''இன்று மூட்டு வலி அதிகரிக்க காரணம், உடல் உழைப்பு குறைந்ததுதான். மேற்கத்திய கலாசாரத்தை கைவிட்டு, தினமும் வெயிலில் சிறிது நேரம் நிற்பதே தீர்வு,'' என்கிறார் கோவை அரசு மருத்துவமனை முட நீக்கியல் விபத்து சிகிச்சை டாக்டர் வெற்றிவேல் செழியன்.
மூட்டு தேய்மானம் ஏற்பட காரணம் என்ன?
போதிய உடல் உழைப்பு இல்லாமல், மூட்டுக்களில் முறையான அசைவுகள் இல்லாமல், சொகுசாக வாழ்வதுதான், மூட்டு தேய்மானத்துக்கு காரணம். முன்பு உடல் உழைப்பு கடுமையாக இருந்தது. இன்றைக்கு இல்லை. என்றைக்கு இண்டியன் டாய்லெட் முறை, வெஸ்டர்ன் டைப்புக்கு மாறியதோ, அன்றைக்கே மூட்டு வலி பிரச்னை துவங்கி விட்டது. யாரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதில்லை. டைனிங் டேபிள், சோபா, சேர் என, எல்லாமே மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு மாறியதால், வந்த பிரச்னைதான் இது.
உடல் உழைப்பு இல்லாதது மட்டும் தான் காரணமா?
பெண்களுக்கு, 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் போது, எலும்பின் அடர்த்தி குறையும். இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லுாரி சார்பில், ஆராய்ச்சி செய்த போது, ஆண்களுக்கும் இதே வயதில் அடர்த்தி குறைபாடு வருவது தெரிய வந்தது. இதற்கு காரணம், உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாறி விட்டதுதான். விட்டமின் டி குறைபாடும் ஒரு காரணம்.
இப்பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?
விட்டமின் டி சத்து முழுமையாக, சூரிய ஒளியில் இருந்துதான் கிடைக்கிறது. வெளிநாட்டில் வெயில் குறைவு. அதனால் மாத்திரை சாப்பிடுகின்றனர். இங்கு வெயிலுக்கு பஞ்சமே இல்லை. வெயில் தோலில் பட்டால், உடலுக்கு தேவையான விட்டமின் டி கிடைத்து விடும்.
முதியவர்கள் கீழே விழுவதை, தவிர்க்க வேண்டுமென வலியுறுத்துவது ஏன்?
குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், பெரும்பாலும் மாவு கட்டுப்போட்டு சரி செய்து விடலாம். முதியவர்கள் வழுக்கி விழுந்தால், பெரும்பாலும் மணிக்கட்டு அல்லது இடுப்பு எலும்பு உடையும். மணிக்கட்டை மாவுக்கட்டு போட்டு சரி செய்து விடலாம்.இடுப்பில் முறிவு என்றால் பெரும்பாலும், அறுவை சிகிச்சைதான் தீர்வு. இதை தவிர்க்க, முதியவர்கள் வசிக்கும் வீடுகளில், பாத்ரூம் சுவரில் பிடித்து நடக்க, பைப் பிட்டிங் வசதி செய்வது அவசியம்.