ஒரு பூனையும், இரண்டு நாய் குட்டிகளும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
00:00

சோபாவில் அமர்ந்ததும், 'ரிமோட்' மூலம், 'டிவி'யை, 'ஆன்' செய்தாள், சுஜிதா.
'உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா, எங்கள், 'ஹெல்த் டிரிங்கை' இரண்டு கப், குழந்தைக்கு குடிக்க கொடுங்கள்...' என்று, விளம்பரம் வந்தது.
அது, அவளது மனக்காயத்தின் வலியை அதிகமாக்க, தொடர்ந்து அதை பார்க்க விரும்பாமல், அடுத்த சேனலுக்கு தாவினாள்.
அப்போது, கையில் காபியுடன், அவளருகில் வந்தமர்ந்த, ரமேஷ், சுஜிதா கையிலிருந்த, 'ரிமோட்'டை வாங்கி, விளையாட்டு சேனலுக்கு மாற்றினான்.
''சுஜி... நாளைக்கு, சாரதா ஹோமுக்கு போகலாம்ன்னு இருக்கேன். நீ என்ன முடிவு பண்ணியிருக்கே,'' என்று, 'டிவி'யை பார்த்தபடியே கேட்டான்.
என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.

சுஜிதாவிற்கும், ரமேஷுக்கும் திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், அவர்களை, 'அம்மா... அப்பா...' என்று கூப்பிட, ஒரு குழந்தை இல்லை. முதல் ஆண்டு, அதைப் பற்றி கவலைப்படவில்லை. இரண்டாவது ஆண்டு, 'என்னப்பா, வீட்லே ஏதாவது விசேஷம் உண்டா...' என, மற்றவர்கள் விசாரிக்கும்போது, கவலை துளிர் விட ஆரம்பித்தது.
குடும்பத்தில் நடக்கும் விசேஷத்திற்கோ அல்லது நண்பர்கள் வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கோ போனால், 'என்ன, சுஜி... சும்மாதான் இருக்கியா, விசேஷம் ஒண்ணுமில்லையா... உனக்கு அப்புறம் தான் என் ஓரகத்தி மகளுக்கு கல்யாணம் நடந்துச்சு... இப்ப, அவ பிள்ளை நடக்க ஆரம்பிச்சுட்டான்...' என்ற பேச்சாக தான் இருக்கும்.
யாராவது கல்யாணம், காது குத்து என்று பத்திரிகை வைத்தாலோ, வளைகாப்பு, பிறந்தநாள் என, அழைப்பு விடுத்தாலோ, அதை எப்படி தவிர்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
இருப்பினும், தவிர்க்க முடியாத சொந்தங்களின் விசேஷத்திற்கு போய் தான் தீர வேண்டியுள்ளது. அந்த மாதிரி போய் வரும் தினங்களில், இரவு, அவளது தலையணை கண்ணீரால் நனைந்து விடும்.
முதலில் சின்ன வயசுதானே என்று கவலைப்படாமல் இருந்தவர்கள், மற்றவர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று நினைத்து, மருக ஆரம்பித்தனர்.
பரிகாரமாக யார் எதைச் சொன்னாலும், அதை செய்ய ஆரம்பித்தனர். ஆனால், பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
இனி, கடவுளையோ, கை வைத்தியத்தையோ நம்பி பயனில்லை என்று முடிவுக்கு வந்து, டாக்டரிடம், 'செக் - அப்'புக்கு போன போது தான், 'ரிப்போர்ட்'டை பார்த்த டாக்டர், ஒரு பெரிய குண்டை துாக்கி போட்டார்.
'சாரி, சுஜிதா... உங்க கர்ப்பப்பையில ஒரு கட்டி இருக்கு. இதனால, 'பீரியட்ஸ் டைம்'லே ரொம்ப வலி இருந்திருக்குமே... எப்படி கவனிக்காம விட்டீங்க?'
'சாதாரணமா எல்லா பொண்ணுக்கும் வர்ற வலிதான்னு நினைச்சுகிட்டு, அலட்சியமா இருந்துட்டேன்...'
'உங்க அலட்சியம் தான், இன்னைக்கு இந்த நிலையில கொண்டு வந்து விட்டிருக்கு. ஆரம்பத்திலயே கவனிச்சிருந்தா, கட்டியை மட்டும் ஆபரேஷன் பண்ணி எடுத்திருக்கலாம். கட்டி, இப்ப கர்ப்பப்பை சுவத்தோட நல்லா ஒட்டிக்கிட்டு இருக்கு.
