணு, நீ, இதையெல்லாம் தெரிஞ்சதாவே காட்டிக்காம, உங்கப்பாகிட்ட வழக்கம் போலவே சகஜமாயிரு. உன்னோட வாழ்க்கையும் என்னோடது மாதிரி ஆயிடக்கூடாதேன்ற கவலையால தான், இதை உனக்கு சொன்னேன்.''
வாணியின் கண்கள் கலங்கின.
சில நாட்களுக்கு பின், ''என்னோட நண்பனுக்கு தெரிஞ்சவனோட பிள்ளை, 'சர்ஜனாய்' இருக்கானாம். அவனை நம் வாணிக்கு பார்க்கலாம்ன்னு,'' என்று, அவளது கல்யாண பேச்சை துவக்கினார், விஸ்வேசுவரன்.
''பார்க்கலாமே,'' என்ற புவனா, புன்சிரிப்புடன் மகளை ஏறிட்டாள்.
வெடுக்கென்று குறுக்கிட்ட வாணி, ''டாக்டரெல்லாம் வேண்டாம்பா. என்னோட, 'பிரெண்ட்' ஒருத்தியோட அம்மா, அப்பா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். அவளும் என்னாட்டமே ஒரே பொண்ணாம். அவளோட அப்பாவை விடவும், அம்மா அதிக திறமைசாலியாம்.
''அதனால, அப்பாவை விட முன் கூட்டியே அம்மாவுக்கு, 'புரமோஷன்' கிடைச்சுதாம். அதை அவளோட அப்பாவால தாங்கிக்க முடியல. 'டிவோர்ஸ்' வரைக்கும் போயாச்சு. ஆனா, அவளோட அம்மா குடும்பம் கலையக் கூடாதுன்றதுக்காக, 'புரமோஷன்' வேண்டாம்னுட்டாங்களாம்.
''அதுலேர்ந்தே அவங்களுக்கு மனசு சரியில்லாம போயி, 'டிப்ரெஷன்'ல கொண்டு போய் விட்டுடுத்தாம். இப்ப கொஞ்சம் பரவாயில்லையாம். ஆனா, டாக்டர் தொழிலையே விடும்படி ஆயிடுத்தாம். அந்த மாதிரி, 'ரிஸ்க்' எடுக்க நான் தயாராயில்லேப்பா...
''தவிர, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே... ஒரு போலீஸ் ஆபீசரையோ, கலெக்டரையோ பாருங்கப்பா... ஒத்த தொழில் கணவன், ஜென்மத்துக்கும் வேண்டாம்.''
வாணியின் சொற்கள் - அதிலும் அந்த கடைசி வாக்கியம் -அழுத்தந்திருத்தமாய் வெடித்து சிதறியதில் பாதிப்புற்றார், விஸ்வேசுவரன்.
எதையோ ஞாபகப்படுத்திக் கொண்டவராய், நிலைகுத்திய பார்வையுடன், தம்மை மறந்த நிலையில், தட்டில் இருந்த சாதத்தை திரும்பத் திரும்பப் பிசைந்து கொண்டிருந்தார். பின்னர், அவரது பார்வை பரணில் பதிந்தது.

ஜோதிர்லதா கிரிஜா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
07-ஆக-202005:19:39 IST Report Abuse
Girija இந்த கதை கீழடியில் கண்டெடுக்க பட்டதா? முடிலப்பா முடியல? இப்போ எல்லாம் இதுபோல அதிகாரம் பண்ணினால் லெப்ட் லெக்கால ஒரே கிக் தான், ஜாக்கிரதை. நேரா பரண் தான். பிறகு மெதுவாக இறங்கி வரவேண்டும்.
Rate this:
Cancel
02-ஆக-202023:42:02 IST Report Abuse
Suresh Kumar kevalam
Rate this:
Cancel
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
02-ஆக-202017:30:37 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI உண்மை தான். கணவன் மனைவி ஒரே துறையில் இருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும். அதிகம் சம்பாதிக்க தொடங்கினாலே வீட்டில் தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டு பிடித்து மனைவியை ஒன்றுமில்லாமல் செய்வதே கணவர்கள் வேலை. அறிவு, அழகு, வருமானம் உள்ள மனைவி விஜயலட்சுமி வேண்டும். ஆனால் மனைவிகளை யாராவது அதிகம் பாராட்டக்கூடாது. அவர்களை அடக்கி ஆள்வதும் குரலை உயர்த்தி பேசி அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்வதும் இவர்கள் வேலை. கதையில் மகள் சொன்ன வார்த்தைகளை அசைபோட்டதால் பரணைப்பார்த்தார். ஆனால் மனைவியின் ஆற்றல் வாய்ந்த கலை காணாமல் போனது
Rate this:
Manian - Chennai,இந்தியா
03-ஆக-202001:11:33 IST Report Abuse
Manianஅது சரி, தீர விசாரிக்க நேரமாகுமேன்னு அவசர அவசரமா பெண்ணை தள்ளிவிடும் பெற்றோர்களே,ரகசியம் என்ற போர்வையில் இதற்கு காரணம். தகுதி என்பது பொருளாதாரத்தை பொறுத்ததில்லை. தன் நம்பிக்கை இல்லாத சுயநலவாதிகளை ஏன் மணக்கிறோம்? மனோவியாதியே இருக்காது என்று ஏன் எண்ணுகிறோம்? திரு.சதாசிவம் ஐயா எம்.எஸ் சுப்புலட்சுமியை உற்சாகப்படுத்த வில்லையா? கையில் இருப்பது வைரம் என்று புரிந்து கொள்ளாதவர்கள் ஆணோ, பெண்ணோ, அதை காகித அழுத்தி(Paper Weight) யாகவே உபயோகிப்பார்கள் நமது விஞ்ஞானிகள், கலைஞர்கள் வீட்டில் அவர்கள் படைப்புக்கள் இன்றும் பாதுகாக்கப் படுகிறதா, இல்லை வெள்ளை அடித்து அவர்கள் இருந்த சரித்திர ஆதாரமே இல்லாமல் இருக்கிறதா? மூடர்களுக்கு, ஆணோ,பெண்ணோ , எதன் அருமையும் தெரியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X