'ஐபோன்' வாங்கிக் கொடுத்த, டாப்சி!
பெண்ணுரிமை, பெண் கல்வி குறித்து, தன் கருத்துக்களை பதிவு செய்து வரும், டாப்சி, சமீபத்தில், 'கர்நாடகத்தில், 'நீட்' தேர்வெழுத தயாரான, ஒரு மாணவி, 'ஸ்மார்ட்போன்' இல்லாமல், 'ஆன்லைன்' வகுப்பில் படிக்க முடியவில்லை...' என்று செய்திகள் வெளியானதை அடுத்து, உடனடியாக, அந்த மாணவிக்கு, 'ஐபோன்' வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், 'பெண்கள் அதிகம் படிக்க வேண்டும். அதிலும், நமக்கு டாக்டர்கள் அவசியம். அதற்காக, என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி...' என்றும் தெரிவித்துள்ளார், டாப்சி.
— சினிமா பொன்னையா
கவர்ச்சி பாடகியாகும், ஆண்ட்ரியா!
நடிகை ஸ்ருதிஹாசன், அடிக்கடி லண்டன் சென்று, இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருவதை தொடர்ந்து, தற்போது, ஆண்ட்ரியாவும், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தத் துவங்கியிருக்கிறார். 'சினிமாவில் நடித்து, எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாதபோதும், இசையில், உலக அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேடையில் அசையாமல் நின்று பாடும் பாடகியரை போல் அல்லாமல், கவர்ச்சி உடைதரித்து அதிரடி ஆட்டம் போடும் பாடகியாக வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார், ஆண்ட்ரியா. பட்டறை வாய்த்தால், பணி வாய்க்கும்!
—எலீசா
கலாய்க்கும், யோகிபாபு!
தற்போது, அதிக படங்களில், காமெடியனாக நடித்து வரும், யோகிபாபு, 'ஹீரோ'களுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில், அவர்களை மானாவாரியாக கலாய்க்கிறார். அதற்கு சில, 'ஹீரோ'கள், 'இப்படி கலாய்த்தால், எங்கள், 'இமேஜ்' என்ன ஆவது...' என்று, அவரை கேட்கின்றனர். அதற்கு, யோகிபாபுவோ, 'தர்பார் படத்தில், ரஜினி சாரையே கலாய்ச்சேன். அவரே, அதை கண்டுக்கல... நீங்க என்ன பாஸ், 'இமேஜ்' பற்றி பேசுறீங்க...' என்று ஒரு, 'பிட்'டை போட்டு, அவர்களை மேற்கொண்டு பேச விடாமல் செய்து விட்டார்.
—சி.பொ.,
'நோ' சொன்ன, ரோஜா!
தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகையான, ரோஜா, தற்போது, ஆந்திர அரசியல்வாதியாகி விட்டார். இந்த நேரத்தில், ஒரு படத்தில், வில்லியாக, 'ரீ - என்ட்ரி' கொடுக்கும், ரோஜா, தன், 16 வயது மகள், அன்ஷு மாலிகாவின் புகைப்படத்தை, சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், சிறு வயது ரோஜாவை போலவே, அவரது மகளும் அசத்தலாக இருந்ததைப் பார்த்த சில இயக்குனர்கள், அவரையும் சினிமாவில் அறிமுகம் செய்ய, வட்டம் போட்டனர். அதைப்பார்த்த ரோஜா, 'இப்போது, படிக்கிற வயசு. இந்த நேரத்தில், சினிமா ஆசை காட்டி, அவள் மனசை கெடுத்து விடாதீர்கள்...' என்று சொல்லி, கதவை இழுத்து மூடி விட்டார்.
—எலீசா
ரசிகர்களை உற்சாகப்படுத்தும், தனுஷ்!
ரசிகர் மன்றத்தை, பெரிய அளவில் வடிவமைத்து வரும், தனுஷ், தன் படங்களுக்கான, 'பிரமோஷன்' மட்டுமின்றி, சமூக சேவைகளிலும் அவர்களை ஈடுபடுமாறு கூறி வருகிறார். அந்த வகையில், ரத்த தான முகாம், உடல் உறுப்பு தானம் என்று, சில பெரிய வேலைகளை ரசிகர்கள் செய்யும்போது, அவர்கள் ஒவ்வொருவருக்கும், போன் செய்து, பாராட்டி உற்சாகப்படுத்துகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தன்னை, தளபதி, தல நடிகர்கள் கழட்டி விட்டுள்ள நிலையில், இரண்டாம் தட்டு நடிகர்களின் ஆஸ்தான நாயகியாகும் முயற்சியில் இறங்கியுள்ளார், ஜில்லா பட நடிகை. இதற்கு முன்பு, அதுபோன்ற நடிகர்களை தீண்டத்தகாதவர்களை போன்று துரத்தியடித்த நடிகை, இப்போது, அவர்களிடம் வலிய சென்று, பேசி, வளைத்து போட்டு வருகிறார். இப்படி இறங்கியடிப்பதன் காரணத்தை தெரிந்து கொண்ட இரண்டாம் தட்டு நடிகர்களும், அம்மணிக்கு, 'பார்ட்டி' கொடுக்கிறோம் என்று அழைப்பு விடுத்து, அவரை, குத்துப்பாட்டு நடிகையாக, 'குஷி'யாட்டம் போட வைத்து, தங்களுக்கு, அவர் மீதுள்ள வேட்கையை தீர்த்துக் கொள்கின்றனர்.
'டேய் மச்சி... என் தங்கை காஜலுக்கு, சாயந்திரம் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதுடா... ஸ்வீட் வாங்க மறந்துட்டோம். எனக்கு நிறைய வேலை இருக்கிறதால, நீ போய், அகர்வால் ஸ்வீட் கடையில, 2 கிலோ ஜாங்கிரியும், லட்டும் வாங்கிட்டு வந்துடறியா...' என்று, வேண்டுகோள் விடுத்தார், காஜலின் அண்ணன்.
சினி துளிகள்!
* 'இந்தியன் - 2 படத்தில், குறைவான காட்சிகளில் நடித்தபோதும், கமலுடன் நடிப்பது பெருமை...' என்கிறார், காஜல் அகர்வால்.
அவ்ளோதான்!