பார்த்திபன் எழுதிய, 'சென்னையின் கதை' நுாலிலிருந்து:
ராயபுரம் ரயில் நிலையம்!
கால வெள்ளத்தில், எவ்வளவு பெரிய விஷயமும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான, நிகழ்கால சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது, ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்யமானது.
தென் மாநிலத்தின் முதல் ரயில் நிலையம், ராயபுரம் தான். இங்கிருந்து தான் தென் மாநிலத்தின் முதல் ரயில், தன் பயணத்தை துவங்கியது.
நீராவி இன்ஜினை ஸ்டீபன்சன் கண்டுபிடித்த, 15 ஆண்டுகளுக்கு பிறகு, தென் மாநிலத்தில் ரயில்களை இயக்குவது குறித்து, லண்டனில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 1845ம் ஆண்டு, 'மெட்ராஸ் ரயில்வே கம்பெனி' துவங்கப்பட்டு, இருப்புப் பாதை அமைக்கும் பணி துவங்கியது. அதற்காக, தேர்ந்தெடுத்த இடம் தான், ராயபுரம்.
கருப்பர் நகரம்!
ஆரம்ப நாட்களில், வெள்ளையர் நகரம், கருப்பர் நகரம் என, இரண்டு நகரங்களாகத் தான் இருந்தது, மெட்ராஸ். ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்தது, வெள்ளையர் நகரம்; கோட்டைக்கு வெளியில், கருப்பர் நகரம்.
கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள், சென்னையில் கோட்டை கட்டி குடியேறிய உடனேயே, கோட்டைக்கு வெளியில், வெள்ளையர் அல்லாதவர்கள் தங்குவதற்கென, ஒரு நகரம் உருவானது. இப்படித்தான் சென்னை என்ற மாபெரும் நகரம், கோட்டைக்கு வெளியில் முதல் அடி எடுத்து வைத்தது.
* இங்கிருக்கும் மின்ட் சாலை, 4 கி.மீ., நீளம் கொண்டது. அன்று, உலகின் மிக நீளமான சாலைகளில் இதுவும் ஒன்று.
விவேகானந்தர் இல்லம்!
சென்னையின் புராதன கட்டடங்களில் ஒன்று இது. ஐஸ் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டு, இன்று, விவேகானந்தர் இல்லமாக மாறியிருக்கும் இந்த கட்டடத்தின் கதை, மிகவும் சுவாரஸ்யமானது.
ஆங்கிலேயர் காலத்தில், பிரெட்ரிக் டூடர் என்று ஒருவர் இருந்தார். இவருக்கு, ஐஸ் மகாராஜா என்று ஒரு பட்ட பெயர் உண்டு.
ஐஸ் வியாபாரியான, டூடர், 1833ல், அமெரிக்காவிலிருந்து, 'கிளிப்பர் டுஸ்கானி' என்ற கப்பலில், இந்தியாவிற்கு ஐஸ் கட்டிகளை எடுத்து வந்தார்.
ஐஸ் கட்டிகளை பத்திரமாக, பல மாதங்கள் கரையாமல் பாதுகாப்பதற்காக, இந்தியாவில் மூன்று கட்டடங்களை கட்டினார், டூடர். பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் என, மூன்று நகரங்களில் அவர் கட்டிய கட்டடங்களில், மற்ற இரண்டு கட்டடங்களும் காலத்தில் கரைந்துவிட, மெட்ராஸ் கட்டடம் மட்டும், இன்று மிஞ்சியிருக்கிறது. அதுதான், ஐஸ் ஹவுஸ்.
கடந்த, 1963ல், சுவாமி விவேகானந்தரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு அந்த கட்டடத்தின் பெயரை, விவேகானந்தர் இல்லம் என்று மாற்றியது. 1997ல், அந்த கட்டடமும், அதன் அருகில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியும், மயிலாப்பூரில் உள்ள, ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு, 'லீசு'க்கு விடப்பட்டது.
இதையடுத்து, அங்கு, சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்தியாவின் கலாசார பாரம்பரியம் பற்றி நிரந்தர கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, விவேகானந்தரின் அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மெரினா கடற்கரை!
