சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (15) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
சித்ராலயா கோபுவின், மலரும் நினைவுகள்! (15)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஆக
2020
00:00

மகனின் திருமண பத்திரிகை கொடுக்கப் போன இடத்தில் கிடைத்த சினிமா வாய்ப்பு தான், பாட்டி சொல்லைத் தட்டாதே படம்.
பத்திரிகையை வாங்கிக் கொண்ட, ஏவி.எம்.சரவணன், 'நாங்க ஒரு படம் பண்றோம்... கதை, வசனம் எழுதி தரமுடியுமா...' என்று, கேட்டார்.
'அதுதானே என் தொழில்...' என்றேன்.
'இல்லை... திருமணத்தில், 'பிசி'யாக இருக்கிறீர்களே...' என்றார்
'எனக்கு இதுவும் முக்கியம். தவிர, நான் மாப்பிள்ளை வீடு பாருங்க... கையை வீசிக்கிட்டு இருக்கலாம்...' என்றேன்.

'அப்ப ஒண்ணு பண்ணுங்க... இன்னைக்கு சாயந்திரமே, கையை வீசிக்கிட்டு இங்க வந்திடுங்க படத்தை உருவாக்கிடலாம்...' என்றார்.
'சரி...' என்று உட்கார்ந்து உருவாக்கியது தான், பாட்டி சொல்லைத் தட்டாதே. படம், நன்றாக போனது.
அதன் பின், தங்க மாமா, வெள்ளை மனசு, உலகம் பிறந்தது எனக்காக, டில்லி பாபு என்று, சில படங்கள். பிறகு, 'டிவி' சேனல் பக்கம் இழுக்கப்பட்டு, அதில் சில பல தொடர்கள். வாஷிங்டனில் திருமணம் தொடருக்காக, அமெரிக்க பயணம் என்று, ஒரு சுற்று போய் திரும்பிய பின், ஒரு கட்டத்தில், போதும் என்ற மனநிலை உருவானது.
சினிமாவை விட்டுப் போய், தொழில் துவங்கிய, ஸ்ரீதர், 'மீண்டும் ஒரு படம் பண்ணுவோம்...' என்றார்.
படத்திற்கு பெயர், தந்து விட்டேன் என்னை. அது தான் அவரது கடைசி படமும் கூட. சினிமாவிற்காகவே அவர் தன்னை தந்து விட்டார். படம் முடிந்த பிறகு, பல நாட்கள் உடல் நலமின்றி இருந்தவர், திடீரென ஒரு நாள் இறந்து விட்டார்.
நீண்ட கால உயிர் நண்பனை இழந்த வருத்தம், என்னை முடக்கிப் போட்டது. ஸ்ரீதர் மறைந்து பல ஆண்டுகள் ஆன போதும், இன்னமும் கூட, நான் முழுதாக அதில் இருந்து மீளவில்லை.
மனதை லேசாக்கிக் கொள்ள, காலாற, 'பீச்' பக்கம், 'வாக்கிங்' போனால் கூட, 'என்ன கோபு சார்... நீங்க நடக்கலாமா...' என்று கேட்டு, வண்டியில், வீட்டில் அழைத்து வந்து விட்டு போய் விடுகின்றனர்.
சினிமா புகழ் தரும் அவஸ்தை அது.
என் மனைவி கமலா இறக்கும் தருவாயில் ரொம்ப வருத்தப்பட்டேன்.
'ரொம்ப வருத்தப்படாதீங்க... அடுத்த அமாவாசைக்கு, நீங்களும் என்னை தேடிட்டு வந்துருவீங்க...' என்றார்.
அவருக்கு ஜோசியமும் தெரியும் என்பதால், அடுத்த அமாவாசை வந்த போது, அனைவரிடமும் சொல்லி காத்திருந்தேன். ஆனால், காலமும், காலனும் இன்னும் கொஞ்ச நாள், கோபு இருந்து விட்டுப் போகட்டும் என்று நினைத்து, விட்டு விட்டனர் போலும். அதற்கு பிறகு, பல அமாவாசைகள் வந்து விட்டன.
என்னைப் பொறுத்தவரை, நான் எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்று எண்ணி பார்ப்பது இல்லை. பெரிதாக பணம் சேர்க்கவும் இல்லை. நல்ல பெயரை சம்பாதித்தேன். என் பிள்ளைகள், ஒரு குறையுமில்லாமல் என்னை பார்த்துக் கொள்கின்றனர்.
என்னுடைய, 89வது வயதில், கடவுள் புண்ணியத்தில், நல்ல மன அமைதியுடன், பேரன் - பேத்திகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
என் குடும்பத்தில் சிலர், இப்போது எழுத்தாளராக வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக, இரண்டாவது மகன் நரசிம்மன், 'காலச்சக்கரம்' நரசிம்மன் என்ற பெயரில் பிரமாதமாக சரித்திர நாவல் எழுதி வருகிறான். மூன்றாவது பையன், ஸ்ரீராம், காதலிக்க நேரமுண்டு, தந்திரமுகி என்பன போன்ற நகைச்சுவை நாடகம் எழுதி, பெயர் பெற்றுள்ளான்.
மூத்த பையனும், கடைசி பையனும், எழுத்துலகம் பிழைத்துப் போகட்டும் என்று மன்னித்து விட்டு விட்டனர் போலும்.
நான் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனாக என்றும் சித்ராலயா கோபுவாக வாழ்ந்தால் அதுவே போதும்...
விளையாட்டுப் போல ஆரம்பித்த என் கதையை படித்து, 'தினமலர் - வாரமலர்' இதழின் லட்சக்கணக்கான வாசகர்கள், கடந்த வாரங்களில் தந்த ஆதரவும், காட்டிய அன்பும் அளவிட முடியாதது; எந்த காலத்திலும் என்னால் ஈடு செய்ய முடியாது...
வாசகர்களின் பாசம் எனக்கு நல்ல உடல் நலத்தையும், பலத்தையும், ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. உங்கள் அன்பும், கடவுளின் ஆசீர்வாதமும் இருந்தால், விட்டுப்போன விஷயங்களுடன், மீண்டும் ஒரு முறை சந்திப்போம், சந்தோஷம்!

