குற்றவாளி யார்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2020
00:00

பிரேதப் பரிசோதனை முடிந்து, வெள்ளைப் பொதியாக வந்து, வீட்டுக்குள் கிடத்தப்பட்டிருந்தது, மதுமதியின் உடல். நேற்றிரவு முதல் நீடிக்கிற பட்டினியாலும், தீராத அழுகையாலும் சோர்ந்து, சடலத்தருகே அரை மயக்க நிலையில், பெண்களின் தாங்கலில் கிடந்தாள், அம்மா வேதவல்லி.
தம்பி திருச்செல்வன், இன்னும் கோபம் தீராமல், 'சாமியானா'வுக்கு வெளியே நின்றிருக்க, அவனது நண்பர்கள், அவனை சமாதானப்படுத்த முயன்று, தோற்றுக் கொண்டிருந்தனர். அப்பா அண்ணாமலை மட்டுமே, வீட்டுக்கு வெளியில் நின்றபடி, துக்க விசாரிப்புகளுக்கு, பதில் சொல்லியபடி இருந்தார்.

நடந்த அசம்பாவிதங்களை எப்படி சொல்வது, சொல்லக் கூடிய காரியமா அது... ஊர், உலகம் முழுக்க பரவியும் இருப்பதால், அதை மறைக்கத்தான் முடியுமா... சொந்த பந்தங்கள், துக்க முகம் காட்டி, அப்படி சென்றதும், இழிவாகப் பேசினர்.
'இந்த காலத்துல யாரை நம்பறது, யாரை நம்பக் கூடாதுன்னே தெரியல... பாக்குறக்கு, குடும்பப் பாங்கா, அடக்க ஒடுக்கமா, சுடிதாரை தவிர்த்து, வேற, 'மாடர்ன் டிரஸ்' கூட போடாத புள்ளை, டீச்சரு வேற... இது பண்ணுன அலம்பல பாத்தீங்களா...
'அத்தனையும் அவுத்துப் போட்டுட்டு விதவிதமா, புகைப்படத்துக்கு, 'போஸ்' குடுத்து, 'செல்பி' எல்லாம் எடுத்திருக்குது. காதலோ, வேற என்ன கண்றாவியோ தெரியல... அவனுக்கு அனுப்பிட்டா, அவன், 'நெட்'டுல உட்டுட்டான்... அவுங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ, இல்ல காசு கெடைக்குதுன்னு புகைப்படத்தையெல்லாம் வித்துட்டானோ...
'இப்படி எசகு பிசகா மாட்டுனா, அதெல்லாம், 'மார்பிங்'ன்னு சொல்லி தப்பிக்கலாம்ன்னு பாப்பாளுக... இந்த புள்ளையும் அப்புடித்தான் சொல்லிப் பார்த்திருக்கு... முடியலீங்கவும், துாக்குல தொங்கீருச்சு...' என, உறவினர்கள் பேசிக் கொள்ள, ஏற்கனவே கூனிக் குறுகி நின்றிருந்த, அண்ணாமலைக்கு, தானும் கூட நாண்டுகிட்டு சாகலாம் போலிருந்தது.
மதுமதி, எப்படி இந்த அளவுக்கு கேவலமான செய்கையில் ஈடுபட்டாள் என்பது புரியவில்லை. அவளுக்கு யாருடனாவது காதல் இருந்து, அவனை நம்பி, தன் படங்களை அனுப்பி, அவன் ஏமாற்றி விட்டானா அல்லது பணத்துக்கோ, பிரபலத்துக்கோ ஆசைப்பட்டு, வழி தவறி சென்று விட்டாளா...
கவுரவமான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள் அப்படி செய்வாளா என, மற்றவர்களை போலவே அண்ணாமலையாலும் நம்ப முடியவில்லை.
மதுமதி, அந்த ரகமான பெண் அல்ல. பண்பாடும், கலாசாரமும் பிறழாமல் நன்னடத்தையோடு வளர்ந்தவள். அப்படித்தான், அண்ணாமலையும் - வேதவல்லியும், அவளை வளர்த்தனர். அவளும், பள்ளி, கல்லுாரி காலங்களில் கூட, காதல் விவகாரங்கள் எதிலும் ஈடுபட்டதில்லை.
பாவாடை, தாவணி, சேலை, சுடிதார் தவிர, வேறு நவீன ஆடைகள் கூட உடுத்த மாட்டாள். அதுவும், இளநிலைக்கு பிறகு, சேலை, சுடிதார் மட்டும் தான். ஆங்கிலம் முதுகலை மற்றும் ஆசிரியைப் பயிற்சி முடித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருந்தாள்.
அடக்க ஒடுக்கமான, அமைதியான, ஒழுக்கம் நிறைந்த பெண் என்று, சொந்த பந்தங்களிடமும், ஊரிலும் பேரெடுத்தவள். நல்லாசிரியை என்று பள்ளியிலும் மதிப்பு.