காலையில், கடல் காற்றில், 'வாக்கிங்' போனது, மாலையில், சூடான தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டலுடன் கடலின் அழகில் மனதை பறி கொடுத்தது என, சென்னைவாசிகள் அனைவரிடமும், மெரினா பற்றிய இனிய நினைவுகள் நிறைந்திருக்கும்.
மெரினாவில், 'வாக்கிங்' போகும் வயோதிகர்கள் முதல், காதலியுடன் கரை ஒதுங்கும் வாலிபர்கள் வரை, அனைவரும் நன்றி சொல்ல வேண்டிய ஒரு நபர் இருக்கிறார். அவர் தான் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின்ஸ்டோன் கிராண்ட் டப்.
காரணம், ஜார்ஜ் கோட்டைக்கும், வங்க கடலுக்கும் இடையில் வெறும் மணல் வெளியாக இருந்த மெரினாவை, அழகிய கடற்கரையாக மெருகேற்றியவர், இவர் தான்.
* சுமார், 13 கி.மீ., துாரம் நீளும் இந்த கடற்கரை, உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாக கருதப்படுகிறது.
* விடுமுறை நாட்களில், தினமும், 50 ஆயிரம் பேர், மெரினாவிற்கு வருகின்றனர்.
பிரசிடென்சி கல்லுாரி!
சென்னை பல்கலைக் கழகத்தின் தாயாக கருதப்படும், பிரசிடென்சி கல்லுாரி எனப்படும், மாநில கல்லுாரி, சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. மெரினா கடற்கரைக்கு எதிரில் உள்ள இந்த சிகப்பு நிற கட்டடத்திற்கு, 1௫0 வயதாகிறது. எத்தனையோ அறிஞர் பெருமக்களை உருவாக்கியிருக்கும் இக்கல்லுாரி, சென்னைக்கு கிடைத்த மாபெரும் வரம்.
கடந்த, 1867ல், அப்போதைய மெட்ராஸ் ஆளுனர், லார்ட் நேப்பியர் அடிக்கல் நாட்ட, கட்டுமானப் பணி துவங்கியது. மூன்று ஆண்டு கடும் உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட, பிரசிடென்சி கல்லுாரி கட்டடத்தை, மார்ச் 25, 1870ல், எடின்பர்க் கோமகன் திறந்து வைத்தார்.
* இந்த கல்லுாரியின் பொன் விழா, கொண்டாடப்பட்டப்போது, அப்போதைய கல்லுாரி முதல்வரான, டாக்டர் டேவிட் டங்கன், கல்லுாரியின், 50 ஆண்டு சாதனைகளை புத்தகமாக வெளியிட்டார். இதுதான், கல்லுாரியின் வரலாறை அறிந்துகொள்ள, இப்போது நமக்கு உதவுகிறது.
ரிப்பன் மாளிகை!
எப்போது பார்த்தாலும், பொங்கலுக்கு வெள்ளை அடித்தது போல பளிச்சென்று இருக்கும் ஒரு புராதன கட்டடம், இது. சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த பல கட்டடங்களும், செக்கச் செவேலென்று நின்று கொண்டிருக்க, இது மட்டும் வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையை தேடிப் போனால், அது, 1688ல் போய் நிற்கிறது. அப்போது தான் இந்தியாவில் முதல் மாநகராட்சியாக, மெட்ராஸ் மாநகராட்சி உதயமானது.
பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி, மாநகராட்சிக்கென புதிய கட்டடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்த காலத்திலேயே, 8 லட்சம் ரூபாய் செலவு செய்து, தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது.
இந்த கட்டடம், 1913ல் திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி கட்டடம் என்பதால், உள்ளாட்சி நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த, லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும் வைத்து விட்டனர். அவரை நினைவு கூறும் வகையில், அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.
* இந்தியாவின் முதல் பெண் மேயரை தந்ததும், சென்னை மாநகராட்சி தான். அவர் தான், தாரா செரியன்.
நடுத்தெரு நாராயணன்