தேவகியின் மனம், துள்ளிக் கொண்டிருந்தது.
எவ்வளவு பெரிய கனவு, நனவாகி இருக்கிறது, இது நடக்குமா, உண்மையில் இதற்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதா என்றெல்லாம் எவ்வளவு கவலைப்பட்டாள். ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு கவலையா என்ன...
ஆதிகேசவன், என்று சாலை விபத்தில் போய்ச் சேர்ந்தாரோ, அன்று உண்டான மனக்கவலை. கறிவேப்பிலைக் கொழுந்து போல மடியில் கிடக்கிற முத்துக்குமாரை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்ற வேதனை.
ஆயிற்று. ஒரு விடிவெள்ளி தெரிந்து விட்டது. வெயில் காலத்து அந்திவேளை முடிந்ததுமே, வானில் பளபளக்குமே நீல நட்சத்திரம், அதைப்போல ஒன்று, அவள் வாழ்க்கையிலும் தோன்றுகிற வேளை வந்துவிட்டது.
தேறி விட்டான், முத்து. அதிலும், அண்ணா பல்கலைக் கழகத்தின் முதல் மாணவனாக! அனிமேஷன் இன்ஜினியர், டிசைன் இன்ஜினியர் என்கிறான். அவளுக்கு இதற்கெல்லாம் அர்த்தம் தெரியவில்லை.
அவள் மகன், தங்கப்பதக்கம் வாங்குகிற முதல் மாணவன்; வெள்ளித்தட்டில் வேலைவாய்ப்பு வைத்து நீட்டும், சர்வதேச கம்பெனிகள்; நினைத்தே பார்க்க முடியாத சம்பளம் தருகிறோம் என்று, வரிசை கட்டி நிற்கும் நிறுவனங்கள்.
வன நீலித்தாயே... இது போதுமடி அம்மா... பட்ட பாட்டிற்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது, வேறென்ன வேண்டும்?
''என்னம்மா, ஒரே ஏலக்காய் வாசனையா இருக்கு... கேசரி பண்ணுறியா, வாவ்... சூப்பர்,'' என்று, போனும் சிரிப்புமாக வந்து, அவள் கன்னத்தைத் தட்டி விட்டு போனான், முத்துக்குமார்.
நெய்யை ஊற்றினாள்; ஏகப்பட்ட முந்திரி, திராட்சைகளை கொட்டினாள். வாசம் வீட்டைச் சுற்றிக் கொண்டது.
போன் அடித்தது; ஓடி எடுத்தாள்.
''தேவகி பேசுறேன்...யாரு?''
''நாந்தான் அத்தை, லயா பேசுறேன்... எப்படி இருக்கீங்க,'' என்று, தேன் கொஞ்சியது.
''லயாவா, அட என் தங்கக் குட்டி... நீயா, எப்படிம்மா இருக்கே,'' என்று படபடத்தாள்.
''நல்லா இருக்கேன் அத்தை... ரெண்டு நாள், 'ஸ்டெடி டூர்' சென்னைக்கு வரேன். உங்களுக்கு ரெண்டு நாள், சமையல் அறையிலிருந்து பரோல்... ஓகேயா,'' என்று, வளையோசை போல சிரித்தாள், லயா.
மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது, தேவகிக்கு.
''நெஜமாவாடி சொல்றே தங்கம், காத்துகிட்டிருக்கேண்டி ராஜாத்தி... நாலு வருஷம் இருக்குமேடி உன்னைப் பார்த்து... அபி திருமணத்துக்குக் கூட, உன் அப்பனும், ஆத்தாளும்தானே வந்து போனாங்க... உனக்கு முக்கியமான பரீட்சைன்னு கூட்டிகிட்டு வரலியே.''
''ஆமா அத்தை... நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்... சந்திக்கலாம்... முத்து எப்படி இருக்கான்?''
''அவந்தான் இப்போ, 'ஹீரோ!' முதல் ரேங்க், தங்கப் பதக்கம்ன்னு இருக்கான்... லட்ச ரூபா சம்பளத்துல வேலைங்க காத்துகிட்டிருக்கு... என் மகன் ஜெயிச்சுட்டாண்டி பட்டுக்குட்டி... என் கனவெல்லாம் பலிக்குதுடி.''
''சரி அத்தை... நேரில் சந்திக்கலாம்,'' என்று சிரித்தாள், லயா.
''அம்மா... வெளில போயிட்டு வரேன்... நீ சாப்பிட்டு துாங்கு,'' என்று, வேகமாக கிளம்பினான், முத்துக்குமார்.
''சமையல் முடிச்சுட்டேன், சாப்பிட்டு போகலாமேப்பா.''
''இல்லம்மா... இது, விசா விவகாரம்... 'எம்பசி' வரை போகணும்... வர லேட்டாகும்மா.''
''விசாவா, யாருக்கு, எதுக்கு?''