ஆனால், வீட்டுக்கும் வெளி உலகத்துக்கும், இப்படிப்பட்ட முகம் காட்டுகிற குடும்பப் பெண்கள் பலருக்கும், அதற்கு நேர் எதிரான இன்னொரு முகம் இருப்பது, இப்படியான சந்தர்ப்பங்களில் தானே தெரிய வருகிறது.
தன் மகள், எந்த தவறும் செய்ய மாட்டாள் என்று நம்புகிற பெற்றோரின் நம்பிக்கைப்படியே தாங்களும் ஏமாந்து, அவளையும் பறிகொடுத்து, குடும்ப மானத்தையும் இழந்து நிற்கிறோமே என்று கலங்கினார், அண்ணாமலை.

இவர்களுடையது எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாத அளவான குடும்பம். சொந்த வீடு. மூத்தவன், திருச்செல்வன் பட்டப் படிப்பு முடித்து, தற்காலிகமாக, மென்பொருள் துறை சார்ந்த சுய தொழிலை, வீட்டில் இருந்தபடி செய்து கொண்டிருந்தான்.
பெங்களூரு, மும்பை என சென்றால், தக்க பணி கிடைக்கும். ஆனால், சம்பளம் குறைவாகவே இருக்கும். எனவே, பணம் கொழித்த மேற்கத்திய மற்றும் வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் வேலைக்கு முயன்று கொண்டிருந்தான். அதுவரைக்கும் சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக, இந்த சுய தொழில்.
இளையவள், மதுமதி. ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருப்பவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவள், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால், இவர்கள் அதிக முனைப்பு காட்டவில்லை.
இருவருமே பொறுப்பானவர்கள். திருச்செல்வனும், மதுமதியும், முகநுாலில் இருக்கின்றனர். ஆனால், திருச்செல்வன் அதை அவ்வளவாக பயன்படுத்துவது கிடையாது.
தோழர், தோழிகளுடான நட்புக்காக, கல்லுாரி காலம் முதலே முகநுாலில் இருந்தாலும், எப்போதாவது மட்டுமே வந்து செல்வாள், மதுமதி. அவளது பதிவுகள் ஆசிரியை என்ற முறையில், பொதுவாக கல்வித் துறை மற்றும் மாணாக்கர்களின் கல்வி சார்ந்ததாகவே இருக்கும். ஒளிப்படங்களை அதிகம் வெளியிட மாட்டாள்.
மக்களுக்குப் பயனுள்ள வகையில் கருத்துகளையும், தகவல்கலையும் எழுதுவதற்காகவே, முகநுாலை பயன்படுத்தினாள். அதனால், அடிக்கடி வர வேண்டிய தேவையோ, விருப்பமோ அவளுக்கு இல்லை.
வீட்டில் முகநுாலை அதிகம் பயன்படுத்துகிறவர், அண்ணாமலை தான். அவர் பணிபுரிகிற அரசு அலுவலகத்தில் யாருக்குமே அவ்வளவாக வேலை இராது. அங்கே, இணைய இணைப்பும் உள்ளது. அதனால், கணினியில் பணிபுரிகிற, 800 பேரில், 600 பேர், முகநுால்வாசிகளாகவே இருந்தனர்.
இது தவிர, ஸ்மார்ட் போனில், மூன்று மாத, 'ஸ்கீமில், ரீசார்ஜ்' செய்தால், வெளி அழைப்புகளோடு, தினம் ஒன்றரை, ஜி.பி., இணைய தரவு இலவசம். ஊரில் இருந்து பொள்ளாச்சிக்கு போவதும், வருவதுமான முக்கால் மணி நேர பேருந்து பயணங்களின்போதும், வீட்டில் ஓய்வாக உள்ளபோதும், அலைபேசி வழி முகநுாலில் உலாத்துவார்.
நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என, நட்பு வட்டம் பெருகி, இப்போது அவருக்கு, 700 சொச்சம் முகநுால் நண்பர்கள் இருந்தனர்.
சமூகம், நாட்டு நடப்பு, பொது கருத்துகள் என, அவர் வெளியிடுகிற தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு, குறைந்தது, 50 முதல் அதிகபட்சம், 100ஐ கடந்து விருப்பங்கள் விழும். அதில் அவருக்கு மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் இருந்தது.
அதே போல, முக நுாலர்களுக்கே உரித்தானபடி, அவரும் அலைபேசியில், 'செல்பி' எடுத்து, அவ்வப்போது, 'புரொபைல்' படத்தை மாற்றிக் கொண்டிருப்பார். மனைவி, மகன், மகள் பிறந்த நாட்களில் அவர்களை படமெடுத்து வெளியிட்டு, வாழ்த்துமாறு கேட்டுக் கொள்வார்.
