சென்னை, இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்கள் இணைந்தது தான். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், பல கிராமங்கள் இணைந்து, பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. அப்படி உருவானதன் பின்னணியை தெரிந்து கொள்வது, சுவாரஸ்யமானது.
1. சக்தி ஸ்தலங்கள், 108ல், 51வது ஊர். ஆகையால், 51ம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர், அம்பத்துார் என, மாறியது.
2. 'ஆர்மர்ட் வெகிள் அண்டு டிபாட் ஆப் இந்தியா' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே, ஆவடி.
3. குரோம் லெதர் பேக்டரி, அதிக அளவில் இருந்ததால், இப்பகுதி, குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.
4. கடந்த, 17, 18ம் நுாற்றாண்டுகளில், நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது, கோடம்பாக்கம். அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக விளங்கியதால், 'கார்டன் ஆப் ஹார்சஸ்' எனும் பொருள் படும், கோடா பாக் என்று, உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில், அதுவே, கோடம்பாக்கமாக மாறியது.
5. தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால், தென்னம்பேட்டை என பெயர் வைத்தனர். பிறகு அது, தேனாம்பேட்டையாக மாறிப்போனது.
6. சையிடு ஷா பேட்டை தான், சைதாப்பேட்டை என அழைக்கப்படுகிறது.
7. முற்காலத்தில், வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது. தற்போதைய வேளச்சேரி.
8. உருது வார்த்தையான, 'சே பாக்' - ஆறு தோட்டங்கள் என்பதிலிருந்து உருவானது தான், சேப்பாக்கம்.
9. சவுந்தர பாண்டியன் பஜார் என்பதன் சுருக்கமே, பாண்டி பஜார்.
10. சிவபெருமானுக்கு உகந்த வில்வ மரங்கள் அதிகம் இருந்ததால், மகா வில்வம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு, மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.
11. பல்லவர்கள் ஆட்சி செய்ததால், பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான், பல்லாவரம்.
12. சென்னை மாகாண முதல்வராக இருந்த, பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம், பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.
13. நீதி கட்சி தலைவர், சர்.பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி, தியாகராய நகர் - தி.நகர் என, அழைக்கப்படுகிறது.
14. இப்பகுதியில், புரசை மரங்கள் மிகுதியாக இருந்ததால், புரசைவாக்கம் ஆனது.
15. அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துச் சென்று, காஞ்சி வரதராஜ பெருமாளை வழிபட்டு வந்தார், திருக்கச்சி நம்பி ஆழ்வார். அதனால், இவ்விடம், சமஸ்கிருதத்தில், புஷ்பகவல்லி என்றும், தமிழில், விருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில், இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.
16. பதினேழாம் நுாற்றாண்டில், இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லிம் துறவி, குணங்குடி மஸ்தான் சாகிப். இவரது சொந்த ஊர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள், அவரை, தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியாதான் தற்போதைய தண்டையார்பேட்டை.
17. முன்பு ஆடு, மாடுகள் மேயும் திறந்த வெளியாக இருந்த பகுதியே, மந்தைவெளி என்று அழைக்கப்படுகிறது.
18. மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே, மயிலாப்பூர் என மாறிப் போனது.
19. பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடந்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.
20. சில நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி முழுவதும், மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே, பெரம்பூர் எனப்படுகிறது.
21. திரிசூல நாதர் கோவில் இருப்பதால், இந்த ஏரியா, திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.
22. பார்த்தசாரதி கோவில் எதிர்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக, இப்பகுதி, திரு அல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாக மாற்றம் கண்டுள்ளது.
23. தாமஸ் பாரி என்பவர், இப்பகுதியில் வணிகம் செய்து வந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே, இப்பகுதி பாரிமுனை - பாரிஸ் கார்னர் ஆனது.
பானு சந்திரன்