'அத ஆபரேஷன் பண்றப்ப, கண்டிப்பா கர்ப்பப்பைக்கு பாதிப்பு வரும். அதனால, உங்களால ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது. ஆனா, இந்த கட்டியை ஆபரேஷன் பண்ணாம இருந்தா, நாளடைவில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பிருக்கு. அதனால, எவ்வளவு சீக்கிரம் ஆபரேஷன் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்றது உங்களுக்கு நல்லது...' என்றார், டாக்டர்.
'அப்ப எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லையா, டாக்டர்... நான் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாதா... அய்யோ, குழந்தையை பற்றி எவ்வளவு கனவு கண்டிருப்பேன்...' என்று, அழுது விட்டாள்.
டாக்டரிடம் போய் வந்த ஒரு மாதத்திலேயே, சுஜிதாவுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டு, டாக்டர்களின் அறிவுரைபடி, ஆபரேஷன் செய்ய வேண்டியதாகி விட்டது. ஆபரேஷன் முடிந்து, நல்லபடியாக வீடு திரும்பி விட்டாள். உடல் நன்கு தேறியது. ஆனால், மனது தான் நோய்வாய்பட்டு விட்டது.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டது போல், ஒரு சூன்யம் தன்னை சூழ்ந்து கொண்டதாக உணர்ந்தாள், சுஜிதா.
இரவு, ரமேஷ் துாங்கிக் கொண்டிருக்கும்போது, எழுந்து உட்கார்ந்து அழுவாள்.
ரமேஷ், மென்மையாக அவளது தோளை அழுத்தி சமாதானப்படுத்துவான்.
'இத பாரு, சுஜி... இப்ப என்ன நடந்துருச்சுன்னு, இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே... நாட்டுல குழந்தை குட்டி இல்லாத தம்பதியர் எல்லாம் செத்தா போயிட்டாங்க... எல்லாரும் உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தைன்னு சந்தோஷமா வாழப் பழகலை. அந்த மாதிரி நீயும் மனசை மாத்திக்கோம்மா...
'இங்க பாரு, நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம். நம் வயித்துல பொறந்தா மட்டும் தான் குழந்தையா... இன்னிக்கு குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதியர், வாடகை தாய் மூலம் குழந்தை பெத்துக்கலையா. அந்த மாதிரி வாடகை தாய் பெற்ற குழந்தையா நினைச்சு வளர்க்கலாம். என்ன சொல்றே...' என்று தலையை வருடியபடி அணைத்து, ஆறுதல் சொன்னான்.
'அது எப்படிங்க, யாரோ பெற்ற குழந்தையை, நம் குழந்தையா வளர்க்க முடியும். என்ன தான் பாராட்டி, சீராட்டி வளர்த்தாலும், மனசுக்குள்ளே அது நம்ம ரத்தத்துல உருவானது இல்லே என்ற எண்ணம் வந்துகிட்டேதானே இருக்கும். அது ஒரு சின்ன தப்பு பண்ணினாலும், நாம பெத்த குழந்தையா இருந்தா இப்படி இருக்குமா...
'யார் பெற்ற குழந்தையோ அவங்க அப்பா - அம்மாவோட புத்தி அப்படியே இருக்குன்னு நினைக்க தோணும். அப்படி நம்மை அறியாமல் வர்ற நினைப்பை எப்படி மாத்த முடியும்...
'என்ன தான் பாசத்தை கொட்டி வளர்த்தாலும், அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க, நம் குழந்தை மனசை கலைச்சிட்டா, அது நாளைக்கு நம்மகிட்ட வந்து ஒட்டாம போயிடுமே... அதுக்கு, நாம இப்படியே வாழ பழகிக்கலாம்...' என்று, தத்து எடுப்பதால் வரும் பிரச்னையை கூறினாள்.
'எல்லாத்துக்கும் மனசு தான் காரணம், சுஜி... இப்படியே நினைச்சு நினைச்சு, வெறிச்சு பார்த்துகிட்டிருந்தா ஆகப்போவது ஒண்ணுமில்ல. எவ்வளவு நாள் உன் முகத்தை நானும், என் முகத்தை நீயும் பார்த்துக்கிட்டு இருக்க முடியும். புதுசா பிறந்த குழந்தையை தத்து எடுத்துக்கலாம்.
'அப்புறம் நாம, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு வேற இடத்துக்கு போயி, அங்கே நம் குழந்தையாகவே வளர்க்கலாம். நாம வளர்க்கிற விதத்துல வளர்த்தா, அது நம் குழந்தையா மாறிடும்...' என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும், சுஜிதாவின் மனசுக்கு, குழந்தை தத்து எடுத்து வளர்ப்பதில் இஷ்டமில்லை.