''எனக்குதாம்மா... யுகே விசா... ஒரு கோர்ஸ் பண்ணணும்மா... லண்டன்ல, 'அனிமேஷன்ல கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்'ன்னு, ஒரு யுனிவர்சிட்டி இருக்குதும்மா... அதை முடிச்சுட்டா போதும். வட்டி இல்லாமல் கடன் கிடைக்கும். முதல்ல சின்னதா ஒரு அனிமேஷன் ஸ்டூடியோ ஆரம்பிக்க வேண்டியது தான்... வரட்டுமா?''
''என்னது... என்னப்பா சொல்ற, ஆரம்பிக்கணுமா... புரியலயே,'' என்றாள் படபடப்பாக.
''ஆமாம்மா... எல்லாம் ஆரம்ப கட்டம்மா... ஒரு தெளிவான கட்டம் வரும்போது, உனக்கு சொல்றேன். மொத்தத்துல சுய தொழில்... சரி, நேரமாச்சும்மா... நீ சாப்பிடு.''
அவன் மலர்ச்சியுடன் கிளம்பிப் போக, அவள், தொப்பென்று காற்று இறங்கிய பலுானைப் போல உட்கார்ந்தாள்.
'என்ன சொல்கிறான், தொழிலா... ஏன் அப்படி தொழில் செய்ய வேண்டும். பட்டதெல்லாம் போதாதா... படிப்பு, வேலை, சம்பளம், பதவி உயர்வு, திருமணம், குழந்தை என்று, அழகான வட்டத்திற்குள் அவன் அமைதியாக வாழ வேண்டும் என்று தானே ஆசைப்பட்டாள்.
'நிலையான வேலை இல்லாததால்தானே, ஆதிகேசவனும், அவளும் அவ்வளவு கஷ்டப்பட்டனர். இன்று இருக்குமோ இருக்காதோ, வெயில் அடிக்குமோ அடிக்காதோ என்று, சதா கவலைப்பட்ட பெயின்ட்டராக அவனும், இன்றாவது அரிசி, புளி, மிளகாய்க்கு ஒரு வழி கிடைக்குமா என்று அவளும், பட்ட பாடுகளை மறக்க முடியுமா...
'முதல் தேதி பிறந்தால், டாணென்று கையில் சம்பளம் கொடுக்கிற வேலைக்காகத்தானே, முத்துவை அரும்பாடு பட்டு வளர்த்தாள். அவனும், சரி சரி என்றுதானே கேட்டுக் கொண்டான். இப்போது ஏன் தலைகீழாகப் பேசுகிறான். சொந்தத் தொழில் செய்தால், அது சர்க்கஸ் அல்லவா... நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கிற வாழ்வல்லவா... அய்யோ, என்ன செய்வது...' என புலம்பினாள்.
லயா வருவதற்கு முன், அவளுடைய ஜவ்வாது வாசனை, அறைக்குள் வந்து மனோகரமான நறுமணத்தை நிறைத்தது.
முகமலர்ச்சியுடன் எழுந்து அவளை வரவேற்றான், முத்துக்குமார்.
''ஹாய், லயா... எப்படி இருக்கே,'' என்று புன்னகைத்தான்.
''தேங்க் யூ, முத்து... அத்தை சொன்னாங்க, தங்கப் பதக்கம், முதல் ரேங்க்னெல்லாம்... பாராட்டுகள்... ரொம்ப பெருமையா இருக்கு... கங்கிராட்ஸ்,'' என்று, அவன் கையை மென்மையாக பற்றி குலுக்கி விட்டு உட்கார்ந்தாள்.
''தேங்க்யூ, லயா... உன் படிப்பும் முடியுது இல்லையா, என்ன செய்யப் போறே?''
''இப்போதைக்கு ஒரு ஆர்கானிக் தோட்டத்துல, 'டிரெயினிங்' போறேன்... பிறகு, பார்க்கலாம். நீ எந்த கார்ப்பரேட்ல சேரப் போகிறாய், எந்த நாட்டுக்கு பறக்கப் போகிறாய்?''
''இல்ல, லயா... நான் சுயதொழில் துவங்கலாம்ன்னு இருக்கேன். 'அனிமேஷன் ஸ்டூடியோ' ஒண்ணு ஆரம்பிக்கணும்ன்னு ஐடியா... அதுக்கு முன், லண்டன்ல, மூணு மாச கோர்ஸ் முடிக்கணும். வேலைகள் வேகமா போய்கிட்டிருக்கு.''
''என்ன... சுயதொழிலா... என்ன சொல்றே, முத்து... உனக்கு தான் அருமையா, 'ப்ளேஸ்மென்ட்' வருமே... நீ கேட்கிற சம்பளத்தை கொடுத்து வேலையில வெச்சுக்க, வரிசையில காத்துகிட்டிருப்பாங்களே.''