எல்லாருக்கும் நல்லவர், கோபு!
சித்ராலயா கோபு என்றால், எல்லாருக்கும் நகைச்சுவை எழுத்தாளராக தான் தெரியும். ஆனால், அதையும் தாண்டி, மென்மையான நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். கொஞ்சம் கூட, அரசியல் தன்னை அண்டிவிடாமல் பார்த்துக் கொண்டவர்.
இரண்டு நாளில் கதை வேண்டும், இரண்டு மணி நேரத்தில் வசனம் வேண்டும் என்றாலும், சுவைபட எழுதித்தரும் வல்லமை கொண்டவர். இப்படி சினிமா, நாடகம், 'டிவி' என்று, எல்லா ஊடகங்களிலும் வலம் வந்தாலும், அதை காசாக்காமல், இன்று வரை, எளிமையே தன் வலிமை என, வாழ்பவர்.
'கலைவாணர், என்.எஸ்.கே.,விற்கு பிறகு, யாருடைய மனதையும் காயப்படுத்தாத, நாகரிகமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர், கோபு ஒருவரே...' என்று, பிரபல பத்திரிகையால் புகழப்பட்டவர்.
சினிமா செழித்து வளர்ந்த காலத்தில், அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் இருந்து அழகு சேர்த்தவர். பழைய படங்களின் நினைவுகளை பொக்கிஷமாக சுமந்து இருக்கும் நடமாடும் கலைக்களஞ்சியம், இவர்.
நகைச்சுவை உணர்வுடன், அனுபவங்களை சுவாரஸ்யமாக பேசத் தெரிந்த, கோபுவின் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே, நமக்கு பெருமை தான். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ, 'தினமலர் - வாரமலர்' வாசகர்கள் சார்பாக, நெஞ்சார வாழ்த்துகிறோம்!

முற்றும்
எல். முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X