* சா. சொக்கலிங்க ஆதித்தன், நெல்லை: ஜெ., வீடு அரசுடைமை ஆனதை எதிர்த்து, தீபா மேல் முறையீடு செய்யப் போகிறாராமே...
ஜெ., உயிருடன் இருந்த வரை, இவர்களை தன் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ளவில்லை. சொத்தின் மீது ஆசை; அவ்வளவு தான். இவரது மேல் முறையீடு தான் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதே!
ஆர். நவநீலராய், சென்னை: என் சொந்த கிராமத்தில், ஏதாவது கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். தங்கள் கருத்து என்ன?
இந்த எண்ணம் வந்ததற்காகவே உங்களைப் பாராட்டுகிறேன். சொந்தக் காலில் நிற்போர் தான், வாழ்வின் உயர் நிலையை பணத்தால் அடைகின்றனர். சீக்கிரம் சென்னையை விட்டு காலி செய்யுங்கள்!
யமுனா பார்வதி, பொள்ளாச்சி: உலகில் எந்தெந்த நாடுகளில், பத்திரிகைத் துறை மிகச் சிறப்பாக இருக்கிறது?
ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் எல்லாம், பத்திரிகைத் துறை சிறப்பாக செயல்படுகிறது!
* வி. வாசுதேவன், கோவை: நடிகர் கார்த்திக், கட்சி ஒன்று ஆரம்பித்தாரே... அது இருக்கா?
'அந்துமணி' என, அஞ்சல் அட்டையிலோ, மற்ற கடித உறையிலோ எழுதினாலே, எனக்கு வந்து விடும். 'ரிப்ளை கார்டுடன்' கார்த்திக் - நடிகர் என்று முகவரி எழுதினால், அவரிடம் சேர்ந்து விடும்! இந்தக் கேள்வியை அவரிடமே கேட்கலாமே!
* இ. கஸ்துாரி, சென்னை: நேபாளம் மனம் மாறியது ஏன்?
இதுவரை ஒழுங்காகத் தான் ஆட்சி நடைபெற்று வந்தது; இந்தியாவுடன் நல்லுணர்வு பேணப்பட்டது! இப்போது, கம்யூ., ஆட்சி நடைபெறுகிறது; சீனாவிலும் அதே கட்சி ஆட்சி தானே! மனதை மாற்றி விட்டது சீனா!
கி. சவுமியா, வந்தவாசி: அனைத்தையும் தனியார் மயமாக்கினால், அரசு என்ற ஒன்று தேவைப்படாதே!
அரசுக்குத் தேவைப்படுவது ராணுவம், பொதுப்பணி, தேச நிர்வாகம், நிதி நிர்வாகம் மட்டும் போதுமே!