பா-கே
நண்பர் ஒருவர், என்னைப் பார்க்க வந்திருந்தார். முகநுாலில் அவர் படித்ததைக் கூறினார்...
'பொறுப்பாக இருங்கள்; இன்றிரவு ஆணுறை அணியாதீர்!'
இப்படி ஒரு சமூகம் கூறுவதை கேள்விப்பட்டதுண்டா... சென்னையில், இன்று வெறும், 250 பேரும், இந்தியாவில், 60 ஆயிரம் பேர் மட்டுமே கொண்ட, 'பார்சீ' சமூகத்தினர் தான், முகநுாலில் இப்படி கூறுகின்றனர்.
கடந்த, 7ம் நுாற்றாண்டில், பாரசீகம் என்று அழைக்கப்பட்ட ஈரானை, அரேபியர்கள் வெற்றி கொண்டு, இஸ்லாமிய நாடாக உருவானது. அப்போது, பாய்மரக் கப்பல்களில் இந்தியாவின், குஜராத் மாநிலத்தில் உள்ள, டையூ துறைமுகத்திற்கு வந்து, அங்கிருந்து சன்ஜன் என்ற இடத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் தான், பார்சீ இனத்தவர்.
அப்போது, அந்த பிரதேசத்தின் அரசரான, ஜடி ராணா, ஒரு பாத்திரத்தில் விளிம்பு வரை நிரப்பப்பட்ட பாலை எடுத்து வைத்து, 'எங்கள் ஊர் இப்படி நிரம்பி வழிகிறதே... நீங்கள் வேறு அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறீர்களே...' என்றார்.
அதற்கு அந்த கூட்டத்தின் தலைவர், தஸ்துார், அந்த பாலில் ஒரு சிட்டிகை சர்க்கரையை கலந்து, 'நாங்கள், உங்கள் மக்களுடன் சர்க்கரை போல கரைந்து, இனிப்பைக் கூட்டுவோம்...' என்றார்.
'சரி...' என்று ஒப்புக் கொண்டார், அரசர்.
சென்னைக்கு, 1900ல், படகு மூலம் வந்த இவர்கள், ராயபுரம் பகுதியில் குடியேறினர். சிறிது சிறிதாக நிலங்களை வாங்கி, 1910ல், அக்னி கோவிலை கட்டினர். அதன் அருகிலேயே தங்கள் வீடுகளை கட்டிக் கொண்டனர்.
அக்னி கோவிலுக்குள் பார்சீ இனத்தவர் தவிர, வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பார்சீ இனத்தைச் சேர்ந்த ஒருவர், வேறு மதத்தில் திருமணம் செய்து கொண்டால், அவர்களும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை.
இவர்கள், வெள்ளை வெளேர் நிறத்தவர்களாக இருக்கின்றனர்; நிறம் குறைந்தவர்களை கண்டால், இவர்களுக்கு சற்று இளக்காரம் தான்.
பார்சீ இனத்தவர்களில் பலர், பெரும் பணக்காரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இந்திய முன்னாள் பிரதமர், இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி, டாடா நிறுவன தலைவர், ஜாம்ஷெட் ஜி டாடா, இந்திய ராணுவத்தின் தலைவராக திகழ்ந்த, பீல்ட் மார்ஷல் மானெக் ஷா ஆகியோர், பார்சீ இனத்தை சேர்ந்தவர்களே!
சென்னையிலும், பார்சீ இனத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இவர்கள் படிப்பிலும், மிக கெட்டிக்காரர்களாக இருந்துள்ளனர்.
அவர்களில் சிலரை பற்றி தெரிந்து கொள்வோம்:
அடிமெர்வான் இராணி: இவர், மும்பையில், ஆலம் ஆரா என்ற இந்தியாவின் முதல் திரைப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். 1939ல், சென்னைக்கு வந்து,
எஸ்.எஸ்.வாசன் நிறுவனத்தில் சேர்ந்து, காமதேனு, பால நாகம்மா மற்றும் ஹரிதாஸ் போன்ற பல திரைப்படங்களுக்கும், பின், நாகிரெட்டி ஸ்டுடியோவில், பல திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
முதன்முதலில் இரட்டை வேடங்களையும், 'கிரேன் ஷாட்' முறையை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான். இவரது மகன், மெஹ்லி இராணியும், பிரபல மலையாள ஒளிப்பதிவாளர்.
தின்ஷா இராணி: ஈரானிலிருந்து, சென்னைக்கு வந்த புதிதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சுமை துாக்கும் கூலியாக வேலை செய்தார். இவரை கண்ட சில பார்சீகள், சினிமா ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்த்து விட்டனர். பின்னாளில், அவர் பிரபல ஒலி பொறியாளராக திகழ்ந்து, 'நியூடோன்' என்ற ஸ்டுடியோவை நிறுவினார்.
சென்னையில் பிரபல, 'காசினோ' மற்றும் 'எல்பின்ஸ்டன்' திரையரங்குகளின் உரிமையாளர்களாக, பார்சீ இனத்தவர் உள்ளனர்.
ஹோர்மங்ஜி நவரோஜி: பொறியாளரான இவர், கீழ்ப்பாக்கத்தில் முதன்முதலில் குடிநீர் வழங்கும் நிறுவனத்தை ஏற்படுத்தி, சென்னைக்கு, குழாய் மூலம் நீர் வழங்கும் சேவையை கொண்டு வந்தார்.
பார்சீ இனத்தவர் பலர், அவர்கள் செய்யும் தொழிலையே, பெயரின் பாதியாக உடையவர்கள். இன்ஜினியர், கான்ட்ராக்டர், கிளப் வாலா போன்ற பெயர்கள், மிகவும் பிரபலம்.
இவர்களது இனத்தில் இறந்தால், உடல்களை எரிப்பதோ, புதைப்பதோ கிடையாது; 'அமைதி கோபுரம்' என்ற அவர்களது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இருக்கும் கழுகுகளுக்கு இரையாக்கி விடுவர். தற்போது, அதற்கு பல இடங்களில் வழி இல்லாததால், எரிக்கவோ, புதைக்கவோ செய்கின்றனர்.
பார்சீ இனத்தவர்களின் உணவுப் பண்டங்கள் மிகவும் பிரத்யேகமானவை. அதில், முட்டை மற்றும் உருளைக்கிழங்கு கட்டாயமாக சேர்க்கப்படுகிறது. குஜராத்தி உணவு வகைகளும் இடம் பெறுகின்றன; இவர்களது உணவில், தேங்காய் அதிகம் சேர்க்கப்படுகிறது.
பார்சீகள் அசைவ உணவு பிரியர்கள். அவர்களில் ஒரு பிரிவினர் தான், இராணியர். இன்றும் இராணி தேநீர் கடை, சென்னையில் மிக பிரபலம். பலுாடா என்ற ஐஸ்க்ரீம் வகையை, இவர்கள் ஈரானிலிருந்து வரும்போது கொண்டு வந்த உணவு வகை தான்.
இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், மிக காலதாமதமாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். ஆண் - பெண் இருவரும், தாங்கள் செய்யும் வேலையிலேயே கருத்தாக உள்ளனர்.
அதனால், குழந்தை பிறப்பும் தாமதமாகிறது அல்லது குழந்தைப் பேறு இல்லாமலே போகிறது. அப்படியே பிறந்தாலும், ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். அதேபோல், வேற்று மதத்தில் திருமணம் செய்து கொள்வதாலும், சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றனர்.
இதனாலேயே இந்த சமூகம், மிகவும் சிறுத்து போயிருக்கிறது.
- இவ்வாறு அவர் கூறினார்.