பண்டிகைக் காலங்கள், வெளியூர் பயணங்கள், ஊர்த் திருவிழாக்கள் போன்ற சிறப்பு தினங்களிலும் குடும்ப சகிதமான படங்களை வெளியிடுவார். மதுமதியின் படத்தைப் பார்த்த சிலர், அவள், 'போட்டொஜெனிக்'காக இருக்கிறாள் என்று பாராட்டவே, அடிக்கடி அவளை படமெடுத்து வெளியிடுவதும், அதற்கு விருப்பம் மற்றும் பாராட்டுகள் குவிவதும் வழக்கமாக இருந்தது.
'எங்க வீட்டுக்காரருக்கு, 'பேஸ்புக்' தான் கள்ளக் காதலி... அவருக்கு குடி, பீடி சிகரெட், சீட்டாட்டம், மத்த பொம்பளைககிட்ட சகவாசம்ன்னு, வேற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது; ஆனா, அதுக்கெல்லாம் சேத்து வெச்சு இந்த, 'பேஸ்புக்'கே கதின்னு எப்பப் பாத்தாலும் அதுலயே விழுந்து கெடக்கறாரு...' என, குறைபட்டுக் கொள்வாள், வேதவல்லி.
'என்னப்பா நீங்களும், காலேஜ் பசங்க மாதிரி எப்பப் பாத்தாலும், 'போட்டோ, செல்பி, ஸ்டேட்டஸ்'னு, எதையாவது போட்டுட்டு, எத்தனை, 'லைக்' விழுகுதுன்னு பாத்துட்டு இருக்கறீங்க... நீங்களும் இந்த காலத்துப் பசங்க மாதிரி, 'பேஸ்புக் அடிக்டா' ஆயிட்டீங்களே...' என்று அங்கலாய்ப்பாள், மதுமதி.
ஆனால், அவளே இப்படி ஒரு கேடு கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறாளே என்றெண்ணி, இன்னமும் மனம் குமைந்தார், அண்ணாமலை.

நேற்று பிற்பகல், 3:00 மணி வாக்கில் தான், திருச்செல்வன், அவருக்கு அலைபேசியில் அழைத்து, முகநுாலில், மதுமதியின் நிர்வாண படம் வெளியாகி உள்ளதாக, அவனது நண்பர்கள் தெரிவித்த விஷயத்தைச் சொன்னான். அவரும் பதறியடித்து, அலுவலகத்தில் விடுப்பு எடுத்து, வீடு திரும்பினார்.
இவர், இங்கு வரும் முன்பே, விஷயம் ஊருக்குள் பரவி, குடும்ப மானம் சந்தி சிரித்துக் கொண்டிருந்தது. இதே காரணத்தால், மதுமதியும் வீடு திரும்பியிருந்தாள்.
திருச்செல்வன் அவளிடம், எவ்வளவோ மிரட்டிக் கேட்டும், 'அது நானல்ல... யாரோ, 'மார்பிங்' செஞ்சது. வேணும்னா நீங்களே அதைப் பாருங்க...' என்று அழுதாள்.
'ஏன்டீ, விவஸ்தை கெட்டவளே... அண்ணனும், அப்பாவும் பார்க்கக் கூடிய புகைப்படமாடி அது... கண்டவன் முன்னாடி முண்டக்கட்டையா நின்னு போட்டோ எடுத்துட்டு இப்ப, 'மார்பிங்'னு சொல்றியா...
'நானும் பார்த்தேனே... தலை வேற, ஒடம்பு வேறயா, ஒட்ட வெச்ச மாதிரியே இல்ல... உன்னோட ஒடம்பு மத்தவங்களுக்கு தெரியாட்டியும் எனக்கு தெரியுமே... அச்சு அசலா அப்படியேதான இருக்குது...' என்றாள், வேதவல்லி.
'என்னம்மா நீ கூட என்னை நம்ப மாட்டேங்கிற, என்னோட ஒடம்பு மாதிரி வேற ஒடம்பே இருக்காதா... கரெக்ட்டா, 'மேட்ச்' ஆகற மாதிரி, ஏதோ ஒரு பொண்ணோட ஒடம்ப, என் முகத்தோட ஒட்ட வெச்சிருக்கறாங்கம்மா...'
'என்னோட, 'பிரண்ட்ஸ்' அதைப் பாத்திருக்கறாங்க. அவங்களுக்கும், 'மார்பிங்' பத்தி நல்லா தெரியும். உன்னோட புகைப்படம், 'மார்பிங்' மாதிரி இல்லேன்னு தான் சொல்றாங்க. உண்மைய சொல்லீட்டா நல்லது. நீயும் பொள்ளாச்சி கும்பலிடம் மாட்டியிருந்து, அவங்க உன்னை மிரட்டி புகைப்படம், வீடியோ எல்லாம் எடுத்துட்டாங்களா...