தினமும், குழந்தையை தத்து எடுப்பதை பற்றி, ரமேஷ் கேட்பதும், ஏதாவது காரணம் சொல்லி, சுஜிதா மறுப்பதும், அவர்கள் வீட்டில் நடக்கும் தொடர்கதையாகவே மாறி விட்டது. இன்றும் வழக்கம் போல, ரமேஷ் கேட்க, மவுனத்தையே பதிலாக தந்தாள், சுஜிதா.
ஆபரேஷன் சமயத்தில், துணைக்கு வந்திருந்தார், அவளது அம்மா. சுஜிதாவின் உடல் நன்கு தேறி, வீட்டு வேலைகளை அவளே பார்த்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், ஊருக்கு கிளம்பி விட்டாள்.
வீட்டில் தனியே அடைந்து கிடந்தால் மன பாரம் அதிகமாகும் என கருதி, குளித்து, உடை மாற்றி அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு கிளம்பினாள், சுஜிதா.
இவள் கோவிலுக்கு போன நேரம், பூஜை நடந்து கொண்டிருந்தது. வளையல் அலங்காரத்தில் அம்மன் ஜொலித்து கொண்டிருந்தாள்.
ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று, கண் மூடி அம்மனை வேண்டினர்.
'அம்மா... என் மனம் அமைதியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்ப நான் என்ன பண்ணுவது என தெரியலை... நீயே எனக்கு ஏதாவது வழிகாட்டு...' என்று மனமுருக வேண்டி, வீட்டிற்கு திரும்பினாள், சுஜிதா.
வீட்டிற்கு அருகே வரும்போது, பக்கத்து வீட்டில் ஒரே கூட்டம். என்னதான் நடக்கிறது என்று, வேடிக்கை பார்க்கும் ஆவலில் அங்கு சென்ற அவளுக்கு அதிர்ச்சி.
அங்கு, ஒரு பூனை, இரண்டு நாய் குட்டிகளுக்கு பால் கொடுத்து கொண்டிருந்தது. கண் திறக்காத நாய் குட்டிகள், பூனையிடம் முட்டி முட்டி பால் குடித்துக் கொண்டிருக்க, கண்களை மூடி அதை ரசித்துக் கொண்டிருந்தது, பூனை.
'என்ன இது அதிசயம்... பொதுவாக, நாய்க்கும் - பூனைக்கும் ஆகவே ஆகாது. இங்கு என்னவென்றால், நாய் குட்டிக்கு, பூனை பால் கொடுக்கிறது. என்ன ஆச்சு அந்த குட்டிகளோட தாய்க்கு, அது வந்தா இந்த பூனையை கொன்று விடுமே...' என்று யோசனையுடன், அதையே பார்த்துக் கொண்டிருந்தாள், சுஜிதா.
''இதுகளோட தாயை, முனிசிபாலிடி நாய் வண்டி வந்து பிடிச்சிட்டு போயிட்டு... பாவம், இந்த குட்டிக பிறந்து மூணு நாள் தான் ஆகுது. இன்னும் கண்ணு கூட திறக்கல... தாய் இல்லாம பாலுக்கு இதுக பரிதவிச்சுகிட்டிருந்துச்சு... மிருகங்களுக்கு அஞ்சறிவு தான். ஆனா, அதுகளுக்கு இருக்கிற இரக்கத்தை பாரேன்.
''நாய் குட்டிக பரிதவிக்கிறதை பார்த்த, பூனை, அதுகளை பக்கத்திலே போட்டு பால் கொடுக்குது. அதுகளுக்கு இருக்கிற மனசு கூட நமக்கு இல்லையே... நாம எல்லாம் ஆறறிவுள்ள மனுஷ ஜாதியா இருந்தாலும், எதுக்கெடுத்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரச்னை பண்ணிகிட்டு இருக்கோம்,'' என்று, யாரோ ஒருவர், மற்றொருவரிடம் சொல்ல, ஏதோ புரிவது போல தோன்றியது, சுஜிதாவுக்கு.
பூனை, நாய் குட்டிகளுக்கு பால் கொடுத்ததை நினைத்தபடியே வீட்டிற்கு வந்து, 'டிவி'யை, 'ஆன்' செய்தவள், 'டிஸ்கவரி' சேனலில், யானைகள் பற்றிய, 'டாக்குமென்டரி' ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.
