அன்பு சகோதரிக்கு —
என் வயது: 48, கணவர் வயது: 52. கொத்தனாராக வேலை செய்கிறார். சம்பாதிப்பதை எல்லாம் மது குடித்தே அழிப்பார். வேலைக்கும் சரியாக போக மாட்டார். நான், காய்கறி - கீரை வியாபாரம் செய்கிறேன். மொத்த மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து, தள்ளு வண்டியில் வைத்து, வீடு வீடாக சென்று, விற்பனை செய்வேன்.
மார்க்கெட்டிலிருந்து காய்கறிகளை வாங்கி வர, கணவர் தான், இரு சக்கர வாகனத்தில் உடன் வருவார். இதற்காக, தினமும் அவருக்கு, 100 ரூபாய் கொடுத்து விடவேண்டும். இல்லாவிட்டால், திட்டு, அடி, உதை தான்.
எங்களுக்கு இரு பெண்கள் மற்றும் ஒரு மகன். காய்கறி வியாபாரம் மூலமாகவே மூவரையும் ஓரளவுக்கு படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தேன். மூவரும் தனித்தனியாக வசிக்கின்றனர்.
ஆரம்பத்தில், காய்கறி நிறைந்த கூடையை, தலையில் சுமந்து விற்றதில், கழுத்து வலியும், தலை வலியும் வந்து, இன்று வரை, பாடாய் படுத்துகிறது. உடல் வலுவிழந்து போனதால், இப்போதெல்லாம், தெருத் தெருவாக அலைய முடிவதில்லை.
கையில் காசில்லாமல், கணவருக்கு, தண்ணியடிக்க கொடுக்க முடியாதபோது, 'இது என் வீடு... வெளியே போ...' என்று பேசி, அடிப்பார்.
மகன், ஆட்டோ ஓட்டுகிறான். அவனுக்கும் போதிய வருமானம் இல்லாததால், எனக்கும் உதவ முடிவதில்லை. பொண்ணுங்க வாழ்வும், சிறப்பா இல்லை. நான் தான் அவ்வப்போது உதவி செய்து வருகிறேன். மீதமுள்ள காலத்தை எப்படி கடப்பேனோ என்று பயமாக உள்ளது.
என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். கஷ்ட ஜீவனத்திலும், விவசாய கூலியான என் அப்பா, 8ம் வகுப்பு வரை, என்னை படிக்க வைத்தார். தமிழ் நன்றாக படிக்கவும், எழுதவும் தெரியும்.
இனி, எவ்வளவு காலம் இருப்பேனோ தெரியாது. என் பிள்ளைகளுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நான் என்ன செய்யட்டும், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
பெரும்பாலும் தினக்கூலி பணியாளர்கள், வலது கையில் மது கோப்பையும், இடது கையில் திருமண பந்தம் மீறிய உறவையும் துாக்கி பிடித்திருப்பர். அவர்களின் தீய செய்கைகளுக்கு கிரியா ஊக்கியாக அமைவது, அடித்தட்டு பெண்களின் கோழைத்தனமே.
விதிவிலக்காக சில பெண்கள், சேட்டை செய்யும் ஆண்களை நான்கு அறை அறைந்து, கால்களுக்கு கீழ் அடக்கி வைத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்.
'இது என் வீடு வெளியே போ...' என, உன் கணவன், மொட்டை அதிகாரம் பண்ணும்போது, பத்திரக்காளியாக மாறி ரவுத்ரம் காட்டியிருக்க வேண்டும், நீ. ஓடினால் துரத்துவர்; திரும்பி நின்று உருமினால், தலைதெறிக்க ஓடுவர்.
அடுத்தடுத்து நீ செய்ய வேண்டிய அதிரடி நடவடிக்கைகளை வரிசைப்படுத்துகிறேன்...
1. 'உத்தியோகம் பார்த்து எனக்கு இரு மகள்களையும், ஒரு மகனையும் பெற்று தந்து விட்டாய். செய்த ஊழியத்துக்கு சம்பளமாக தினம், 100 ரூபாயும் பெற்றுக் கொண்டாய். இனி, ஒரு பைசா தரமாட்டேன். 100 ரூபாய் சம்பளம் கொடுக்கும் புதிய இடத்துக்கு ஓடி விடு. உன்னால் கழுத்து வலியும் தலைவலியும் வந்து, நான் அவதிப்பட்டது போதும். என் முகத்தில் விழிக்காதே போ...' என, முறம் வைத்து துரத்தி விரட்டு.
2. ஆட்டோ ஓட்டும் உன் மகனுக்கு, பிரமாதமாக நீ உதவ முடியும். அவன் யாருடைய ஆட்டோவையாவது தான் வாடகைக்கு ஓட்டிக்கொண்டு இருப்பான். அவனுக்கு, பிரதமரின், 'முத்ரா லோன்' மூலம், சொந்தமாக ஆட்டோ வாங்கிக் கொடு. அந்த கடனுக்கு சொத்து அடமானமோ, ஜாமினோ தேவையில்லை. 10 லட்சம் வரை பெறலாம்.
உன் மகனுக்கு ஆட்டோ வாங்க, 2.20 லட்சம் தான் தேவைப்படும். வட்டி, 8.05 சதவீதம் தான். வாங்கும் கடனை, 84 தவணைகளில் மாதம், 3,300 கட்டி அடைத்து விடலாம். காலை, 6:00 மணிக்கு ஆட்டோவை எடுத்தால், இடையே சிறிது நேர ஓய்வுக்கு பின், இரவு, 10:00 மணி வரை ஓட்டலாம். இரவு, 10:00 மணியிலிருந்து அதிகாலை, 6:00 மணி வரை ஓய்வு. தினம் குறைந்தபட்சம், 1,500 - 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.
3. அடுத்து, உன் இரு மகள்களை பார்ப்போம். அவர்களை ஏதாவது ஒரு சுய உதவி குழுவில் சேரச் சொல். சுய உதவிக்குழுவில் சேர்ந்த ஒரு ஆண்டில் பொருளாதார தன்னிறைவு பெற்று விடுவர்.
4. 'முத்ரா லோன்' மூலம், 80 ஆயிரம் பெற்று, பின்மேடை இணைக்கப்பட்ட, 'இ பைக்' வாங்கி நடமாடும் காய்கறி கடை நடத்தலாம். பைக் ஒட்டி காய்கறி வியாபாரம் செய்ய முடியாது என்றால், பிளாட்பார கடை போட்டு வியாபாரம் செய்.
'முத்ரா லோன்' மற்றும் சுய உதவிக்குழு மூலம், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம். ஆனால், வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். கூடா நட்பு கேடாக முடியும். மாதாந்திர தவணை தொகையை குறித்த தேதியில் வங்கியில் கட்ட வேண்டும்.
சொன்னபடி திட்டமிட்டு செயல்பட்டால், உன் வாழ்வும், மகன், மகள்கள் வாழ்வும் மேன்மையடையும். வாழ்த்துகள்!
— என்றென்றும் பாசத்துடன்
சகுந்தலா கோபிநாத்.