திருமண வீடியோ, 'அப்லோடு' வேண்டாமே...
இப்போதெல்லாம் உறவினர்கள் திருமணத்தை, 'ஆன்லைனில்' பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதுபோன்ற, திருமண நிகழ்வை, பெரும்பாலான உறவினர்கள், தங்களது போனில், பதிவு செய்து கொள்கின்றனர்.
அதிலும் சிலர், அந்த வீடியோவை பார்த்து ரசிப்பது மட்டுமல்லாமல், இணையத்திலும் பதிவிடுகின்றனர். இப்படித்தான் அன்று, ஒரு திருமண வீடியோவை பார்த்தேன்.
அதில், மாப்பிள்ளை, சுமாராக இருந்தார். பெண், அழகாக இருந்தாள். அவர்களை விமர்சித்து, 'கமென்ட் பாக்சில்' போடப்பட்ட பதிவை கண்டு, மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
தாங்களும், அக்கா - தங்கை, அண்ணன் - தம்பி உறவுகளாக பிறந்துள்ளோம் என்பதை மறந்து, மிக கொச்சையாக விமர்சனம் செய்திருந்தனர்.
இதுபோன்ற சில்லரை புத்திக்காரர்கள், வேண்டுமென்றே மற்றவர் மனம் புண்படும்படி, தேவையற்ற, 'கமென்ட்ஸ்' செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆகவே, இதுபோன்ற திருமண நிகழ்வு வீடியோக்களை, இணையத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இது, தங்கள் குடும்ப மானத்தை, தாங்களே காற்றில் பறக்க விட்ட கதையாகி விடும்; ஜாக்கிரதை!
- அ. சாரதா, தர்மபுரி.
ஊருக்கு ஒரு கலா சாலை!
எங்கள் ஊரில், இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து, 'சிலம்பாட்ட குழு' என்ற அமைப்பை நிறுவி, பள்ளி மாணவ - மாணவியருக்கு, வீர கலைகளை பயிற்றுவித்து வருகின்றனர்.
சிலம்பம், வாள் வித்தை போன்ற கலை போட்டிகள் எங்கு நடந்தாலும், அதில், கலந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்; இவர்களே மொத்த செலவையும் ஏற்கின்றனர்.
இதனால், மாணவர்களின் தன்னம்பிக்கையும், திறமையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கலாசார சீரழிவிலிருந்து தமிழக பாரம்பரிய கலைகளை மீட்டும் வருகின்றனர்.
இவர்களை போன்ற இளைஞர்களை நினைத்து பார்க்கையில், மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது.
ஊருக்கு ஒரு குழுவை அமைத்து, தமிழக கலைகளை பரப்பலாமே!
த. வசந்தி, கோவை.
உபகாரம் செய்யாவிட்டாலும்...
'கொரோனா' தாக்குதலுக்கு பின், சென்னை மாநகராட்சியில் இருக்கும் ஊழியர்கள், குறிப்பாக, பெண் ஊழியர்கள், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், வீட்டில் இருப்பவர்களின் தேக நலனை விசாரித்து, குறித்துச் செல்வது வழக்கம்.
இவ்வாறு, 28 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், வீடு வீடாக சென்று, அனைவருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என, பரிசோதிக்க வந்தார்.
பரிசோதித்து முடித்ததும், அவரைப் பற்றி விசாரித்தேன்.
'திருமணமாகி, 3 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப சூழ்நிலையால், வேறு வழியின்றி இந்த வேலையை செய்கிறேன். பல வீடுகளில், ஏதோ, 'கொரோனா'வை பரப்ப வந்தவர் போல, எங்களை, அவர்கள் நடத்தும் விதத்தால், மிகவும் வேதனையாக உள்ளது.
'சிலர், வெயிலில், வெளியே நீண்ட நேரம் நிற்க வைத்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு நோகடிக்கின்றனர். பலரையும் சந்திக்க வேண்டியிருப்பதால், யாரிடமிருந்தாவது இந்த தொற்று வந்து விடுமோ எனும் பயத்துடனே பணி செய்கிறேன்.
'வீட்டிற்கு சென்ற பிறகும், அதே பயத்துடனே, குழந்தைகளையும், குடும்பத்தையும் அணுக வேண்டியிருக்கிறது...' எனக் கூறி வருந்தினார்.
இப்படி, மிகுந்த பயத்துடன், தன்னலமற்ற சேவை செய்து வரும் இவர்களை போன்றவர்களின் சேவையை பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. அவர்களை, தம் கடுஞ்சொற்களால் காயப்படுத்தாமலாவது இருக்கலாமே!
தார்சி எஸ். பெர்னாண்டோ, சென்னை.
ரசனைக்கு மொழி தேவையில்லை!
நான், துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில், பணிபுரிந்து வருகிறேன். அங்கு நடந்த ருசிகரமான நிகழ்வு இது:
கம்பெனி விடுதியில், தனி அறையில் வசித்தபோது, என் நிரந்தர பொழுதுபோக்கு, 'சிடி' போட்டு, நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளை, 'டிவி'யில் ரசித்து பார்த்து, மனச் சுமையை போக்கிக் கொள்வது தான். என் அறைக்கு பக்கத்து அறைகளில் தங்கியிருந்த, மூன்று உயர் அதிகாரிகளும் ஆங்கிலேயர்கள்.
ஒருநாள் மாலை, அலுவல் சம்பந்தமாக பேச, என் அறைக்கு வந்தார், ஒரு அதிகாரி. 'டிவி'யில் வடிவேலுவின் காமெடியை பார்த்து, உரக்க சிரித்தவாறு இருந்த என்னை, தொந்தரவு செய்யாமல், என்னுடன் அமர்ந்து, அரைமணி நேரம், அவரும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மறுநாள் மாலை, திடீரென்று, மற்ற இரண்டு ஆங்கிலேய நண்பர்களுடன், என் அறைக்கு வந்தார். முக்கிய அலுவல் விஷயமாக இருக்கும் என எண்ணி, நான், 'டிவி'யை அணைக்க முயல, அதை தடுத்தார், அதிகாரி.
மொழி தெரியாவிட்டாலும், வடிவேலுவின் சேஷ்டைகளை கண்டு, அவர்களும் ரசித்து சிரித்தனர்.
அன்று முதல், தினமும் அறைக்கு வந்த அந்த மூன்று அதிகாரிகளும்,'சிடி'யை போடச் சொல்லி, வடிவேலு பேசிய தமிழ் வசனங்களை, ஆங்கிலத்தில், என்னை மொழி பெயர்த்து சொல்ல வைத்து, ரசித்து பார்த்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின், பணி நேரத்தில் என்னிடம் அடிக்கடி எரிந்து விழும் அந்த அதிகாரிகளின் செயல்பாட்டில், பெரும் மாறுதலை கண்டேன்.
எந்த பதற்றமுமின்றி, அவர்கள் சகஜமாக மாற காரணமாயிருந்த, வடிவேலுக்கு, மானசீகமாக நன்றி கூறினேன்.
வெ. ராமன், சென்னை.