யானைகள் கூட்டமாக போய், கிளைகளை ஒடித்து சாப்பிடுவது, தண்ணீரை பார்த்தவுடன், அதில் இறங்கி கும்மாளமிட்டபடி குளிப்பது...
தும்பிக்கையில் தண்ணீரை எடுத்து, 'ஷவர்' மாதிரி, தன் உடம்பு முழுவதும் பீய்ச்சி அடிப்பதும் என, ஒவ்வொன்றையும் பார்க்க ஆசையாக இருந்தது.
யானைகளை பற்றி பின்னணியில் ஒருவர் சொன்ன செய்தி, சட்டென்று, சுஜிதாவை தாக்கியது.
'யானைகள் கூட்டமாக வாழக்கூடியவை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் குட்டி போட்ட தாய் யானை இறந்து விட்டால், அந்த குட்டியை, குட்டி ஈன்ற மற்ற பெண் யானை பால் கொடுத்து வளர்க்கும். அதனால், அம்மா இறந்து விட்டாலும், குட்டிகள் பாதிக்கப் படுவதில்லை...' என்பதை கேட்டவுடன், தான் இன்று கோவிலுக்கு போனதற்கான பலன் கிடைத்து விட்டதாக நினைத்தாள், சுஜிதா.
'ஒரு தாய் செத்து போயிட்டா, அத அம்போன்னு விடாம, தன்னோட குட்டியா நினைச்சு வளர்க்கிற மனப்பான்மை ஒரு யானைக்கு இருக்கு. தன்னை விரோதியா நினைக்கிற நாய் குட்டிகளுக்கு, ஒரு பூனை தாய் மனதோடு பால் கொடுக்குது.
'அஞ்சறிவு இருக்கிற யானைக்கோ அல்லது பூனைக்கோ இருக்கிற புத்தி, ஏன் தனக்கு இல்லாமல் போய் விட்டது... ஒரு குழந்தையை தத்து எடுக்க மனசு வரலியே... நம் மனசு எவ்வளவு கீழ்த்தரமா இருக்கு...' என்றபடியே ஒரு முடிவுக்கு வந்தாள்.
சந்தோஷத்துடன், ''ஏங்க... எப்ப கஸ்துாரிபா ஹோமுக்கு போகலாம்... ஆண் ஒண்ணு, பெண் ஒண்ணுன்னு இரண்டு குழந்தையை எடுத்து வளர்க்கலாம்ங்க,'' என்றாள், சுஜிதா.
அவளது மாற்றத்திற்கு காரணம் புரியாவிட்டாலும், மனம் மாறி விட்டதே என்ற மகிழ்ச்சியுடன், கஸ்துாரிபா இல்லம் நோக்கி கிளம்பினான், ரமேஷ்.

அழகர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
30-ஆக-202003:28:00 IST Report Abuse
naadodi உணர்வு பூர்வமான கதைபூர்ண திருப்தியுடன் படிக்க முடிந்தது..
Rate this:
Cancel
29-ஆக-202012:23:31 IST Report Abuse
நல்ல தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதை படித்த திருப்தி
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-ஆக-202017:14:36 IST Report Abuse
Girija இந்தியாவிற்கே உள்ள சாபக்கேடு குழந்தையின்மை என்றால் அவர்களை குத்தி குதறுவது, கெட்ட எண்ணத்துடன் அந்த பெண்ணை நோக்குவது அவள் காதுப்படவே புருஷனை ஏளனம் செய்வது ஆண்கள் என்றால் பெண்கள் வீட்டிற்குள்ளும் சரி வெளியில் உள்ள பெண்களும் சரி , அந்த பெண்ணை வார்த்தையால் நோகடிப்பர் அதுவும் அந்த பெண் வேலைக்கு செல்லாமல் கூட்டு குடும்பத்தில் இருந்தால் இன்னும் நரகம் தான் . இங்க நிக்காதே, அங்க நிக்காதே , கையில் குழந்தையிருந்தால் வெளி ஆண்களுடன் சிறிது பேசலாம் அதுவே குழந்தை பிறக்காதவள் என்றால் அதற்க்கு அவர்கள் இட்டுக்கட்டும் கதை இருக்கிறதே அந்நியன் படத்தில் வரும் தணடனை கொதிக்கும் சமையல் போல். இதனால் கணவன் மனைவி இருவரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதைத்தவிர வீடு தேடி வந்து பிள்ளை பெற வைத்தியம் சொல்லும் கிழவர்கள் கிழவிகள் திடீர் வைத்தியர் கூட்டம் வந்து போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X