''உண்மை தான், லயா... ஆனால், அந்த வாழ்க்கை என்னை ஈர்க்கவில்லை. எனக்கு கொஞ்சம் சாகசம், ஈகை, மனநிறைவு இப்படி வேண்டியிருக்கு,'' என்றான், புன்னகையுடன்.
''சரியாக சொல், முத்து.''
''சொல்கிறேன், லயா... நீ, அம்மா எல்லாரும் சொல்வது உண்மை தான். பாடுபட்ட குடும்பம், இனியாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது நிஜம் தான். ஆனால், என் மனநிலை மாறிக்கொண்டே வந்தது. நான், என் வட்டம் என்கிற எண்ணங்கள் குறைந்து விட்டன...
''குறைந்தது, 10 குடும்பங்களுக்காவது பயனுள்ளதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், லயா... என் பெரிய ஊதியம், பதவி என்று வைத்து, 'மேக்ஸிமம்' என்ன செய்யலாம், அழகான பெண்ணை மணக்கலாம், பி.எம்.டபிள்யூ., கார், பண்ணை வீடு, வெளிநாட்டு பயணங்கள், அழகான குழந்தைகள், தங்க, வைர நகைகள்... இவ்வளவுதானே?
''இதற்கு பிறகு, முதுமை, தள்ளாமை என்று போய்ச் சேர வேண்டியது தான்... ஆனால், இதைவிட பெரிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது, நாலு பேரை வாழ வைக்கும் வாழ்க்கை. அது, சுய தொழிலில் தான் சாத்தியம்.
''வறுமை, அறிவு, லட்சியம் என்று இருக்கும் எத்தனையோ இளையவர்களை எனக்கு தெரியும். அவர்களுக்கு வேலை வாய்ப்பு, வாழ்க்கை என்று என்னால் தர முடியும். அந்த கணக்கு பல்கி பெருகும், நான் நேர்மையாக தொழில் செய்யும்போது... என்ன லயா, அப்படிப் பார்க்கிறே?''
''தப்பாக நினைக்காதே, முத்து... சுயதொழில் எல்லாருக்குமா வெற்றியாகி விடுகிறது. விழுந்தால் எழ முடியுமா?''
''அண்மைக்காலத்தில், நிறைய தற்கொலைகளை நீ அறிந்திருப்பாய், லயா... குடகில் காபி தோட்ட முதலாளி; இசைக்குழு வைத்திருந்த செல்வந்தர்; சாப்ட்வேர் பொறியாளர்கள்; கார் கடன் கட்ட முடியாத அமெரிக்கர்கள் என்று, எவ்வளவு மரணங்கள்...
''குமாஸ்தாவோ, சுயதொழிலாளரோ, அவர் எப்படி தன்னை நம்பிக்கையுடன் வைத்திருக்கிறார் என்பது தான் முக்கியம், லயா... விழுவது தான் இயல்பு, நடக்க முயலும் குழந்தை போல, சைக்கிள் கற்கும் சிறுமியைப் போல... ஆனால், அங்கேயே கிடக்காமல் எழுவதும் இயல்பு தான்...
''வாழ்வென்பது சவால்களும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது, என் கனவு... பத்து முதல் ஐந்து வரை என்கிற அலுவலக வாழ்வு, என் பேரார்வத்திற்கு இரை போடாது. 'த்ரில்'லும், சாகசமும், கனவுகளும் கொண்ட ஒரு அற்புதமான வாழ்வையே வாழ விரும்புகிறேன், லயா... சிறிய அளவிலாவது புரிய வைத்தேனா,'' என்று, பற்கள் தெரிய சிரித்தான்.
''ஒரே ஒரு கேள்வி,'' என, அவளும் சிரித்தாள்.
''கேட்கலாமே...''
''பாதுகாப்பான வாழ்வு... அதுவும் முக்கியம்தானே?''
''ஆமாம், மிக முக்கியம் தான்... அந்த பாதுகாப்பை அன்பு மட்டுமே நமக்குத் தர முடியும். பொருளாதாரம் அதற்கு சிறிது உதவலாம்; அவ்வளவு தான். அன்பைத்தவிர வேறு எதுவும் உண்மையான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்க முடியாது, லயா... நீ என்ன சொல்கிறாய்?''
''அற்புதம், முத்து... இந்த தெளிவு என்னை மிகவும் நெகிழ்த்துகிறது. உன்னால் எந்த சூழலிலும் சமநிலை இழக்காமல் இருக்க முடியும். இதுவே பாதி வெற்றி தான். அத்தை பற்றி கவலை வேண்டாம். நான் சொல்லி புரிய வைக்கிறேன்,'' என்று, அழகான புன்னகையுடன் அவள் சொன்னபோது, அவனுக்குள் இன்னும் பலம் கூடியதை போலிருந்தது.
சம்யுக்தா