'உண்மைய சொல்லித் தொலை... உன் மானம் மட்டுமில்ல, இது, குடும்ப மானமே போற விஷயம். அந்த கும்பலிடமோ, வேற எங்கயோ மாட்டிட்ட பொண்ணுன்னாலாவது, அவமானத்துலருந்து ஓரளவுக்காவது தப்பிக்கலாம். மத்தவங்களோட அனுதாபம் கெடைக்கும்.
'இல்லேன்னா போன மானம் போனது தான். நாங்க யாரும் வெளிய தலை காட்ட முடியாது...' என, திருச்செல்வன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவள், 'அப்படி எதுவும் இல்லவே இல்லை...' என, மறுத்துக் கொண்டிருந்தாள்.
அக்கம் பக்கத்தவர்களும், ஊர்க்காரர்களும் நேரில் வந்து விசாரிப்பு மற்றும் அலைபேசியில் சொந்த பந்தங்களின் விசாரிப்பு என்று நிலைமை இன்னும் தீவிரமானது. ஒரு கட்டத்துக்கு மேல் அவற்றைத் தாங்க முடியாமல் அனைவரின் அலைபேசிகளையும் அணைத்து, வீட்டுக் கதவையும் சாத்திக்கொள்ள வேண்டியதாகி விட்டது.
அன்று இரவு, சமையல் கூட செய்யவில்லை. வேதவல்லியும், மதுமதியும் ஒவ்வொரு பக்கம் அழுதுகொண்டே இருந்தனர். அண்ணாமலையும், திருச்செல்வனும் விளக்கணைத்து, ஒன்றரை மணி வரை செய்வதறியாது விழித்திருந்து, உறங்கச் சென்றனர். வேதவல்லி எப்போது துாங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. மதுமதி துாங்கினாளா என்பது யாருக்கும் தெரியாது.
விடியற்காலை -
வேதவல்லியின் அலறலில் அண்ணாமலையும், திருச்செல்வனும் விழிப்புற்று ஓடி வந்து பார்த்தபோது, கூடத்தில் உள்ள மின் விசிறியில், சேலையில் துாக்கிட்டு, மதுமதியின் சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.
மதுமதியின் பள்ளியிலிருந்து சில ஆசிரிய - ஆசிரியைகளும், மாணவ - மாணவியர் சிலரும், மலர் வளையங்களோடு வந்து, அவளது உடலுக்கு அஞ்சலி செய்து கொண்டிருந்தனர்.
''உலகமே அவள நம்பலேன்னாலும், பரவால்லங்க அங்கிள். குடும்பத்துல ஒருத்தர் கூடவா நம்பாம போயிட்டீங்க... அது தாங்காமத்தான் அவ தற்கொலை பண்ணியிருப்பா... மத்தபடி யாரோ அயோக்கியனுக செஞ்ச, 'மார்பிங்' புகைப்படத்தால சாகற அளவுக்கு, மதுமதி ஒண்ணும் விபரம் இல்லாதவளோ, கோழையோ இல்ல,'' என்றாள், ஒரு ஆசிரியை.
''நீயும் அத, 'மார்பிங்'ன்னு சொல்றியா?''
''ஆமா, அங்கிள்... மதுமதிக்கு யார் கூடவாவது, 'லவ்' இருந்திருந்தா எங்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பா... நடத்தை கெட்டுப் போற அளவுக்கு அவ ஒண்ணும் மோசமானவளும் கெடையாதுங்கறது, உங்களுக்கே தெரியும். நானும், 'பேஸ்புக்'ல அந்த புகைப்படத்த பார்த்தேன்; நிச்சயமா அது, 'மார்பிங்'கே தான்.
''நீங்க, உங்க பேஸ் புக், 'டைம் லைன்'ல போட்ட, மதுமதியோட புகைப்படங்கள வெச்சு தான், 'மார்பிங்' பண்ணியிருக்கறாங்க... மதுமதியோட அவமானத்துக்கும், சாவுக்கும் முழுக்க முழுக்க நீங்க தான் காரணம்,'' என்றாள்.
குற்ற உணர்வில் விக்கித்து நின்றார், அண்ணாமலை.

ஷாராஜ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
16-ஆக-202017:35:03 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI குற்றவாளி யார் என்றால் மார்பிங் செய்யும் ஒவ்வொரு ஆணும் தன் தாய் சகோதரி பற்றி எள்ளளவும் நினைக்காமல் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எண்ணம் வரக் காரணம் சரியாக வளர்க்காமல் விட்ட பெற்றோர் பெற்றோர். சுய விளம்பரம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது தவறு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X